மொழி உரிமைகள், ஆண், பெண் சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான பரீட்சார்த்த ஆராய்ச்சி

இலங்கையின் சட்டம் மற்றும் கொள்கை சார் பரப்பெல்லையில் குறிப்பிடத்தக்களவு தாக்கங்களை ஏற்படுத்துகின்ற மனித உரிமைகள் கற்கைக்கான மத்திய நிலையத்தின் (CSHR) ஆராய்ச்சி கருத்திட்டத்துக்கு தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் (NLEAP) ஒத்துழைப்பு வழங்குகின்றது.

மனித உரிமைகள் கற்கைக்கான மத்திய நிலையமானது (CSHR) தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் ஒத்துழைப்புடன் மொழி உரிமைகள், ஆண், பெண் சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் (GEWE) தொடர்பாக மிகவும் முக்கியமானதொரு ஆராய்ச்சியை நடாத்தவுள்ளது. மனித உரிமைகள் கற்கைக்கான மத்திய நிலையம் குறித்த ஆராய்ச்சி தொடர்பான ஆரம்பக்கட்ட கூட்டத்தை 2021 ஜுலை 08 ஆம் திகதி நடாத்தியது. இலங்கையில் ஆண், பெண் சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டலில் மொழி உரிமைக் கொள்கைகள் மற்றும் வேலைத் திட்டங்கள் ஏற்படுத்தும் தாக்கங்களை கண்டறிவதே குறித்த ஆராய்ச்சியின் எதிர்பார்ப்பாகும். கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப் பிரிவான மனித உரிமைகள் கற்கைக்கான மத்திய நிலையம் மனித உரிமைகள் கற்கை மற்றும் ஆராய்ச்சியில் 30 வருடங்களுக்கு மேல் தனிச்சிறப்புடன் திகழ்கின்றது.

போரசிரியர் வஸந்த செனவிரத்ன (பணிப்பாளர், மனித உரிமைகள் கற்கைக்கான மத்திய நிலையம் மற்றும் ஆராய்ச்சிக் குழுவின் தலைமை ஆய்வாளர்) அவர்கள் தனது வரவேற்புரையில், ”தேசிமொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டக் குழு மற்றும் மனித உரிமைகள் கற்கைக்கான மத்திய நிலையத்துக்கு இடையில் குறித்த ஆராய்ச்சியின் தேவைப்பாடுகள் மற்றும் செயன்முறையின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக ஒரு புரிதலை ஏற்படுத்திக்கொள்வதற்கு இக்கூட்டம் வழிவகுத்ததென குறிப்பிட்டார்”. அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், ”மொழி உரிமை வேலைத்திட்டங்கள் மற்றும் கொள்கைகளை அமுல்படுத்தும் போது ஆண், பெண் சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டலை முக்கிய பகுதியாக இணைத்துக் கொள்வதற்கான முக்கிய மைற்கல்லாக இவ்வாராய்ச்சி அமையுமென குறிப்பிட்டார்”.   

பேராசிரியர் என். செல்வக்குமரன் (தலைவர் – சட்ட பீடம் (இலங்கை தகவல் தொழிநுட்ப நிறுவனம்), முன்னாள் அரசகரும மொழி ஆணையாளர்) அவர்கள் அரசகரும மொழிக் கொள்கையின் பிரத்தியேகமான சூழமைவு தொர்பாக தனது பெறுமதியான கருத்துக்களை பகிர்ந்துகொண்டதோடு ஆராய்ச்சியில் நான்கு முக்கிய பகுதிகள் கருத்திற்கொள்ளப்பட வேண்டுமென பரிந்துரைத்தார். அவ்வகையில், கிராமிய மற்றும் நகரப் பிரதேசங்களுக்கிடையில் அரச சேவையில் காணப்படுகின்ற வேறுபாட்டினையும், மேலும் மத்திய அரசு மற்றும் பிராந்திய அரச நிறுவனங்களின் சேவை வழங்கலில் காணப்படுகின்ற வேறுபாடுகளையும் இவ்வாராய்ச்சி வெளிக்கொணர வேண்டுமென வலியுறுத்தினார். மேலும் இவ்வாராய்ச்சியில் பெண்கள் வேலைவாய்ப்பின் போது அதிகம் கவனம் செலுத்துகின்ற துறைகளிலும் அவர்கள் அதிகளவு தங்கியிருக்கின்ற சில துறைகளிலும் கவனம் செலுத்துவது சிறந்ததென அவர் பரிந்துரைத்தார். அத்துடன், குறிப்பாக பெண்கள் தலைமையிலான வீட்டுத்துறையினர் எளிதில் பாதிப்புறுவதனால் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் விதத்தில் ஆண், பெண் பாலின வேறுபாட்டை கருத்திற்கொள்ளாது மொழிக் கொள்கைகளை பயன்படுத்துகின்ற  கிராமப் புறங்களில் நுண் நிதிக் கடன்களை வழங்குகின்ற வங்கி அல்லாத துறைகளில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தினார்.

கலாநிதி எஸ்.கே கன்னதாஸ் (மொழிபெயர்ப்புக் கற்கைகளின் தலைவர், சிரேஷ்ட விரிவுரையாளர், ஆங்கில மொழிக் கற்பித்தல் பிரிவு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) அவர்கள் தனது உரையில் மொழி என்பது அனைத்து பெண்கள் மற்றும் ஆண்களின் அடிப்படை உரிமை என இலங்கை அங்கீகரிக்கின்றது என குறிப்பிட்டார். எனினும், ”இலங்கையில் பெண்களை போன்று ஆண்களும் தமது மொழி உரிமைகளை பெற்றுக்கொள்ளும் விடயத்தில் வித்தியாசமான அனுபவங்களை எதிர்கொண்டுள்ளதோடு அவர்கள் இன ரீதியான பாகுபாட்டினாலும், மேலும் சமூக கலாச்சார மற்றும் பொருளாதார அந்தஸ்த்துக்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என மேலும் குறிப்பிட்டார். மொழி உரிமைகளை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களில் ஆண், பெண் பாலின வேறுபாட்டினை முக்கியப்படுத்துவதில் போதிய கவனம் செலுத்துவதற்கான கவனமும் விளக்கமும் இல்லாமையினால் ஆண், பெண் பாலின வேறுபாட்டினை கருத்திற்கொள்ளாது தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் பெறுபேறாக மறுபுறத்தில் குறித்த வேலைத் திட்டங்கள் மற்றும் சேவை வழங்கலில் சிறிது சிறிதாக ஆண், பெண் பாலின வேறுபாடு புறக்கணிக்கப்படுவதாக கலாநிதி எஸ்.கே கன்னதாஸ் அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.

கலாநிதி ரோஸ் விஜேசேகர (சிரேஷ்ட விரிவுரையாளர், சட்ட பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி ஆலோசகர் – பாலினம்) அவர்கள் மொழி உரிமைகள், ஆண், பெண் பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகள் தொடர்பான சூழமைவு பற்றி தனது அவதானங்களை எடுத்துரைக்கும் போது மிகவும் சூட்சுமமான வழிகளில் பெண்கள் மொழி ரீதியாக பாரபட்சத்துக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர்களின் ஆற்றல்கள் மலினபடுத்தப்படுவதாகவும் விளக்கினார். அத்துடன் ஆராய்ச்சிக் குழுவானது ”மொழி ரீதியாக பேதப்படுத்தும் அம்சங்களில் அவதானம் செலுத்துவது போன்று சட்டங்கள், கொள்கைகள், ஒழுங்குவிதிகள், வழிகாட்டல்கள், பணிப்புரைகள் மற்றும் பூகோள தொடர்பாடலில் பயன்படுத்துகின்ற அத்தகைய பேதப்படுத்தல் மொழியின் விளைவுகள் தொடர்பாக விழிப்புடன் இருக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

கருத்திட்ட முகாமையாளர் அம்மணி மதுகா பெரேரே அவர்கள் ஆராய்ச்சிக் கருத்திட்ட விபரங்களை விபரித்ததோடு, பின்னர் கலாநிதி நிஷாரா பெர்னாந்து (சிரேஷ்ட விரிவுரையாளர், சமூகவியல் திணைக்களம், கலைப் பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி முறை தொடர்பான ஆராய்ச்சி நிபுணர்) அவர்கள் ஆராய்ச்சி முறையில் பின்பற்றவுள்ள முக்கிய கருதுகோள்களை கோடிட்டுக் காட்டியதுடன், ஆராய்ச்சிக்குழு களத்தில் குறிப்பாக கொவிட் பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளால் எதிர்பார்க்கப்படுகின்ற சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை கருத்திற்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டார். மேலும், திரு. திருநாவுக்கரசு (பிரதிப் பணிப்பாளர் – NLEAP) அவர்கள் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகள், ஆராய்ச்சி நோக்கர்கள் மற்றும் ஆராய்ச்சியின் பயன்பாடு என்பவற்றை கோடிட்டுக்காட்டினார்.

இத்தகைய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தாலும், ”இவ்வாராய்ச்சிக் கருத்திட்டமானது மொழி ஆராய்ச்சியில் தற்போதுள்ள வரையறைகளை கடந்து புதிய திசையை நோக்கி பயணிப்பதற்கான உந்து சகத்தியாக அமையுமென்றும் அது மொழி உரிமைகள், ஆண், பெண் சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டலுக்கான வாய்ப்புக்களை மேலும் விரிவுபடுத்துமெனவும் கலாநிதி நிஷாந்த சம்பத் புன்சிஹேவா (பீடாதிபதி, சட்டப் பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம்) அவர்கள் எதிர்வுகூறினார். அத்துடன், இத்தனிகரற்ற ஆராய்ச்சிக் கருத்திட்டத்துக்கு தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டமும் கனடா அரசாங்கமும் தொடர்ந்தேர்ச்சியான ஒத்துழைப்பு வழங்குமென திரு. டொன் ப்ரௌனெல் (கருத்திட்டப் பணிப்பாளர் – NLEAP) மற்றும் திரு. விபுல தஹநாயக (அபிவிருத்தி உத்தியோகத்தர் – கனடா உயர்ஸ்தானிகர்) ஆகிய இருவரும் மனித உரிமைகள் கற்கைக்கான மத்திய நிலையத்துக்கு உத்தரவாதமளித்தனர். மேலும், குறித்த கலந்துரையாடலில் கலாநிதி. ரமனி ஜயசுந்தர (பணிப்பாளர், நீதி மற்றும் பாலின வேலைத்திட்டங்கள், ஆசியா மன்றம்), அம்மணி. சாமா ராஜகருண (பாலின துறைசார் நிபுணர் – NLEAP) மற்றும் பல்கலைக்கழகப் பிரதிநிதிகள், பங்காளி நிறுவனங்கள் மற்றும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.