தேசிய மொழிகள் நிதியத்தின் முக்கிய செயற்றிட்டத்தினை அமுலப்படுத்துதல் மற்றும் செயற்பாட்டு அடிப்படைகள் பற்றி உறுதியாக அறிந்துகொள்ளல்.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் (NLEAP) தேசிய மொழிகள் நிதியத்தின் 2 ஆம் கட்டத்தின் கீழ் உதவி பெறும் நிறுவனங்களுக்கு மூன்று மெய்நிகர் திசைமுகப்படுத்தல் பயிற்சித் தொடர்களை (Virtual Orientation Sessions) நடாத்துகின்றது.

தேசிய மொழிகள் நிதியத்தின் 2 ஆம் கட்டத்தின் கீழ் உதவி பெறும் பங்காளி நிறுவனங்களுக்கென நடாத்தப்பட்ட மெய்நிகர் திசைமுகப்படுத்தல் அமர்வுகளில் பங்கேற்ற நிறுவனங்களுக்கு தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் போன்று இரு தரப்பு செயற்றிட்டமொன்றை வெற்றிகரமாக அமுல்படுத்துவதற்கு அவசியமான சில முக்கிய பகுதிகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

நிதி மற்றும் நிருவாகம் எனும் தலைப்புக்களில் மார்ச் மாதம் 31 ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது மெய்நிகர் திசைமுகப்படுத்தல் அமர்வுக்கு சமூகமளித்திருந்த நிதி பெறுநர்களை வரவேற்று உரையாற்றிய தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டப் பணிப்பாளர் திரு. தொன் ப்ரௌனல் அவர்கள், இந்த அமர்வுகளின் முக்கியத்துவத்தினைக் கோடிட்டுக் காட்டினார். அதனைத் தொடர்ந்து அறிமுகவுரையினை நிகழ்த்திய தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டப் பிரதிப் பணிப்பாளர் திரு. எம். திருநாவுக்கரசு அவர்கள், இத்திசைமுகப்படுத்தல் அமர்வின் நோக்கித்தினை சுருக்கமாக விளக்கினார். பின்னர், தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் நிதி மற்றும் நிருவாக முகாமையாளர் திரு. கிரிஸ்டி கெஹலுதொட்டுவகே அவர்கள், தேசிய மொழிகள் நிதியத்தின் செயற்றிட்ட நடவடிக்கையின் வினைத்திறன்மிகு முகாமைத்துவத்துக்கு அவசியமான நிதி மற்றும் நிருவாக அடிப்படைகளை தெளிவுபடுத்தினார்.

இரண்டாவது மெய்நிகர் திசைமுகப்படுத்தல் அமர்வு அலீனியா இன்டர்நஷனல் நிறுவனத்தின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுத் துறைசார் நிபுணர் திரு. கய் இன்ஸ் அவர்களின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு தொடர்பான முன்னளிப்புடன் ஆரம்பமாகியது. இந்த அமர்வில் அறிமுகவுரை நிகழ்த்திய திரு. திருநாவுக்கரவு மாரிமுத்து அவர்கள், அறிக்கையிடலுக்கு அவசியமான சுட்டிகள் மற்றும் தரவுகளை முன்வைக்கும் போது தேசிய மொழிகள் நிதியப் பங்காளிகள் கடைப்பிடிக்க வேண்டிய சிறந்த நடைமுறைகளுக்குத் தேவைப்படுகின்ற தொழிநுட்ப உதவியினை வழங்குவதே இந்த அமர்வின் நோக்கமென தெளிவுபடுத்தினார். மேலும், ஒரு செயற்றிட்டத்தின் வெற்றிகரமான கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுக்கு அவசியமான பல்வேறு எண்ணக்கருக்கள், வழிகாட்டல்கள் மற்றும் வார்ப்புருக்களை தேசிய மொழி நிதியத்தின் பங்காளி நிறுவனங்கள் அறிந்திருக்க வேண்டுமென்ற நோக்கில் அவர்களுக்கு மத்தியில் “கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் வியாக்கியானம் – கொடை பெறுநர்களுக்கான அறிக்கையிடல் வழிகாட்டி” எனும் மும்மொழிக் கையேடு  முன்கூட்டியே பகிரப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சிறு இயற்றிறன் மதிப்பீட்டுப் பரிசோதனையுடன் தனது விரிவுரையை ஆரம்பித்த திரு. கய் இன்ஸ் அவர்கள், குறித்த கையேட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள தரவுச் சேகரிப்புக் கருவிகள் மற்றும் பல்வேறு வார்ப்புருக்களை கோடிட்டுக் காட்டியது மாத்திரமன்றி, தேசிய மொழிகள் நிதியச் செயற்றிட்டங்களின் கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் அறிக்கையிடற் தேவைப்பாடுகளை மீளாய்வுக்கு உட்படுத்தினார். பின்னர், தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் பாலின சமத்துவத் துறைசார் நிபுணர் அம்மணி. சாமா ராஜகருண அவர்களால் நெறிப்படுத்தப்பட்ட பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் தொடர்பான திசைமுகப்படுத்தல் அமர்வில், தேசிய மொழிகள் நிதியப் பங்காளி நிறுவனங்களுக்கு மொழி உரிமைகளில் பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டலை ஊக்குவிப்பதற்கான தர்க்கரீதியான காரணங்களைக் கலந்துரையாடுவதற்கும், அவர்களின் தனித்துவமான செயற்றிட்ட நடவடிக்கைகளில் பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டலை ஊக்குவிக்க முடியுமான வழிமுறைகளை கண்டறிவதற்கும் வாய்ப்புக் கிட்டியது. அத்துடன், இலங்கையில் மொழி உரிமைகளில் சமத்துவத்தினை ஊக்குவிப்பதற்கான தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் இரு பக்க அணுகுமுறையான பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டலில் விஷேட கவனக் குவிப்பு பற்றி பங்காளி நிறுவனங்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. மேலும், மொழி உரிமைகளில் பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் எனும் எண்ணக்கருவினை எய்துவதற்காக பாலின உணர்திறத்துடன் கூடிய கொள்கைகள், நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் மொழித் திட்டங்கள், பாலின ரீதியாக வகைப்படுத்தப்பட்ட தரவுகளை சேகரித்தல் மற்றும் வெளியிடுதல், பாலின அடிப்படையிலான பகுப்பாய்வுக்கான விழிப்புணர்வு மற்றும் இயலளவினை விருத்திசெய்தல் மற்றும் நடவடிக்கைகளைத் திட்டமிடுதல், அமுல்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் அறிக்கையிடும் போது பாலின சமத்துவத்தினை உறுதிப்படுத்துதல் போன்ற அம்சங்களின் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.

மூன்றாவதும் இறுதியுமான மெய்நிகர் திசைமுகப்படுத்தல் அமர்வில் மனித உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறை (HRBA) பற்றியும், தொடர்பாடல் மற்றும் பலமான நேரிடையான கருத்தினை உருவாக்குதல் (Branding) தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது. மனித உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறை அம்மணி. வீனா வர்மா (கனடாவினை மையப்படுத்திய செயற்றிட்டப் பணிப்பாளர், அலீனியா இன்டர்நஷனல்) அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன், தேசிய மொழிகள் நிதியத்தின் பங்காளி நிறுவனங்களிலிருந்து பங்கேற்றவர்களுள் 70 சதவீமானோருக்கு செயற்றிட்டங்களை அமுல்படுத்துகையில் கடைப்பிடிக்க வேண்டிய மனித உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறை தொடர்பாக போதிய அறிவும் அனுபவமும் இருப்பதாகத் தெளிவாகியது. எனவே, மனித உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறை மற்றும் அதன் முக்கிய அடிப்படைகள் தொடர்பான விரைவானதொரு மீட்டலின் பிறகு இலங்கையில் மொழி உரிமைகளில் மனித உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறையை எவ்வாறு பிரயோகிக்கலாமென ஆழமாக ஆராயப்பட்டது. மேலும், “மொழி என்பது உட்படுத்தலுக்கான திறவுகோல். மனித நடவடிக்கை, சுய  வெளிப்பாடு மற்றும் அடையாளத்துக்கான மையப்புள்ளி மொழி ஆகும். மக்கள் தமது சொந்த மொழிக்கு வழங்கும் முதன்மை முக்கியத்துவத்தினை இனங்கண்டுகொள்வதினூடாக நீண்டகால பெறுபேறுகளை ஈட்டித்தரும் அபிவிருத்தியில் உண்மையான பங்கேற்பினை போஷித்து வளர்க்க முடியும்1” எனும் யுனெஸ்கோ நிறுவனத்தின் வாசகத்தினை மேற்கோள்காட்டி உரையாற்றிய அம்மணி. வீனா வர்மா அவர்கள், தேசிய மொழிகள் நிதியத்தின் பங்காளிகள் தமது பிரத்தியேகமான செயற்றிட்ட நடவடிக்கையின் பரப்பெல்லையினுள் மனித உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறையை  மொழி உரிமைகளில் எவ்வாறு சிறப்பாக பிரயோகிக்கலாமென கண்டறிய வேண்டுமென வலியுறுத்தினார். தொடர்பாடல் மற்றும் பலமான நேரிடையான கருத்தினை உருவாக்குதல் அமர்வு தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் தொடர்பாடல் உத்தியோகத்தர் ரொஷானா தீ மெல் அவர்களால் நடாத்தப்பட்டதுடன், அவர் செயற்றிட்டம் தொடர்பாக பலமான, நேரிடையான கருத்தை உருவாக்குதற்குப் பயன்படுத்தப்பட வேண்டிய வழிகாட்டல்களை பங்காளிகளுக்கு எடுத்துக்கூறினார். அரச கரும மொழிகள் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு சிவில் சமூக அமைப்புக்களினால் நிறைவேற்றக்கூடிய முக்கியமான பங்களிப்பு பற்றி முக்கிய கரிசனையாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் நம்பிக்கை மற்றும் ஒருமித்த கருத்தைக் கட்டியெழுப்புவதில் தேசிய மொழிகள் நிதியத்தின் பங்காளர்களுக்கிடையிலான முரண்பாடற்ற உடன்பாடானது சிறப்பானதொரு வகிபாகத்தனை நிறைவேற்றுகின்றது. தேசிய மொழிகள் நிதியத்தின் பங்காளி நிறுவனங்களால் மொழி உரிமைகளை மேம்படுத்தவும் மற்றும்/ அல்லது இரண்டாம் மொழிக் கற்றலை இலகுபடுத்தவும் மேற்கொண்டுள்ள பலவிதமான மற்றும் ஆக்கபூர்வமான அணுகுமுறைகளைக் காட்சிப்படுத்துவதென்பது தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கத்தினைக் கட்டியெழுப்புவதில் மொழி உரிமைகளுக்கு எவ்வாறு துணையாக இருக்க முடியுமென்பதற்கான  நம்பகமான சான்றாகவும் உயிர் வாழும் முன்மாதிரிகளாகவும் இருக்கும். எனவே, தேசிய மொழிகள் நிதியப் பங்காளர்களின்  வெற்றிகரமான, ஒருமித்த தொடர்பாடல் மிகவும் முக்கியமானதொரு அம்சமாகும்.

இத்தகைய பல்வேறு திசைமுகப்படுத்தல் அமர்வுகளிலிருந்து தேசிய மொழிகள் நிதியப் பங்காளர்கள் அறிவு மற்றும் உள்ளுணர்வுகளை பெற்றுக்கொண்டதோடு அதற்காக அவர்கள் தமது நன்றிகளைத் தெரிவித்தனர். எனவே, பங்காளி நிறுவனங்கள் பொது மக்கள் மற்றும் குறிப்பாக மிகவும் பின்தங்கிய சமூகங்களுக்கிடையில் மொழி உரிமைகள் மற்றும் இரண்டாம் மொழிக் கற்றலை ஊக்குவிப்பதற்காக கூட்டாக பணியாற்றுவதனால் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் அவர்களுக்கு இவ்வாறான இயற்றிறன் விருத்தி வாய்ப்புக்களை ஒழுங்குசெய்து அவர்களை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

 

 

 

 

 

[1] UNESCO, Why Language Matters for Millennium Development Goals (2012)

Spread the love