மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டங்களில் அரச கரும மொழிக்கொள்கையின் வினைத்திறன்மிக்க அமுல்படுத்தலுக்காக பலமானதொரு சிவில் சமூகக் கட்டமைப்பினை நிறுதல்.

தேசிய மொழிகள் நிதியப் பங்காளி நிறுவனத்தின் களவிஜயம்| அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையம் (SLCDF) | காலி மாவட்டம்

இரம்மியமானதொரு மாலைப் பொழுதில் தேசிய மொழிகள் நிதியத்தின் பங்காளி நிறுவனமான அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையம் காலி மாவட்டத்தில் அவற்றின் செயற்றிட்டத்தை அமுல்படுத்துவதற்கு பொறுப்பாக செயற்படுகின்ற அணியை சந்திப்பதற்கு தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்ட அணிக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்துகொடுத்தது. அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையத்தினால் அடைந்துள்ள முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்துடன் அம்மணி. வீனா வர்மா (செயற்றிட்டப் பணிப்பாளர், மனித உரிமைகள், பாலினம் மற்றும் நல்லாளுகை ஆலோசகர்,  அலீனியா நிறுவனம்)  இணைந்து கொண்டார். மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டங்களில் அரச கரும மொழிக்கொள்கையின் வினைத்திறன்மிக்க அமுல்படுத்தலுக்காக பலமானதொரு சிவில் சமூகக் கட்டமைப்பினை நிறுவும் நோக்கில் தேசிய மொழிகள் நிதியத்தின் பங்காளி நிறுவனமான அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையம் கண்டி, மொனராகலை, காலி, மாத்தறை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் செயற்படுகின்றது. அத்துடன் பல்மொழி, பல்லின, பல்மத மற்றும் பல்லின சமூகக் குழுக்களில் சமூக ஒருங்கிசைவு மற்றும் சகவாழ்வினைக் கட்டியெழுப்புவதில் மொழி உரிமைகள் ஊக்குவிப்பு மற்றும் இரண்டாம் மொழிக் கற்றல் மிகவும் முக்கியமான வகிபாகங்களை ஆற்றுவதாக  அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையம் கருதுகின்றது.

  காலி மாவட்டத்தின் யக்கலமுல்லை மற்றும் நாகொட பிரதேச செயலகங்களில் அமுல்படுத்தப்பட்ட அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையத்தின் இருமொழி செயற்றிட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான முன்னளிப்பு காலி மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் கூட்டுச்சங்கத்தினால் யக்கலமுல்லை ப்ரஜா சக்தி சங்வர்தன பதனமவில் நடைபெற்றது. குறித்த செயற்றிட்டத்துக்கு உதவுகின்ற மாவட்ட உத்தியோகத்தர்கள், மொழிப் பயிற்சி வகுப்பக்களால் பயனடைகின்ற இளைஞர், யுவதிகள், பெண்கள் மற்றும் அவர்களின் பெற்றோரும் குறித்த நிகழ்வில் பங்கேற்றனர். அங்கு அம்மணி. ப்ரியலதா கலன்சூரிய (காலி மாவட்ட கூட்டுச்சங்கங்களின் இணைப்பாளர்) அவர்களால் முன்வைக்கப்பட்ட முன்னேற்ற அறிக்கையும் அம்மணி. யமுனா (அரச சார்பற்ற நிறுவனத்தின் இணைப்பாளர்) அவர்களால் வழங்கப்பட்ட கருத்துரைகளும் கொவிட்-19 நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையத்தினால் மாவட்டத்தில் அமுல்படுத்தியுள்ள நடவடிக்கைகளின் ஆழ அகலம் தொடர்பில் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டு செயற்றிட்ட அணிக்கு தெளிவானதொரு பார்வையை பெற்றுக்கொள்ள முடிந்தது.

அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையம் அரசாங்க உத்தியோகத்தர்களையும் அவ்வாறே குறிப்பிடத்தக்களவு பெண்கள் மற்றும் இளைஞர், யுவதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் அமைப்புக்களையும் இலக்காகக்கொண்டு செயற்படுகின்றது. அவ்வகையில்,  அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையம் அரச கரும மொழிகள் கொள்கையை ஊக்குவிப்பதற்காக காலி மாவட்ட அரச சார்பற்ற நிறுவனக் கூட்டுச்சங்கங்களினூடாக அரச உத்தியோகத்தர்கள், சகவாழ்வு சமூகங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் அறிவு மற்றும் திறன்களை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. மேலும், தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தின் ஒத்துழைப்புடன் பிரதேசத்திலுள்ள சகவாழ்வு சமூகங்கள், சிவில் சமூக அமைப்புக்களின் தலைவர்கள், இளைஞர்கள், யுவதிகள், பெண்கள் மற்றும் பிள்ளைகளின் சிங்களம் மற்றும் தமிழ் மொழி ஆற்றலை முன்னேற்றுவதற்காக இரண்டாம் மொழிக் கற்றல் வகுப்புக்களையும் நடத்தியுள்ளது.

கூட்டுநிறுவனங்களின் தலைமைத்தும் மற்றும் பயனாளிகளுக்கு மத்தியில் பெண்களின் பலமான பிரதிநிதித்துவத்தைக் காணக்கூடியதாக இருந்ததுடன் இளைஞர்களின் செயலார்வமிக்க ஈடுபாட்டையும் மறுக்க முடியாது. அத்துடன், சிங்கள இனப் பெண்கள் மற்றும் இளவயதினர் இரண்டாம் மொழியைக் கற்கும் போது பாடநூல்கள் மற்றும் இலக்கண நூல்களில் மாத்திரம் தங்கியிராது பாடல்கள் போன்ற கலாச்சார நூல்களையும் துணையாக் கொள்வதை தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்ட அணியினர் உன்னிப்பாக அவதானித்தனர். இதற்கு வலுசேர்க்கும் விதத்தில் கொட்டாவகமை எனும் பிரதேசத்தின் தபாலதிபராகக் கடமையாற்றும் ஒரு யுவதி தான் கற்ற தமிழ் மொழியைப் பயன்படுத்தி தனது சேவைக்குட்பட்ட பிரதேசங்களில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களுக்கு எவ்வாறு சிறந்த சேவையை வழங்க முடியுமென தனது அநுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். “இப்போது தமிழ் மொழியில் கதைக்கும் ஒருவர் ஏதேனுமொரு கேள்வியைக் கேட்டால் எனக்கு அதனை விளங்க முடியுமென்பது மாத்திரமல்ல தமிழ்க் கடிதங்களிலுள்ள முகவரியை வாசித்து அதனை உரிய முறையில் விநியோகிக்கவும் முடியும்” என்று தெரிவித்தார்.

இளவயது ஆசிரியையான மற்றொரு பயனாளி இப்பிரதேசத்திலுள்ள பாடசாலையில் சிங்கள மொழியில் கல்வி போதிக்கப்படுவதால் தான் வாழும் பிரதேசத்திற்கு அருகிலுள்ள தோட்டங்களில் வாழும் தமிழ் பிள்ளைகளுக்கு  அவர்கள் விரும்பும் மொழியில் கல்வி கற்க வாய்ப்பில்லை என்றார். இப்பிள்ளைகள் மிகவும் சிறப்பாக சிங்கள மொழியைப் படித்தாலும் அவர்கள் தமது தாய்மொழியில் கதைக்கும் ஆற்றலை இழப்பார்களோ என்ற அச்சம் நிலவுகின்றது. இது அச்சமூகத்தின் கலாச்சார அடையாளத்தினை பாதுகாப்பதற்கு அச்சுறுத்தலாக இருக்குமென குறித்த ஆசிரியை ஆதங்கப்படுகின்றார். அவ்வகையில், தேசிய மொழிகள் நிதியத்தினூடாக  அடைந்துள்ள முன்னேற்றமானது தமது தாய் மொழியில் கற்கும் பிள்ளைகளுக்கான முதற்படியாக இருக்குமென அந்த ஆசிரியை நம்புகிறாள். எனவே, இத்தகைய வள இடைவெளிகளை இனங்காண்பது தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தினால் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனத்தின் தேசிய மொழிகள் பிரிவுக்கு ஒத்துழைப்பதற்கான மற்றொரு வழிமுறையாகும்.

அம்மணி. வீனா வர்மா அவர்கள் சமூகப் பங்கேற்பு மற்றும் ஈடுபாடு தொடர்பாக கருத்துத்தெரிவிக்கும் போது “ கொவிட் நெருக்கடிகளை  எதிர்கொள்ள நீங்கள் கடைப்பிடித்துள்ள புத்தாக்க செயற்பாடுகள் உங்களின் மீட்சிக்கான சான்றாகும்” என்றார். மேலும்,  இரண்டாம் மொழியைக் கற்பதற்கான வகுப்புக்கள், மொழி உரிமைகள் தொடர்பான பயிற்சி மற்றும் மொழிச் சமூகங்களினூடாக எதிர்காலத்தில் இன்னும் சாதிப்பதற்கான நோக்கு போன்ற முன்னேற்றங்கள் எமக்கு மகிழ்ச்சியளிக்கின்றது என்றார். அத்துடன், கூட்டுச்சங்கங்களின் அங்கத்தவர்கள்  இப்பிரதேசத்தில் இவ்வாறான நடவடிக்கையை அமுல்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையத்துக்கு தமது ஆழமான நன்றிகளைத் தெரிவித்தனர். மேலும், அவர்கள் மொழி உரிமைகள் ஊக்குவிப்பு மற்றும் இரண்டாம் மொழிக் கற்றலினூடாக சமூக இசைவு மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துதுவற்காக தமது சமூகத்தில் மேற்கொண்ட முதலீட்டுக்காக தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் மற்றும் அலீனியா நிறுவனத்தின் அங்கத்துவர்களுக்கும் அவ்வாறே கனடா அரசாங்கத்துக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.