தேசிய மொழிகள் நிதியத்தின் வெற்றிக் கதை | CEJ | மொழி உரிமைகளுக்கான பல்கலைக்கழக வீரர்களுடன் இணைந்து எமது தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைத்தல்.

தேசிய மொழிகள் நிதியத்தின் பங்காளி நிறுவனமான சமத்துவம் மற்றும் நீதிக்கான மத்திய நிலையம் மொழி உரிமைகளுக்கு ஆதரவளிக்கும் புதியதொரு தலைமுறையின் உருவாக்கத்திற்கு துணைபுரிகின்றது.

தேசிய மொழிகள் நிதியத்தின் பங்காளி நிறுவனமான சமத்துவம் மற்றும் நீதிக்கான மத்திய நிலையம், மொழி உரிமைகளுக்கான பல்கலைக்கழக வீரர்களாக தம்மைப் பதிவுசெய்து கொண்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜுன் மாதம் 15 ஆம் திகதி மெய்நிகர் திசைமுகப்படுத்தல் நிகழ்ச்சியொன்றினை நடாத்தியது. அண்மையில் உருவாக்கப்பட்ட மொழி வீரர் சிறப்புக் குழுமத்தில் கொழும்பு, களனிய மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்களின் 34 இளங்கலை மாணவர்களும் அவர்களின் மாணவர் இணைப்பாளர்களும் அங்கத்துவம் பெறுகின்றனர். இவ்வூடாடும் அமர்வில் மொழி வீரர்களுக்கு செயற்றிட்டம் மற்றும் முன்மொழிந்துள்ள நடவடிக்கைகள் பற்றியும், அவ்வாறே முழுதும் நிறைவான ஆற்றல்களை தம்மகத்தே கொண்டுள்ள  மொழி உரிமை ஆதரவாளர்கள் என்ற வகையில் அவர்களால் நிறைவேற்றப்பட வேண்டிய வகிபாகம் தொடர்பாகவும் சுருக்கமாக எடுத்துக்கூறப்பட்டது.

சமத்துவம் மற்றும் நீதிக்கான மத்திய நிலையம் பல ஆண்டுகளாக பாலின நீதி, பெண்கள் மற்றும் நிலைமாற்று நீதி, பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு, பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை ஆகிய எண்ணக்கருக்களை ஊக்குவித்துக்கொண்டிருக்கின்றது. தேசிய மொழிகள் நிதியத்தின் செயற்றிட்டத்தின் கீழ் ”யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களும் மொழித் தடையும்  : மொழி உரிமைகளுக்கான பல்கலைக்கழக வீரர்கள்” எனும் தொனிப்பொருளில் எமது நாட்டில் மிகவும் இலகுவில் பாதிப்புக்குள்ளாகும் குழுக்களுள் ஒரு குழுவான யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொழி உரிமைகளுக்காக ஆதரவு திரட்டும் பணியில் பல்கலைக்கழக மாணவர்களை ஈடுபடுத்தி அவர்களை வலுவூட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது. அந்த வகையில், சமத்துவம் மற்றும் நீதிக்கான மத்திய நிலையத்தின் செயற்றிட்டம் மூன்று பல்கலைக்கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 80 மொழி வீரர்களால் வழிப்படுத்தப்படும். மொழி உரிமைகளுக்கு ஆதரவாக செயற்படும் மாணவர்கள் என்ற வகையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொழி உரிமைகளை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பாக பொது மற்றும் கொள்கை ரீதியான சொல்லாடல்களை நடாத்தும் விதத்தில் சமத்துவம் மற்றும் நீதிக்கான மத்திய நிலையம் அவர்களை வளப்படுத்தும். மேலும், மொழி வீரர்கள் சமத்துவம் மற்றும் நீதிக்கான மத்திய நிலையத்தினூடாக பெற்றுக்கொண்ட அறிவும் அநுபவமும் அரசகரும மொழிகள் கொள்கையின் வினைத்திறன்மிக்க அமுல்படுத்தலுக்கு ஆதரவளிப்பதற்கு அவர்களுக்கு துணைபுரியும்.

எமது நாட்டின் சனத்தொகையில் 4.4. மில்லியனுக்கும் மேற்பட்டோர் இளைஞர், யுவதிகளாகும். மொழி உரிமைகள் தொடர்பான பொறுப்பினை வழிநடாத்துவற்கு இந்த இளைஞர், யுவதிகளின் ஆற்றலை பயன்படுத்திக்கொள்வது சிறந்ததொரு வாய்ப்பாகுமென சமத்துவம் மற்றும் நீதிக்கான மத்திய நிலையம் கருதுகின்றது. இலங்கை நாட்டின் எதிர்காலத் தலைவர்களான இளைஞர், யுவதிகளுக்கு கருத்துக்களை முன்வைக்கும் ஆற்றல்மிக்க தலைவர்களாகவும், மாற்றத்தின் முகவர்களாகவும், சமூக இசைவு மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதை ஊக்குவிப்பவர்களாகவும் செயற்பட்டு மொழி உரிமை மீறல்களினால் தீவிரமடைந்துள்ள ஏற்றத்தாழ்வுகளுக்கு தீர்வுகாண முடியும். மேலும், மொழி உரிமைகளின் ஆதரவாளர்கள் என்ற வகையில் மாணவர்கள் தமது சக தோழர்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு மத்தியில் மொழி உரிமைகள் தொடர்பான தொடர்பாடல்களை நெறிப்படுத்தும் விதத்தில் அவர்களின் இயற்றிறன் கட்டியெழுப்பப்படும். எனவே, தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கத்திற்கு மொழி உரிமைகள் தொடர்பான ஊக்குவிப்பு இன்றியமையாதது என்பதனால் உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் சிங்களம் மற்றும் தமிழ் மாணவர்களுக்கு மத்தியில் இனங்காணப்பட்டுள்ள இன மொழி வேறுபாடுகளைக் கலைந்து இன நல்லுறவினைக் கட்டியெழுப்பும் பணியில் மொழி வீரர்களுக்கு சிறப்பாக செயற்பட முடியும். அத்துடன், மொழி வீரர்கள்  அரசகரும மொழிகள் கொள்கை தொடர்பாக சிறந்த அறிவுடனும், புரிதலுடனும் இருந்தால் அவர்களின் ஒருமித்த குரல்கள் கொள்கைச் சீர்திருத்தங்களின் போது செவிமடுக்கப்படும்.

சமத்துவம் மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியமானதொரு காலகட்டத்திலேயே நடைமுறைப்படுத்தப்படுகின்றது. முன்னைய காலங்களை விட தற்போது இலங்கை இளைஞர், யுவதிகள் எமது நாட்டின் கொள்கையாக்கத்தில் தாக்கமேற்படுத்தவும், நேரிடையாக செல்வாக்கு செலுத்துவதற்கும் அவர்களின் ஒன்றிணைந்த குரலின் ஆற்றலையும், வலிமையையும் அவர்கள் சிறப்பாக புரிந்துகொண்டுள்ளனர். எனவே, அரசகரும மொழிகள் கொள்கையின் வினைத்திறன்மிக்க அமுல்படுத்தலை வலுவூட்டுவதற்காக இந்த மொழி வீரர்கள் தமது சக தோழர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை பலப்படுத்தும் ஊக்குவிப்பாளர்களாக செயற்படுவார்கள் என தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் கருதுகின்றது.

Spread the love