அரசகரும மொழிகள் பற்றிய வருடாந்த அறிக்கையிடல்: கனேடிய அனுபவத்தின் பகிர்வு

வருடாந்த அறிக்கையிடலுக்கான கனேடிய அணுகுமுறை​

கனடாவுக்கான அரசகரும மொழிகள் ஆணைக்குழு, நியூ பிரன்ஸ்விக் மாகாணத்திற்கான அரசகரும மொழிகள் ஆணைக்குழு, ஒன்டாரியோ மாகாணத்திற்கான பிரெஞ்சு மொழிச் சேவைகள் ஆணைக்குழு என்பன 2019-2020 ஆண்டுக்கான தத்தமது வருடாந்த அறிக்கைகளை சமீபத்தில் வெளியிட்டன.

அரசகரும மொழிகள் ஆணைக்குழு  – கனடா

கனடாவிற்கான அதிகாரப்பூர்வ மொழிகளின் ஆணையாளரின் ஆண்டு அறிக்கை

https://www.clo-ocol.gc.ca/sites/default/files/annual-report-2019-2020.pdf

கனடாவுக்கான அரசகரும மொழிகள் ஆணையாளரின் வருடாந்த அறிக்கைக்கான முகவுரை, 2019-2020 காலப்பகுதியில் அரசகரும மொழிகள் தொடர்பாக இடம்பெற்ற பிரதான நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, உடல்நல மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக COVID-19 தொற்றுப் பரவல் காலப்பகுதியில் அரசகரும மொழிகள் சட்டத்திற்கு (OLA) மதிப்பளிப்பதன் முக்கியத்துவத்தைப் பொதுச் சுகாதார அதிகாரிகளுக்கு நினைவூட்டுகின்றது. இரு மொழிகளைப் பயன்படுத்தும் வாய்ப்பை கனேடிய இளைஞர்களுக்கு வழங்குவதற்காக இரண்டு அரசகரும மொழிகளையும் போதிப்பதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்ற இந்த அறிக்கை, 4 தனித்தனி அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. அரசகரும மொழிகள் சட்டத்தின் 50ஆவது ஆண்டு நிறைவும் அதன் நவீனமாக்கலும் தொடர்பான நிகழ்வுகள் (அத்.1), கனேடிய சமுதாயத்தில் அரசகரும மொழிகள் (கல்வி மற்றும் சமூக ஆதரவு) (அத்.2), பொதுமக்களுக்கான அரசகரும மொழிச்  சேவைகள் மற்றும் சமஷ்டி நிறுவனங்களுக்குள் வேலை மொழி பற்றிய மதிப்பீடு (முறைப்பாடுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில்) (அத். 3), கடந்த 50 ஆண்டுகளை உள்ளடக்கும் விதத்தில் OLA செயற்பாடுகளை (முறைப்பாடுகள், வெளியீடுகள், கணக்காய்வு மற்றும் விசேட அறிக்கைகள், நீதிமன்ற இடையீடுகள், பாராளுமன்றத் தோற்றுதல்கள்) எடுத்துக்காட்டும் புள்ளிவிபர அட்டவணைகள் (அத்.4) என்பனவே அந்த அத்தியாயங்களாகும். அறிக்கையின் இறுதியில், அரசாங்கத்திற்கான பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

.

மதிப்பிற்கும் பாதுகாப்பிற்குமான ஒரு விடயம்: அரசகரும மொழிகள் தொடர்பான அவசர நிலைமைகளின் தாக்கம்

https://www.clo-ocol.gc.ca/sites/default/files/emergency-situations-official-languages.pdf

2020 ஒக்டோபரில்,  கனடாவுக்கான அரசகரும மொழிகள் ஆணையாளர் மதிப்பிற்கும் பாதுகாப்பிற்குமான ஒரு விடயம்: அரசகரும மொழிகள் தொடர்பான அவசர நிலைமைகளின் தாக்கம்  (A Matter of Respect and Safety: The Impact of Emergency Situations on Official Languages)  என்ற ஒரு விசேட அறிக்கையையும் வெளியிட்டார். 2010க்கும் 2020க்கும் இடையே இடம்பெற்ற அவசர நிலைமைகளின் (உதாரணமாக,கொவிட்-19 தொற்றுப் பரவல்) ஓர் ஆழமான பகுப்பாய்வின் விளைவே இந்த அறிக்கையாகும். கனேடிய அரசகரும மொழிகளின் அனுபவம் பற்றிய ஓர் கண்ணோட்டத்தை வழங்கும் இந்த அறிக்கை, நெருக்கடி மற்றும் அவசர வேளைகளில் கனேடிய மக்களுடனான தொடர்பாடல்களில் அரசகரும மொழிகள் தொடர்பான கடப்பாடுகளுக்கு அரசாங்கம் இணங்கியொழுகுவதை முன்னேற்ற சாத்தியமான தீர்வு வழிமுறைகளையும் அடையாளம் காட்டுகின்றது.

 

அரசகரும மொழிகள் ஆணைக்குழு  – நியூ பிரன்ஸ்விக்

https://officiallanguages.nb.ca/wp-content/uploads/2020/12/ANNUAL-REPORT-2019-2020-WEB.pdf

நியூ பிரன்ஸ்விக் மாகாணத்திற்கான அரசகரும மொழிகள் ஆணையாளரின் அறிக்கை மிகவும் பொதுசன-நட்புறவான ஓர் அணுகுமுறையைக் கடைப்பிடிக்கின்றது. அறிக்கையின் முகவுரை, நியூ பிரன்ஸ்விக் அரசகரும மொழிகள் சட்டத்தின் சுருக்கத்தை வழங்குவதோடு, அதன் பிரயோகச் செயற்பரப்பையும் எடுத்துக்கூறுகின்றது. ஆணையாளரின் சுருக்கமான செய்தியொன்றைத் தொடர்ந்து புதிய ஆணையாளரின் மிகவும் தனிப்பட்ட முறையிலான அறிமுகம், ஆணையாளர் அலுவலகத்தின் பணி மற்றும் பொறுப்புகள் என்பன தரப்பட்டுள்ளன.  இவற்றையடுத்து, கடந்தகால விசாரணைகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில், மறுசீமைக்கப்பட்ட 2002இன் அரசகரும மொழிகள் சட்டத்திற்கென உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்களின் கண்ணோட்டமும் குறித்துரைக்கப்பட்ட சில பரிந்துரைகளும் இடம்பெறுகின்றன. அரசகரும மொழிகள் சட்டத்தின் இணக்கப்பாடு என்று தலைப்பிடப்பட்டுள்ள அடுத்த பிரிவு, முறைப்பாடுகள் மற்றும் தீர்வு நடைமுறைகள் சம்பந்தப்பட்டதாகும். 2019 ஏப்பிரலுக்கும் 2020 மார்ச்சுக்கும் இடைப்பட்ட காலத்தில் கிடைக்கப்பெற்ற மற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்ட ஏற்றுக்கொள்ளத்தக்க முறைப்பாடுகளை பிரதேச ரீதியாகவும் சேவை வகை ரீதியாகவும் நிறுவன ரீதியாகவும் எடுத்துக்காட்டும் புள்ளிவிபர அட்டவணைகளை வழங்குகின்றது. இதனைத் தொடர்ந்து, குறித்துரைக்கப்பட்ட நிறுவனங்களின் முறைப்பாடுகள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விபரிப்புச் சுருக்கம் இடம்பெறுகின்றது.  சட்ட விடயங்கள் என்ற தலைப்பிலான பிரிவு பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கல்வித் துறையிலான சிறுபான்மை மொழியுரிமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு நீதிமன்ற வழக்கை விபரிக்கின்றது; பிரெஞ்சு மொழிச் சிறுபான்மைப் பாடசாலைகளுக்கு மாகாணக் கல்வி அமைப்பினால் போதியளவு மற்றும் சமமான நிதி வழங்குவதில்லை என்று குற்றஞ்சாட்டி பிரெஞ்சு மொழிப் பாடசலையின் சபையும் பெற்றோர் சங்கம் ஒன்றும் இந்த வழக்கை 2010இல் தாக்கல் செய்திருந்தன; இந்த வழக்கு மாகாண நீதிமன்றத்திலிருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கும், இறுதியாக உயர் நீதிமன்றத்திற்கும் சென்றது. உயர் நீதிமன்றம் பாடசாலைச் சபைக்குச் சாதகமான தீர்ப்பை 2019இல் வழங்கியது; உயர் நீதிமன்றத்தின் இத் தீர்ப்பு கனடாவில் இது போன்ற வழக்குகளில் நீதிக் கோட்பாட்டை வழங்கும். அறிக்கையின் இறுதிப் பிரிவு அரசரும மொழிகளின் பயன்பாட்டை மேம்படுத்துதல் பற்றியதாகும். குறிப்பாக. அரசகரும மொழிகள் சட்டத்தின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஊக்குவிப்பு வீடியோ தொடர்கள் ​​இரண்டினைத் தயாரித்து, ஒன்லைனில் பகிர்ந்துகொள்வது பற்றியும் அதனைத் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவது பற்றியும் எடுத்துக்கூறப்பட்டுள்ளது.

பிரெஞ்சு மொழிச் சேவைகள் ஆணைக்குழு – ஒன்டாரியோ

https://www.ombudsman.on.ca/Media/ombudsman/ombudsman/resources/Annual%20Reports/2019-2020FLS-AR-Final-EN.pdf

ஒன்டாரியோ மாகாணத்திற்கான பிரெஞ்சு மொழிச் சேவைகள் ஆணைக்குழுவின் ஆண்டறிக்கையும் மிகவும் பொதுசன-நட்புறவான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கின்றது. புதிய ஆணையாளரின் சுருக்கமான செய்தி ஒன்றுடன் ஆரம்பமாகும் இந்த அறிக்கை, அவரது தரிசனம், ஆலாட்சி அலுவலகத்திற்குள் பணியாற்றிய முதலாவது ஆணையாளர் என்ற முறையில் அவரது செயற்பாடுகள் என்பன பற்றிய சமர்ப்பணங்களையும் உள்ளடக்குகின்றது. (2019ஆம் ஆண்டு முதல் பிரெஞ்சு மொழிச் சேவைகள் ஆணையாளர் ஒன்டாரியோவின் ஆலாட்சி அதிகாரிக்கு அறிக்கையிடுகின்றார்). எமது பணி மற்றும் வழிமுறைகள் என்ற பிரிவில் ஆலாட்சி அதிகாரயின் பணிகள், பிரெஞ்சு மொழிச் சேவைகள் ஆணையாளரின் பணிகள் மற்றும் பொறுப்புகள், முறைப்பாடுகள் செயன்முறை, தீர்வு நடைமுறை, பொது நிறுவனங்கள் மற்றும் மக்கள் அமைப்புகளுடனான தீவிர அணுகுமுறை, பிரதான பங்காளிகளுடனான தொடர்பாடல்கள் மற்றும் அணுகல் செயற்பாடுகள் விபரிக்கப்பட்டுள்ளன.​  2019-2020 சிறப்பம்சங்கள் என்ற பிரிவு, கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை மற்றும் வகைகள், அதிகமாக முறைப்பாடு செய்யப்படும் நிறுவனங்கள், தொடர்பாடல்கள் மற்றும் அணுகல் செயற்பாடுகள்/நிகழ்வுகள்/பொறுப்பேற்கப்பட்ட கூட்டங்கள் சம்பந்தமான புள்ளிவிபரங்களை வழங்குகின்றது. 2019-2020 கண்ணோட்டம் என்ற பிரிவு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் சுருக்கத்தையும் அரசாங்கத் தொடர்பாடல்கள் துறை (கொவிட்-19, உள்ளூர் பொதுச் சுகாதாரப் பிரிவுகள், அவசர விழிப்பூட்டல்கள், போக்குவரத்துச் சைகைகள்) மற்றும் அரச சேவைகள் துறை நேரடித் தனிநபர் சேவைகள், சேர்விஸ் ஒன்டாரியோ, போக்குவரத்துத் துறை) ஆகியவற்றில் சம்பவங்களின் விபரிப்புகளையும் அரசாங்கத்திற்கான குறித்துரைக்கப்பட்ட பரிந்துரைகளையும் வழங்குகின்றது. இறுதியாக, பரிந்துரைகளின் பட்டியல், பணிக் குறிக்கோள்களின் அடிப்படையிலான சாதனை அறிக்கை, பிராங்கோ-ஒன்டியன் சமூகத்தினுடனான கூட்டங்களின் பட்டியல் என்பவற்றை உள்ளடக்கிய பின்னிணைப்பு ஒன்றைக் கொண்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட மூன்று ஆண்டறிக்கைகளும் ஒவ்வொரு செயற் பிரதேசத்தினதும் குறிப்பிட்ட நிலமைக்கேற்ப வித்தியாசமான உள்ளடக்கங்களைக் கொண்டிருந்தாலும், கையாளப்பட்ட அணுகுமுறையும் அறிக்கையிடல் முறையும் இலங்கையின் அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் ஆணையளிப்புகள் மற்றும் பணிகளுக்கு மிகவும் ஒத்தவை. குறிப்பாக, இலங்கையில் அமுலாக்கம் செய்யப்படும் அரசகரும மொழிகள் கொள்கையின் அந்தஸ்து பற்றிய அறிக்கையிடலில் பணிகள் மற்றும் ஆணையளிப்புகள் ஒரே மாதிரியானவை.

 

 

இலங்கை அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் பொறுப்புகள் மற்றும் பணிகளும் அரசகரும மொழிகள் பற்றிய வருடாந்த அறிக்கையிடலும்

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் பாராளுமன்றத்தினால் 1991 மார்ச் 29ஆம் திகதி இயற்றப்பட்ட 1991ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க அரசகரும மொழிகள் ஆணைக்குழுச் சட்டத்தின் மூலம் அரசகரும மொழிகள் ஆணைக்குழு (OLC) ஸ்தாபிக்கப்பட்டது.

அரசகரும மொழிகளின் உபயோகம் தொடர்பான கொள்கைக் கோட்பாடுகளைப் பரிந்துரைத்தல், அரசியல் யாப்பின் IV ஆம் அத்தியாயத்தில் அடங்கியுள்ள ஏற்பாடுகள் அனுசரிக்கப்படுவதைக் கண்காணித்து மேற்பார்வை செய்தல், அரசகரும மொழிகள் ஏற்றுக்கொள்ளப்படுவதை ஊக்குவித்தல், அவற்றின் அந்தஸ்து ஏற்றுக்கொள்ளப்படுதல்,  பேணப்படுதல் மற்றும் தொடரப்படுதல், சமத்துவம் மற்றும் பயன்படுத்தும் உரிமை, சுயமுயற்சியாகவும் கிடைக்கப்பெற்ற ஏதேனும் முறைப்பாடுகளுக்கான பதில் நடவடிக்கையாகவும் விசாரணைகளை நடத்துதல், இச் சட்டத்தின் மூலம் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாகத் தீர்வு நடவடிக்கைகளை எடுத்தல் என்பனவே OLCஇன் குறிக்கோள்களாகும். ஏற்புடைய ஏதேனும் மொழிகளின் அந்தஸ்தை அல்லது உபயோகத்தைப் பாதிக்கும் அல்லது பாதிக்கக்கூடிய ஏதேனும் பிரமாணங்கள், பணிப்புரைகள் அல்லது நிர்வாக நடைமுறைகளின் மீளாய்வை ஆரம்பித்தல், அவசியமானது அல்லது விரும்பத்தக்கது என்று கருதப்படும் பட்சத்தில் ஏற்புடைய மொழிகளின் அந்தஸ்து அல்லது உபயோகம் தொடர்பான அத்தகைய ஆய்வுகள் அல்லது கொள்கை அறிக்கைகளை வெளியிடுதல் அல்லது செயற்படுத்துதல், விரும்பத்தக்கதெனக் கருதப்படும் பட்சத்தில் ஏற்புடைய மொழியின்; அந்தஸ்து அல்லது உபயோகம் தொடர்பில், வெளியீடுகள் அல்லது வேறேதும் ஊடகச் சமர்ப்பணங்களுக்கு அனுசரணையளித்தல் அல்லது அவற்றை ஆரம்பித்தல் உட்பட, பொதுமக்களுக்கு அறிவூட்டும் செயற்பாடுகளைப் பொறுப்பேற்றல்.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்காக அரசகரும மொழிகளுக்குப் பொறுப்பான அமைச்சருக்கு வருடாந்த அறிக்கை சமர்ப்பிக்க ஆணைக்குழுவுக்கு இருக்கும் கடப்பாடு சட்டத்தின் 32ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசகரும  மொழிகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கைகள்

அரசகரும  மொழிகள் ஆணைக்குழு (OLC) அரசகரும  மொழிகளுக்குப் பொறுப்பான அமைச்சரின் ஊடாகப் பாராளுமன்றத்திற்கு வருடாந்த அறிக்கைகளைச் சமர்ப்பிக்கின்றது. செயற்றிறன் அறிக்கைகள் அல்லது செயற்பாட்டு அறிக்கைகளே இந்த அறிக்கைகளாகும். சகல அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களும் அவற்றை வழங்க வேண்டுமென அரசாங்கம் தேவைப்படுத்தியுள்ளது. OLC செயற்பாட்டு அறிக்கைக்கான ஒரு சமீபத்திய உதாரணம், முன்னாள் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் 2017ஆம் ஆண்டிற்கான செயற்பாட்டு அறிக்கையில் (பக்கங்கள் 49-61) காணப்படுகின்றது. அரசகரும மொழிகள் திணைக்களம் (DOL) தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிலையம் (NILET) ஆகியவற்றின் செயற்பாட்டு அறிக்கைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அமைச்சின் 2017ஆம் ஆண்டுச் செயற்பாட்டு அறிக்கைக்கான இணைப்பு:

https://www.parliament.lk/uploads/documents/paperspresented/performance-report-ministry-of-national-coexistence-dialogue-official-languages-2017.pdf

அரசகரும  மொழிகள் கொள்கையின் அமுலாக்கம் தொடர்பான விடயங்கள் அரசாங்கத்தின் அரசியல் யாப்புக் கடப்பாடுகளாக இருப்பதால், அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் மேலும் குறிப்பான கவனத்தைச் செலுத்தும் தனித்துவமான வருடாந்த அறிக்கையொன்று பொதுமக்களுக்கு வெளியிடுவதற்காக ஆணைக்குழுவினால் தயாரிக்கப்படுவதன் அவசியம் குறித்து, தற்போதய அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் அபிவிருத்தித் திட்டத்திற்கு அமைவாகவும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் ஒத்துழைப்புடனும், அரசகரும மொழிகள் ஆணைக்குழு அங்கத்தவர்கள் மற்றும் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. கல்வி, தனியார் கூட்டுத்தாபனங்கள், இலாப நோக்கமற்ற பொது அமைப்புகள் போன்ற துறைகள் உள்ளடங்கலாக இலங்கைச் சமுதாயத்திற்குள் நிலவும் ஒட்டுமொத்தச் சூழல் சம்பந்தமாக ஆணைக்குழுவின் கரிசனை/பகுப்பாய்வு ஒன்றும் வருடாந்த அறிக்கையில் சேர்த்துக்கொள்ளப்படலாம். 1991இன் அரசகரும மொழிகள் ஆணைக்குழுச் சட்டத்தின் 7ஆம் பிரிவில் (மேலே பார்க்கவும்) தெரிவிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் அதிகாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம், அரசகரும மொழிகளின் அந்தஸ்து மற்றும் உபயோகம் தொடர்பாக ஆணைக்குழுவினால் பொறுப்பேற்கப்பட்ட விடயப்பொருள் ஆய்வுகளின்/ அறிக்கைகளின் பெறுபேறுகளும் வருடாந்த அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக, அரசகரும  மொழிகள் கொள்கையின் அமுலாக்கம் தொடர்பில் முன்னேற்றங்கள் தேவைப்படும் துறைகள் பற்றி மத்திய அரசாங்கம், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைப்புகளின் பரிந்துரைகளைக் கொண்ட ஒரு பிரிவும் வருடாந்த அறிக்கையில் உள்ளடக்கப்படலாம்.

.

 

ஹிலெயர் லெமொயின்
மொழிக் கொள்கை ஆலோசகர்
NLEAP
2021 பெப்ரவரி