தமிழ்/ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களுக்கு அரசகரும மொழிகள் திணைக்களம் ஐந்து நாள் பயிற்சிக்களம் ஒன்றை நடத்தியது

இலங்கையில் மொழிபெயர்ப்புச் சேவைகளை வலுப்படுத்த NLEAP உதவுகின்றது

தமிழ்/ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களுக்கான ஐந்து நாள் பயிற்சிக்களம் ஒன்றினை அரசகரும மொழிகள் திணைக்களம் (DOL) அண்மையில் NLEAP உடன் இணைந்து நடத்தியது. DOLஇன் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இப் பயிற்சிக்களத்தில் 11 பெண்களும் 08 ஆண்களும் உள்ளடங்கலாக யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 19 அரசாங்க மொழிபெயர்ப்பாளர்கள் பங்குபற்றி தமது தமிழ்/ஆங்கில மொழிபெயர்ப்புத் திறன்களை மேம்படுத்திக்கொண்டனர். சட்டத்தரணி என். சிவகுமாரன், முன்னாள் மொழிபெயர்ப்பாளர் துரைராஜா ஆகியோர் பயிற்சி வகுப்புகளை நடத்தினார்கள். மொழிபெயர்ப்பின் பல்வேறு துறைகளையும் உள்ளடக்கிய இப் பயிற்சியில் நிர்வாக ஆவணங்களின் மொழிபெயர்ப்பு, இருமொழித் திருத்தத் திறன்கள், சட்ட ஆவணங்களின் மொழிபெயர்ப்பு ஆகியவற்றில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

தமிழ்/ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களுக்கான பயிற்சியானது, DOL ஒத்துழைப்புடன் NLEAP  மூலம் அரசாங்கத்திற்கு வழங்கப்படும் தொழில்நுட்ப உதவிகளின் ஒரு பகுதியாகும். வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பாலின உணர்திறன் கொண்ட இருமொழிச் சேவைகளை வழங்குவதற்கு அவசியமான மொழிபெயர்ப்பு நிபுணத்துவத்தைப் பொது அமைப்புகள் பெற்றுக்கொள்வதில் இத்தகைய பயிற்சித் திட்டங்கள் முக்கியமான பங்களிப்பைச் செய்கின்றன.

ஐந்து நாள் பயிற்சிக்களத்தை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்த 19 மொழிபெயர்ப்பாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தமது திறன்களை மேலும் மேம்படுத்துவதற்கு இந்த வாய்ப்பை வழங்கிய DOLக்கும் NLEAPக்கும் அவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டார்கள்.

திறமையுள்ள மற்றும் தொழில் ரீதியான மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்குவதன் மூலம் இலங்கையில் மொழிபெயர்ப்புச் சேவைகளை வலுப்படுத்தும் பொருட்டு, இது போன்ற ஆற்றல் அபிவிருத்தித் திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்வதற்காக எதிர்காலத்திலும் DOL உடன் நெருக்கமாக இணைந்து செயற்பட NLEAP உத்தேசித்துள்ளது.