மொழிபெயர்ப்பு தொடர்பாக இணையவழி பயிற்சி வேலைத்திட்டங்களை நடாத்துவதற்கு வழிவகுத்தல்.

ஒட்டாவா பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படுகின்ற மொழிபெயர்ப்புப் போதனாவியல் வேலைத்திட்டப் பயிற்சியின் (TTPP) இரண்டாவது கட்டம் இணையவழியில் தொடர்ந்து இடம்பெறுகின்றது. 

ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்புப் பீடத்தினால் நடாத்தப்படுகின்ற மொழிபெயர்ப்பு போதனாவியல் வேலைத்திட்டப் பயிற்சியின் இரண்டாவது கட்டம் செப்டம்பர் 10 ஆம் திகதி துவங்கியது. இலங்கையில் மொழிபெயர்ப்பில் கலைமானி பட்டத்தை வழங்குகின்ற களனிய, யாழ்ப்பாணம், சப்ரகமுவை மற்றும் கிழக்கு ஆகிய நான்கு கூட்டு பல்கலைக்கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பதினைந்து (15) கல்வியியலாளர்கள் இவ்விணையவழி தொடர்களில் பங்கேற்பதோடு அது 2021 டிசம்பர் 17 ஆம் திகதி வரை இரு வாரங்களுக்கு ஒரு முறை இடம்பெறும்.  

இரு மாதங்களுக்கு மேலாக இணையவழியில் ”மொழிபெயர்ப்பு தொடர்பாக இணையவழி மொடியூலினை விருத்திசெய்தல்” எனும் தலைப்பில் நடாத்தப்படும் இக்கற்கைநெறியானது பல்கலைக்கழக மட்டத்தில் தொழில் ரீதியான மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்பினை போதிப்பதில் 45 வருடங்களுக்கு மேற்பட்ட துறைபோன அனுபவமுள்ள ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்புப் பீடத்தின் இணைப் பேராசிரியர்  பேராசிரியர் மல்கம் வில்லியம்ஸ் (PhD, CT) அவர்களால் நெறிப்படுத்தப்படும். போதனாவியல் வேலைத்திட்டத்தின் இக்கட்டத்தில் இணையவழியில் மொழிபெயர்ப்பு பயிற்சி வேலைத்திட்டங்களை நடாத்துவதற்கு தேவையான புலமை மற்றும் திறமைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுவதோடு, அதனூடாக அதிகமானோருக்கு மொழிபெயர்ப்பு பயிற்சி வேலைத்திட்டங்களில் பங்கேற்று பயடைய வாய்ப்புக்கள் கிட்டும். இப்பயிற்சியானது பல்கலைக்கழக ஆணைக்குழுவுடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படுவதோடு மொழிபெயர்ப்புப் பட்டப்படிப்பு வேலைத்திட்டங்களுக்கான போதனாவியல் முறைமையை மேம்படுத்துவதற்காக தெரிவுசெய்யப்பட்ட அரச பல்கலைக்கழகங்களுக்கு தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தினால் வழங்கப்படுகின்ற தொழிநுட்ப உதவியின் ஒரு பகுதியே மொழிபெயர்ப்பு போதனாவியல் வேலைத்திட்டப் பயிற்சியாகும்.