பூர்வாங்க அரசகரும மொழிகள் நாள் மற்றும் வாரத்தினை இலங்கை கொண்டாடுகின்றது

“மொழியின் வித்தியாசத்தின் விழுமியத்தினைப் புரிந்துகொள்கின்ற மேலும் நாட்டிலுள்ள அனைத்து ஆண்கள் மற்றும் பெண்களின் இனத்துவக் கலாசாரப் பல்வகைமை பற்றிக் கூருணர்வு கொண்ட பெருமிதமும் விவேகமும் மிக்க ஒரு தேசத்தினைக் கட்டியெழுப்புவோம்”

ஜூலை மாதம் 01 ஆம் திகதியினை இலங்கையின் அரசகரும மொழிகள் தினமாகவும் அந்த மாதத்தின் 01 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரையான வாரத்தினை இலங்கையின் அரசகரும மொழிகள் வாரமாகவும் இலங்கை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. இதன் பூர்வாங்க வைபவம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கௌரவ அமைச்சர் மனோ கணேசனின் அழைப்பின் பேரில் மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் 2019 ஜூலை 1 ஆம் திகதி நடைபெற்றது. இலங்கை மற்றும் மாலைதீவிற்கான உயர் ஸ்தானிகர் கௌரவ டேவிட் மக்கினன் வைபவத்தில் சிறப்பு அதிதியாகக் கலந்து சிறப்பித்ததுடன் வடக்கு மாகாண ஆளுநர் டாக்டர் சுரேன் ராகவன், அமைச்சின் கண்காணிப்புப் பாராளுமன்ற உறுப்பினாரான கௌரவ வி. வேலுக்குமார், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால, அமைச்சின் செயலாளரான திருமதி. மஹாநாம, கொழும்பு மற்றும் பிராந்தியத்தினைச் சேர்ந்த சிரேஸ்ட அரசாங்க அதிகாரிகள், கல்வியியலாளர்கள், சமயத் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஏனையோர் நிகழ்வில் பங்குபற்றினர்.

நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட அரசகரும மொழிகள் தினத்தின் போது விசேட தொனிப்பொருட்களில் அமைந்த தொடரான நிகழ்வுகளும் செயற்பாடுகளும் நடத்தப்பட்டன. இவை இலக்குக் குழுக்களின் மத்தியில் அரசகரும மொழிக் கொள்கையின் முக்கியத்துவம் மற்றும் மொழிகளின் விழுமியம் தொடர்பான விழிப்புணர்வினையும் புரிதலையும் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தன.

ஜூலை 01 – அரசகரும மொழிகள் நாள் – பூர்வாங்க வைபவம் – “மொழியுடன் வளர்தல் – மனங்களை வெல்லுதல்”

ஜூலை 02 – அரசகரும மொழிகள் நாள் – பாடசாலை நாள் – “இருமொழியியலை மேம்படுத்தல் – நாட்டைப் பாதுகாத்தல்”

ஜூலை 03 – அரசகரும மொழிகள் – பொதுமக்கள் நாள் – “மொழியே ஒளி”

ஜூலை 04 – அரசகரும மொழிகள் – இளைஞர் நாள் – “மொழியின் மலர்ச்சி”

கௌரவ அமைச்சர் மனோ கணேசனின் அழைப்பின் பேரில் இலங்கைப் பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையின் கீழ் கொழும்பு 7 இல் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் ஜூலை 05 ஆம் திகதி நடைபெற்ற இறுதி நாள் நிகழ்வுகளுடன் அரசகரும மொழிகள் வாரம் நிறைவுக்கு வந்தது.