அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் பணிப்பங்கு

ருஹுணு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த இணையவழிக் கருத்தரங்கு (Webinar)

இலங்கையின் அரசகரும மொழிகள் கொள்கை தொடர்பாக ருஹுணு பல்கலைக்கழகம் நடத்திய இணையவழிக் கருத்தரங்கிற்கு (Webinar) அடித்தளமிட்டு, ஒருங்கிணைத்து, உதவிகளையும் வழங்க முடிந்தமை குறித்து தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் (NLEAP) பெருமகிழ்ச்சி அடைகின்றது. இக் கருத்தரங்கு, நுண்ணறிவான மற்றும் ஈடுபாடுமிக்க ஒரு செயலமர்வாக அமைந்தது. அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் (OLC) பணிப்பங்கு பற்றி உரைநிகழ்த்துவதற்காக OLC தலைவர் திரு. டீ. கலன்சூரிய (சட்டத்தரணி) அவர்களை ருஹுணு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் மாணவர் சங்கம் அழைத்திருந்தது. ருஹுணு, கொழும்பு, களனி மற்றும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 200க்கு மேற்பட்ட மாணவர்கள் கருத்தரங்கில் பங்குபற்றினர். ருஹுணு பல்கலைக்கழக சமூகவியல் திணைக்களத்தின் தலைவர் திரு. சுரஞ்ஜித் குணசேகர நிகழ்த்திய வரவேற்புரையைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியா சுஜீவ அமசேன நிகழ்த்திய சிறப்புரை பயன்மிக்கதாகவும் சிந்தனையைத் தூண்டுவதாகவும் அமைந்திருந்தது.

உபவேந்தர் தனது உரையில் சகல மருத்துவ மாணவர்களினதும் கவனத்திற்காக முன்வைத்த ஒரு கேள்வி, OLC தலைவரின் சொற்பொழிவுக்குக் களம் அமைத்துக்கொடுத்தது.. “மருத்துவ கவனிப்புக்காக வரும் ஒரு பிரஜை மருத்துவப் பராமரிப்பையும் சேவைகளையும் தனக்குப் புரியும் மொழியில் பெற்றுக்கொள்ள முடிவதை உறுதிப்படுத்துவது யாருடைய பொறுப்பு?” என்று உபவேந்தர் வினவினார். ஒவ்வொரு அரச சேவையாளரும் தனக்கு இரண்டு மொழிகள் தெரிந்திருப்பதை தனது தனிப் பொறுப்பாகக் கருதி உறுதிப்படுத்துவது அவசியம்  என்பதை சிந்தனையைத் தூண்டும் உதாரணங்கள் மூலம் அவர் எடுத்துக்காட்டினார்.

OLC தலைவர் இதனையடுத்துப் பேசுகையில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையும் அரசகரும மொழிகளாகக் குறித்துரைக்கும் இலங்கையின் சட்டக் கட்டமைப்பு பற்றிய விபரங்களைப் பகிர்ந்துகொண்டதுடன், இலங்கையின் அரசகரும மொழிகள் கொள்கை (OLP) பயனுறுதி மிக்கதாக அமுலாக்கப்படுவதை உறுதிப்படுத்த OLC ஆற்றும் பணிகள் பற்றியும் எடுத்துக்கூறினார். இலங்கையின் அரசகரும மொழிகள் கொள்கை அனுசரிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக சமீபத்தில் மேற்கொண்ட தலையீடுகள் தொடர்பாக திரு. கலன்சூரிய  எடுத்துக்காட்டிய உதாரணங்கள் சிந்தனையைத் தூண்டுபவையாக இருந்தன. திரு. கலன்சூரியவின் சொற்பொழிவைத் தொடர்ந்து கேள்வி-பதில் அமர்வு இடம்பெற்றது. பங்குபற்றிய மாணவர்கள் OLP பற்றிய தமது புரிந்துணர்வைத் தெளிவுபடுத்திக்கொள்ளவும் இந்த முக்கிய விடயத்தில் தமது அக்கறையை வலுப்படுத்தவும் இச் செயலமர்வு இடமளித்தது.

OLP பற்றிய கலந்துரையாடல்களை ஊக்குவிப்பதற்கு OLC உடனும் ஏனைய அரச நிறுவனங்களுடனும் இணைந்துசெயற்படுவது, ஓர் இருதரப்புச் செயற்றிட்டம் என்ற முறையில் NLEAP மேற்கொள்ளும் பணியின் ஒரு முக்கிய அம்சமாகும். கனேடிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் இச் செயற்றிட்டம், இலங்கையின் அரசகரும மொழிகளான சிங்களம், தமிழ் ஆகியவற்றிற்கிடையே சமத்துவத்தை ஊக்குவிப்பதற்குத் தன்னை அர்ப்பணித்துள்ளது. அரசகரும மொழிகளுக்கிடையிலான சமத்துவம் பற்றிய விழிப்புணர்வையும் ஆதரவையும் கட்டியெழுப்புவதற்காக, NLEAP இந்த நாட்டின் எதிர்காலமான இளைய தலைமுறையுடன் இணைந்து தொடர்ச்சியாகப் பணியாற்றும்.