தேசிய மொழிகள் நிதியத்தின் வெற்றிகள் | கிரிசாலிஸ் (Chrysalis) | மொழிக்கான உரிமை

இரு மொழி சேவை வழங்கலை வலுவூட்டும் விதத்தில் தேசிய மொழிக் கொள்கையை பயனுறுதியுடன் அமுல்படுத்துதல்.

சிலோன் தேயிலை உலகிலே மிகவும்  பிரபல்யமாகவும், இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும்  மிகவும் முக்கியமான தொழிற்துறையாக இருந்தாலும் இத்தொழிற்துறையின் முதுகெழும்பாக கருதப்படும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்னுமும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர். தேசிய மொழிகள் நிதியத்தின் பங்காளி நிறுவனமான கிரிஸாலிஸ் பெருந்தோட்டங்களில் வாழ்கின்ற, தொழில் புரிகின்ற நலிவடைந்த சமூகங்களின்,  விசேடமாக பெண்கள் மற்றும் இளைஞர், யுவதிகளின் மொழி உரிமைகளை மேம்படுத்துவதற்காக நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, வலப்பனை மற்றும் கொத்மலை பிரதேச செயலக பிரிவுகளில் தனது பணிகளை செவ்வனே நிறைவேற்றுகின்றது. அந்த வகையில், கிரிஸாலிஸ் நிறுவனம் அதன்  ”மொழிக்கான உரிமை செயற்றிட்டத்தின்” மூலம் தெரிவுசெய்யப்பட்ட செயற்றிட்டப் பிரதேசங்களில் வாழ்கின்ற நலிவடைந்த சமூகங்கள் தமக்குத் தேவையான அரச சேவைகளை தாம் தெரிவுசெய்யும் மொழியில் பெற்றுக்கொள்ளும் விதத்தில் சேவை வழங்குநர்களுக்கு தமது சேவைகளை இரு மொழிகளிலும் வழங்குவதற்கு தேவையான வசதிகளை நல்கி அரச கரும மொழிகள் கொள்கையின் வினைத்திறன் மிகு அமுல்படுத்தலை உறுதிப்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கின்றது. இந்த அணுகுமுறையை வெற்றிகரமாக நடைமுறைக்கு கொண்டுவரும் வகையில் கிரிஸாலிஸ் நிறுவனம் ஆரம்பமாக தெரிவுசெய்யப்பட்ட உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் அரச நிர்வாகக் கட்டமைப்புக்களின் இரு மொழி சேவை வழங்கலுக்கான அக்கறை மற்றும் வகைகூறலை அதிகரிப்பதன் மூலம் பெருந்தோட்ட சமூகங்களுக்கு இரு மொழிகளில் சேவைகளைப் வழங்குவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், பிரஜா மண்டல மற்றும் சமூக அபிவிருத்தி மன்றங்களின், குறிப்பாக பெண்கள் மற்றும் இளந்தலைவர்களின் மொழி உரிமைகள் மீதான தமது உரிமையை உறுதிப்படுத்துவதற்கான ஆற்றல்களை அதிகரித்து அவர்களின் மொழித் தயார்நிலையை மேம்படுத்துகின்றது.

அத்துடன், மொழி உரிமைகளுக்கான சமூக ஈடுபாடு மற்றும் ஆதரவினை மேம்படுத்துவதற்காக கிரிஸாலிஸ் நிறுவனத்தினால் இனங்காணப்பட்ட முக்கிய நடவடிக்கைகளுள் ஒன்று பெருந்தோட்ட சமூகங்களிலிருந்து இளைஞர் நாடகக் குழுவொன்றைப் பயன்படுத்தி மொழி உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வினை மேம்படுத்தும் மன்ற அரங்கு நிகழ்ச்சிகளை நடாத்துவதாகும். ஏனெனில், ஏனைய துறைகளுடன் (நகர்ப்புறம் மற்றும் கிராமம்) ஒப்பிடுகையில் பெருந்தோட்டத்துறையில் வாசிக்கவும் எழுதவும் முடியுமான மக்கட்தொகை (குறிப்பாக, வயது வந்த தலைமுறை) மிகவும் குறைவாக இருப்பதனால் அவர்களுடனான வினைத்திறன் மிக்க  தொடர்பாடல்களுக்காக வாசகர்களுக்கு மத்தியில்  அதிக கேள்வி இருக்கின்ற ஒலி மற்றும் ஒளி வடிவிலான மன்றங்கள் தெரிவு செய்யப்பட்டன. தேயிலை பறிக்கும் தொழிலாளர்களின் நாளாந்த கடமைகளை பூர்த்திசெய்யும் விதத்தில் அவர்கள் தேயிலை இலைகளை ஒப்படைப்பதற்காக ஒன்று கூடும் நேரத்தில் மன்ற அரங்குகள் அரங்கேற்றப்பட்டன. மன்ற அரங்கு நடாத்தப்பட்ட விதம் குறித்து பார்வையாளர்கள் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியதுடன் அவர்களுக்கு இடைநடுவில் குறுக்கிடுவதற்கான வாய்ப்புக்களும் வழங்கப்பட்டன. அவ்வகையில், நடிகர் குழுவினால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு எவ்வாறு மிகவும் சமாதானமாக தீர்வுகளை காணலாமென தமது வாதங்களை முன்வைத்ததுடன் அவர்களின் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டனர். எனவே, பார்வையாளர்களுக்கு மத்தியில் பிரதான தலைப்புக்களில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் ஏனைய கலந்துரையாடல் மன்றங்களுக்கான ஊக்குவிப்பாக அமைந்திருந்தன.

 கிரிஸாலிஸ் நிறுவனத்தினால் அம்பகமுவை, வலப்பனை மற்றும் கொத்மலை பிரதேச செயலகங்களுக்குரிய தேயிலைப் பெருந்தோட்டங்களிலுள்ள பெண்கள் மற்றும் இளைஞர், யுவதிகளை இலக்காகக் கொண்டு பார்வையாளர்களுக்கு மத்தியில் அவர்களின் மொழி உரிமைகள் மற்றும் சிறப்புரிமைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மொத்தமாக 25 மன்ற அரங்குகள் நடாத்தப்பட்டன. இம்மன்ற அரங்குகளின் உரையாடல்களுடன் பால்நிலை சமத்துவம் தொடர்பான எண்ணக்கரு   கூட்டிணைக்கப்பட்டதுடன் மொழி உரிமை மீறல்கள் எவ்வாறு பெண்களின் உரிமைகள் மற்றும் பெண்களின் வலுவூட்டலில் பாதிப்பேற்படுத்தும் என்ற கலந்துரையாடல் தூண்டிவிடப்பட்டது. இந்த அரங்குகளில் 1,275 பெண்கள் மற்றும் 600 ஆண்கள் மொத்தமாக கிட்டத்தட்ட 1,800 பேர் பங்கேற்றனர்.