தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (NILET) இரண்டாம் மொழி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பயிற்சியை தொடர்ந்து நடாத்துகின்றது.

அனைத்து மாகாணங்களிலிருந்து இன்னும் அதிகமான சிங்களம்/ தமிழ் இரண்டாம் மொழி ஆசிரியர் குழுக்கள் ஆசிரியர் பயிற்சிநெறியில் இணைந்துகொண்டனர். 

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சிங்களம் மற்றும் தமிழ் இரண்டாம் மொழி ஆசிரியர்களுக்கான ஐந்து நாள் பயிற்சி வேலைத்திட்டத்தின் இரண்டாவது தொடரை செம்டம்பர் மாதம் ஆரம்பித்தது. சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளை போதிக்கின்ற இரண்டாம் மொழி ஆசிரியர்களின் செயற்றிறனை மேம்படுத்துவதற்கான இப்பயிற்சியில் இலங்கையின் அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் மேலும் ஐந்து ஆசிரியர் குழுக்கள் இணைந்துகொண்டனர். மேலும் சில தொகுதி இரண்டாம் மொழி ஆசிரியர்களுக்கான பயிற்சியை ஒக்டோபர் மாதத்தில் நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

இணையவழி முறையில் நடாத்தப்பட்ட இப்பியிற்சியில் இரண்டாம் மொழிப் பயிற்சி முறைமை, இம்முறைமைகளை இரண்டாம் மொழி அறிவில் சிறந்த முறையில் பிரயோகிப்பதற்கான செயற்பாடுகள், மொழி அறிவைக் கற்றுக்கொள்ளும் முறைமை மற்றும் இரண்டாம் மொழிப் பயன்பாடு மற்றும் செயற்பாட்டுடன் தொடர்புடைய கற்றல் மற்றும் பிரயோக அம்சங்கள் போன்ற பல்வேறு விடயங்கள் கருத்திற்கொள்ளப்பட்டன.

இற்றைவரை 278 சிங்களம் மற்றும் தமிழ் இரண்டாம் மொழி ஆசிரியர்கள் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணையவழி ஆசிரியர் பயிற்சி வேலைத்திட்டங்களில் இணைந்து பயனடைந்துள்ளனர். மேலும், அதிகமான அரச உத்தியோகத்தர்கள் இரண்டாம் மொழியில் பயிற்சி பெறுகின்றனர் என்பதற்கு தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இத்தகைய பயிற்சிகள் சிறந்த எடுத்துக்காட்டாகும். சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் பண்புத்தரமிக்க பயிற்சிகளை வழங்குவதற்கு தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு பொறுப்பாணை வழங்கப்பட்டுள்ளதோடு அந்நிறுவனம் எமது நாட்டின் இரு மொழி ஆற்றலை வளர்ப்பதில் மிகமுக்கிய வகிபாகத்தை நிறைவேற்றுகின்றது. இப்பயிற்சிகள் வதிவிட பயிற்சிகளாகவே நடாத்தப்பட வேண்டுமென்ற எண்ணக்கருவுடனேயே விருத்தி செய்யப்பட்டன. என்றாலும், கொவிட்-19 பெருந்தொற்று கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் இணையவழியில் இப்பயிற்சிகளை நடாத்துவதற்கு தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொண்டுள்ள இம்முயற்சியானது அதன் பணிப்பாணையை நிறைவேற்றுவதில் கொண்டுள்ள அக்கறைக்கு சிறந்த சான்றாகும். எனவே, வெவ்வேறு சமூகங்களை சேர்ந்த பிரஜைகளுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் விதத்தில் அரசின் செயற்றிறனை மேம்படுத்துவதற்காக தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆற்றும் வகிபாகத்துக்கு தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் ஒத்துழைப்பதோடு மிகவும் நெருக்கமாக அதன் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்கும்.