மொழிகளினூடாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல்

தேசிய மொழிகள் நிதியத்திலிருந்து உதவி பெறும் நிறுவனமான ஆறுதல் நிறுவனம் வடக்கு மாகாணத்தில் மொழி உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் மொழிக் கற்றலை மேம்படுத்துவதற்கு நடைமுறைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையிடுகின்றது.

“மொழிகள் மிகவும் முக்கியமானவை”. மொழிகள்  எமது கருத்துக்களை அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்ள உதவுகின்றன. அந்த வகையில், தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கும் பல்லினத்தன்மையை கௌரவிப்பதை ஊக்குவிப்பதற்கும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தினால் (NLEAP) நடைமுறைப்படுத்துகின்ற கருத்திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்ட அணி அம்மணி. வீனா வர்மா (செயற்றிட்டப் பணிப்பாளர், மனித உரிமைகள், பாலினம் மற்றும் நல்லாளுகை ஆலோசகர்,  அலீனியா நிறுவனம்)  மற்றும் திரு. ஹிலயர் லெமொய்ன் (மொழிக் கொள்கை ஆலோசகர் – NLEAP) ஆகியோருடன் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆறுதல் அலுவலகத்துக்கு சென்ற போது நிறுவனத்தின் தலைவர் திரு. எஸ். திவகலால அவர்கள் இக்கருத்திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அரச கரும மொழிகள் கொள்கையின் வினைத்திறன்மிக்க அமுல்படுத்தலில் அதிக ஆர்வம் காட்டுகின்ற தேசிய மொழிகள் நிதியத்திடமிருந்து நிதியுதவி பெறுகின்ற ஆறுதல் நிறுவனம் மொழி உரிமைகள் தொடர்பாக சமூக விழிப்புணர்வினைக் கட்டியெழுப்பவும் இரண்டாம் மொழிக் கற்றலை ஊக்குவிக்கவும் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு செட்டிக்குளம் மற்றும் வவுனியா தெற்கு ஆகிய பிரதேச செயலகங்களில் அதன் பணிகளை சிறப்பாக நிறைவேற்றுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலமாக நிலைத்துநிற்கும் சிவில் சமூக அமைப்புக்களுள் ஒன்றான ஆறுதல் அமைப்பு மொழி உரிமைகளை ஊக்குவிப்பதற்காக சகவாழ்வு சமூகங்கள், இளைஞர் கழகங்கள், பெண்களுக்கான கிராமிய அபிவிருத்தி சமூகம் போன்ற கிராமிய சிவில் சமூக அமைப்புக்களின் ஆற்றலைக் கட்டமைப்பதில் கவனம் செலுத்துகின்றது. ஆறுதல் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்படுகின்ற ஆற்றலைக் கட்டமைத்தல் செயலமர்வுகளில் கருத்திற்கொள்ளும் மிகப் பிரதான தொனிப்பொருள்கள் மொழி உரிமைகளின் முக்கியத்துவம், இலங்கையின் அரச கரும மொழிக் கொள்கை மற்றும் பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகள் என்பனவாகும்.

மொழி உரிமைகள் தொடர்பாக கிராமப்புற மக்களின் பங்கேற்பினை ஊக்குவித்து அவர்களின் ஆதரவினை மேம்படுத்துவதற்காக ஆறுதல் அமைப்பினால் தயாரிக்கப்படுகின்ற செயல் திட்டத்தின் மிகவும் முக்கியமானதொரு அம்சம் யாதெனில் மொழி உரிமைகள் மீறப்படுவதை அவதானிக்கவும் அது தொடர்பாக அறிக்கைகளை சமர்ப்பிக்கவும் சமூக மையக் கொத்தணிகளை உருவாக்குவதாகும். அவ்வகையில் 4 மொழி உரிமைக் கொத்தணிகள் நிறுவப்பட்டுள்ளதோடு குறித்த கொத்தணிகளில் பங்கேற்போருக்கு மொழி உரிமைகள் பற்றி அறிவூட்டுவதற்கென ஒரு மன்றம் உருவாக்கப்பட்டிருப்பதுடன் மொழி உரிமை மீறல்களை உன்னிப்பாக அவதானிக்குமாறு அவர்களை வேண்டிக்கொள்வதோடு அவர்களுக்கு அத்தகைய மீறல்களை அறிக்கையிடுவதற்காக மாவட்ட மட்டத்திலுள்ள பொறிமுறைகள் தொடர்பாகவும் எடுத்துரைக்கப்படுகின்றது. எனவே, அத்தகைய வன்முறைகளை அறிக்கையிடுவது தொடர்பாக அரச கரும மொழிகள் ஆணைக்குழு உத்தியோகத்தர்கள் நல்கிய ஒத்துழைப்பு பற்றி திரு. திவகலால அவர்கள் சிறப்பித்துக்கூறினார். எனவே, மொழி உரிமை மீறல்களை இனங்கண்டு தேவையான தீர்வுகளை காண்பதற்கு குறித்த கொத்தணிகள் எவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென வழிப்படுத்தியுள்ளமைக்கு தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்ட அணி அதன் பாராட்டுக்களைத் தெரிவித்தது. குறித்த மொழிக் கொத்தணிகளின் கட்டமைப்பினைத் திட்டமிட்டு அவற்றுக்கான யாப்புக்களைத் தயாரித்து அவற்றை நிரந்தரமாக்குவதற்கான பொறிமுறைகள் கலந்துரையாடப்பட்டன.

நாட்டு மக்கள் அரச கரும மொழிகளில் கதைக்கும் ஆற்றலை அதிகரிப்பது ஆறுதல் அமைப்பின் செயற்றிட்டத்தின் மற்றுமொரு முக்கிய அம்சமாகும். ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் இளைஞர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் உள்ளடங்கலாக 50 பேருக்கு மொழிக் கற்றல் வகுப்புக்கள் (4 சிங்களம் மற்றும் 4 தமிழ்) நடத்தப்பட்டன. இவ்வகுப்புக்களினூடாக ஒட்டுமொத்தமாக 400 பேர் பயனடைவார்கள். அவ்வகுப்புக்களுக்கான பாடத்திட்டம் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து விருத்திசெய்யப்பட்டது.

கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கள நிலவரங்களை மதிப்பிடுவதற்காக தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் கள விஜயங்களை மேற்கொண்டு அங்கு வருகை தந்தமைக்காக ஆறுதல் அணி அதன் நன்றிகளை தெரிவித்தது. அத்துடன், திரு. எஸ். திவகலால அவர்கள் பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் அதன் உத்தியோகத்தர்களினால் கிடைத்த ஒத்துழைப்புக்காக தனது நன்றிகளைப் பகிர்ந்துகொண்டார். ஆறுதல் அமைப்பினால் ஒழுங்குசெய்த மொழி உரிமைகள் தொடர்பான செயலமர்வுகள் மற்றும் மொழிக் கற்றல் வகுப்புக்களின் பயனாளிகளும் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுக் கூட்டங்களில் பங்கேற்ற உத்தியோகத்தர்களும் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதுடன் தேசிய மொழிகள் நிதியத்தினூடாக உதவிசெய்த கனேடிய அரசாங்கத்துக்கும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்துக்கும் தமது மனமார்ந்த நன்றிகளைப் பகிர்ந்துகொண்டனர்.