தொழில்சார் கற்றல் சமூகத்தின் அங்குரார்ப்பணக் கூட்டம்

அரசகரும மொழிகளின் மொழிபெயர்ப்பு தொடர்பான பிரச்சினைகளை ஆராய்வதற்கான ஒரு மன்றம்

இலங்கையின் பல்மொழித் தன்மை, பாலின அடிப்டையிலான தடைகள் என்பன சம்பந்தப்பட்ட குறிப்பான சவால்களில் கவனம் செலுத்துவதற்காக கல்விமான்கள், மாணவர்கள் மற்றும் தொழிற்றுறையினர் உள்ளடங்கிய ஒரு மன்றத்தை தொழில்சார் கற்றல் சமூகம் (PLC) ஏற்படுத்தியுள்ளது. NLEAP ஏற்பாட்டில் தொழில்சார் கற்றல் சமூகம் நடத்திய முதலாவது கூட்டத்தில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவையும் களனி, யாழ்ப்பாண, சபரகமுவ மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் கல்விமான்கள் பங்குபற்றினர். கொவிட்-19 காரணமாக இணையவழியில் (Virtually) நடத்தப்பட்ட இக் கூட்டம், அரசகரும மொழிகளின் மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்பு தொடர்பான பிரச்சினைகள் பற்றிய ஓர் இயல்பான கலந்துரையாடலுடன் ஆரம்பமானது.

மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்பு தொடர்பான கல்வித் திட்டங்களை மேற்கொள்வதற்கு பல்கலைக்கழகங்கள் கொண்டுள்ள ஆற்றல்களை மேம்படுத்துவதற்காக, தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் (NLEAP) இலங்கைப் பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் நெருக்கமாக இணைந்து செயற்படுகின்றது. PLC கூட்டத்தில் பங்குபற்றிய நான்கு பல்கலைக்கழகங்களும் மொழிபெயர்ப்புத் துறையிலான கலைமாணிப் பட்டப்படிப்பை வழங்குகின்றன. பல்கலைக்கழகங்களுக்கான உதவிகளின் ஒரு பகுதியாகவே PLCயின் ஆரம்பக் கூட்டத்திற்கு NLEAP வசதிகளைச் செய்துகொடுத்தது.

PLC குழுவின் 2021ஆம் ஆண்டிற்கான உத்தியோகத்தர்களின் தேர்வு ஆரம்பக் கூட்டத்தில் இடம்பெற்ற ஒரு முக்கிய நிகழ்வாகும். தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்ட பேராசிரியர் மனோஜ் ஆரியரத்ன அங்கு பேசுகையில், PLCயின் யாப்பை வரைவதற்கு பேராசிரியர் லூயிஸ் அவர்களின் நிபுணத்துவ உதவியை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யும்படி NLEAPஐ கேட்டுக்கொண்டார். கல்விமான்கள் தத்தமது துறைகளில் எதிர்நோக்கும் சவால்களுக்கு முகங்கொடுக்கவும் கனேடிய சகாக்களின் நிபுணத்துவ உதவியுடன் பொருத்தமான தீர்வுகளைக் கூட்டாக இனங்காணவும் ஒரு சிறந்த தளமாக அமையும் என்பதை அவர் எடுத்துக்காட்டினார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார, இலங்கையில் அரசகரும மொழிகளின் சமத்துவத்தைக் கட்டியெழுப்ப கனேடிய அரசாங்கமும் கனேடிய மக்களும் வழங்குகின்ற உறுதியான ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். “வெவ்வேறு சமுகங்களைச் சேர்ந்த மக்களுக்குச் சேவைகளை வழங்க இலங்கை அரசாங்கத்திற்கு அவசியப்படும் பிரதான தேவைகளுள் பல்கலைக்கழகங்களினால் வழங்கப்படும் மொழிபெயர்ப்புப் பட்டப்படிப்பு திட்டங்களும் குறிப்பிடத்தக்கவை. இந்த நாட்டில் சிறந்த மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்பு சேவைகளைக் கட்டியெழுப்புவதில் ஆர்வம் கொண்ட, அனுபவம் வாய்ந்த கல்விமான்களை ஒன்றுசேர்ப்பதன் மூலம், தற்போதுள்ள பட்டப்படிப்புத் திட்டத்தின் பாடவிதானங்ளை மேம்படுத்துவதற்கான உரையாடல்களை மேற்கொள்வதற்கு ஒரு திறந்த அரங்கை உருவாக்க முடியும்” என்றும் அவர் கூறினார்.

PLC ஆண்டுக்கு இரு தடவைகள் கூடும். ஆரம்பக் கூட்டத்தில் பங்குபற்றிய சகல உறுப்பினர்களும் அடுத்த அமர்வினை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். மொழிபெயர்ப்புக் கல்வி தொடர்பான மன்றங்களில் தனியார் துறையினர், மொழிபெயர்ப்புப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் இறுதியாண்டு மாணவர்கள் ஆகியோரையும் சேர்த்துக்கொள்வது PLCயின் எதிர்கால முன்னுரிமைகளுள் ஒன்றாகும்.

தொழில்சார் கற்றல் சமூகத்தின் 2021ஆம் ஆண்டிற்கான உத்தியோகஸ்தர்கள்:

  • தவிசாளர்: பேராசிரியர் மனோஜ் ஆரியரத்ன (இலங்கையின் சபரகமுவ பல்கலைக்கழகம்)
  • உப தவிசாளர்: திருமதி குமுது கமகே (களனி பல்கலைக்கழகம்)
  • செயலாளர்: கலாநிதி கே. கண்ணதாஸ் (யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
  • உதவிச் செயலாளர்: திருமதி மதுகா ஹன்சனி (இலங்கையின் சபரகமுவ பல்கலைக்கழகம்)
  • தொகுப்பாசிரியர்: கலாநிதி கே. ஶ்ரீகருணாகரன் (இலங்கையின் கிழக்கு பல்கலைக்கழகம்)
  • இணைத் தொகுப்பாசிரியர்: திருமதி அனுராதா ஜயசிங்க (களனி பல்கலைக்கழகம்)