பால்நிலைக்குத் துலங்கல் காண்பிக்கும் மொழிபெயர்ப்பாளர்கள் தலைமுறையொன்றினைக் கட்டியெழுப்புதல்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்புத் திணைக்களத்துக்கு தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் (NLEAP) குறிக்கோள் விஜயம்.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் அம்மணி. வீனா வர்மா (செயற்றிட்டப் பணிப்பாளர், மனித உரிமைகள், பாலினம் மற்றும் நல்லாளுகை ஆலோசகர்,  அலீனியா நிறுவனம்)  மற்றும் திரு. ஹிலயர் லெமோய்ன் (மொழிக்கொள்கை ஆலோசகர்/ NLEAP விஷேட ஆலோசகர்/ ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் மொழிக்கொள்கை மற்றும் சர்வதேச உறவுகள், அரச கரும மொழிகள் மற்றும் இருமொழிக்கல்வி நிறுவனம்) ஆகிய இருவருடனும் இணைந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்புத் திணைக்களத்துக்கு குறிக்கோள் விஜயமொன்றினை மேற்கொண்டது. இக்குறிக்கோள் விஜயத்தின் போது இடம்பெற்ற கூட்டத்தில் கலாநிதி. கன்னதாஸ் (சிரேஷ்ட விரிவுரையாளர் மற்றும் பீடாதிபதி – மொழிபெயர்ப்புக் கற்கைகள் திணைக்களம்) அவர்களும் பட்ட நிகழ்ச்சித்திட்டத்தில் தற்போது வளவாளர்களாக கடமையாற்றுகின்ற பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் பட்டதாரிகளும் இணைந்துகொண்டனர்.  இலங்கையில் மொழிபெயர்ப்பில் சிறப்புக் கலைமானிப் பட்டம் வழங்கும் நான்கு பல்கலைக்கழகங்களுள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் ஒன்றாகும். இது நான்கு வருடங்களைக் கொண்ட கற்கைநெறியாகும். அவ்வாறு மொழிபெயர்ப்பில் சிறப்புக் கலைமானிப் பட்டம் களனிய, சப்ரகமுவை மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படுகின்றது. குறித்த குறிக்கோள் விஜயத்தின் போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்புக் கற்கைநெறிகளில் எய்துள்ள மைற்கற்கள் இனங்காணப்பட்டதுன் அவற்றை மேலும் விருத்திசெய்வதற்கான எதிர்காலத் திட்டங்களும் கலந்துரையாடப்பட்டன. மேலும், இந்நிகழ்வில் உரையாற்றிய அம்மணி. வீனா வர்மா அவர்கள் ”தேர்ச்சிமிக்க மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்குவதில் பல்கலைக்கழகங்களின் வகிபாகம் இன்றியமையாதது” எனத் தெரிவித்தார்.

திரு. ஹிலயர் லெமோய்ன் மற்றும் அம்மணி. வர்மா ஆகிய இருவரும் மொழிபெயர்ப்புப் பட்டக் கலைத்திட்டத்தில் “பாலினம் மற்றும் மொழி” எனும் தலைப்பில் மூன்று மதிப்பெண் அலகுகளாக பாலினக் கல்வியை இணைத்துள்ளமைக்கு தமது பாராட்டுக்களைத் தெரிவித்தனர். அத்துடன், ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்புப் பீடத்தினால் நடத்தப்பட்ட மொழிபெயர்ப்புப் போதனாவியல் வேலைத்திட்டம் மிகவும் பயனுள்ளது என்றும் அது மொழிபெயர்ப்பு தொடர்பாக சிறந்த அறிவு மற்றும் புலமையைப் பெற வாய்ப்பாக அமைந்திருந்தது என்றும் கலாநிதி கன்னதாஸ் புகழ்ந்தார். மேலும், இக்குறிக்கோள் விஜயத்தில் ஒரு வருடகால உரைபெயர்ப்பு டிப்ளோமா, நான்கு பல்கலைக்கழகங்களிலும் மொழிபெயர்ப்புப் பட்டப்படிப்புக்காக தொழிற் பயிற்சி நிகழ்த்திட்டமொன்றை தரப்படுத்துதல், சிங்களம் தமிழ்/ மொழிபெயர்ப்பாளர்களின் தேவை மற்றும் ஏனைய பல்கலைக்கழகங்களுடன் கருத்துப் பரிமாற்றல் நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துதல் போன்ற எதிர்காலத் திட்டங்களும் கருத்திற்கொள்ளப்பட்டன.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் உதவியுடன் குறித்த நான்கு பல்கலைக்கழகங்களுக்கு வழிகாட்டல்களை வழங்கவும் தற்போதைய பாடத்திட்டத்தை திருத்தி அதனை விருத்திசெய்வதற்கும் தேவையான தொழிநுட்ப உதிவியினை வழங்குகின்றது.