
Palm Foundation இரண்டாம் மொழிக் கற்றல் மற்றும் வீதி நாடகங்களினூடாக சமூக ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கின்றது.
தேசிய மொழிகள் நிதியத்தின் பங்காளரான PALM பவுன்டேஷன் தமிழ் மொழி வகுப்புக்களின் பூர்த்தியைக் கொண்டாடுவதற்காக 2022 மே மாதம் 26ஆம் திகதி வலப்பனை, கொஸ்கல்லை கிராமத்தில் விஷேட நிகழ்ச்சியொன்றை நடாத்தியது. கொஸ்கல்லை கிராமத்தின் மொழி ஊக்குவிப்புக் குழுவினால் ஏற்பாடு செய்திருந்த குறித்த முழு நாள் நிகழ்வில் சிறுவர்கள், இளைஞர், யுவதிகள் மற்றும் வயது வந்தோர் என கிட்டத்தட்ட 300 பேர் கலந்துகொண்டனர். தமிழ் மொழியில் இரண்டாம் மொழிப் பாடநெறியை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்த 75 சிறார்கள் தமது சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர். மேலும், அவர்கள் தமது பாரம்பரிய உள்நாட்டு ஆடைகளை அணிந்து சிங்களம் மற்றும் தமிழ்க் கலாச்சார நிகழ்வுகளின் மூலம் தமது ஆற்றல்களைக் காட்சிப்படுத்தியும் தமது மொழிப் பாடநெறியின் மிகவும் முக்கியமானதொரு அம்சமான கலாச்சாரப் பல்வகைமைக்கு மதிப்பளித்து கௌரவிப்பதை கோடிட்டுக்காட்டியும் தமது புதிய மொழி ஆற்றல்களை மிகவும் ஆர்வத்துடன் வெளிப்படுத்தினார்கள். இரண்டாம் மொழிப் பாடநெறிகள் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பயிற்றுநர்களின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றன. பாடநெறியில் பங்கேற்ற மாணவர்களால் தயாரிக்கப்பட்ட கலாச்சார மற்றும் மொழி நூல்கள் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் மீதான அவர்களின் ஆர்வத்தினை மேலும் மெருகூட்டுவதற்கு ஊடாடும் கற்றல் முறை (Interactive learning mehtodology) எவ்வாறு உதவியது என்பதற்கு சான்றான இருந்தன. அத்துடன், இந்த இளம் சிறார்களிடத்தில் தமது சமூகத்தில் மனப்பான்மை ரீதியான மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டுமென்ற ஆர்வம் மேலோங்கியிருப்பதை அவதானித்த இந்நிகழ்வில் கலந்துகொண்ட வலப்பனை மற்றும் அம்பகமுவை பிரதேச செயலகங்களின் சமூக ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் ஏனைய விஷேட விருந்தினர்கள் பெருமிதமடைந்தனர். மொழிக் கற்றலுக்கு ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கத்தினை மேம்படுத்துவதில் இன்றியமையாததொரு வகிபாகத்தை நிறைவேற்ற முடியுமென்பதற்கு இந்த இளம் பருவத்தினரின் ஆதிக்கம் சிறந்த சான்றாகும். அந்நிகழ்வில் பங்குபற்றிய கிராமத்தவர் ஒருவர் “இது உண்மையில் எமது கிராமத்தின் வரலாற்றில் மிகவும் முக்கியமானதொரு நிகழ்வு. நாம் எமது சிறுவர்களினூடாகவும் அவர்களின் இரண்டாம் மொழி வகுப்புக்களினூடாகவும் எமது தமிழ் சகோதர சகோதரிகளையும் அவர்களின் கலாச்சாரத்தினையும் எவ்வாறு மதிக்க வேண்டுமன கற்றுக்கொண்டோம்” என முழுமனதுடன் கருத்துத் தெரிவித்தார்.
Palm நிறுவனம் அரசகரும மொழிக் கொள்கை மற்றும் மொழி உரிமைகள் பற்றி விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக மே மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் அம்பகமுவை பிரதேச செயலகப் பிரிவில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் மூன்று வீதி நாடங்களை ஒழுங்கு செய்து நடாத்தியதுடன், இதில் 1200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கு பிரயோகிக்கும் முறையை கண்டு மகிழ்ந்தனர். வீதி நாடகங்களின் ஊடாடும் இயல்பு தோட்ட மற்றும் கிராமப்புற சமூகங்களை மொழி உரிமைகளைப் பற்றி கலந்துரையாடலில் ஈடுபடுத்துவதற்கான சிறந்த முறையாகும். அரசகரும மொழிகள் கொள்கையை அமுல்படுத்துவதற்கு ஒத்துழைப்பதற்காக பெருந்தோட்ட சமூகத்தில் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தும் Palm நிறுவனத்தின் மிகவும் முக்கியமானதொரு நோக்கம் யாதெனில் பெருந்தோட்ட சமூகம் ஒரு சமூகம் என்ற வகையில் ஏதேனுமொரு உரிமை மீறல்களை அடையாளப்படுத்தும் விதத்தில் அவர்களை ஆயத்தப்படுத்துவதும் அவர்களின் மொழி உரிமைகளுக்காக குரலெழுப்பும் முகவர்கள் எனும் உணர்வினை அவர்களில் கட்டியெழுப்புவதுமாகும்.
“மனிதப் பெருந்தன்மைக்காக மொழி உரிமைகளை ஊக்குவித்தல்” எனும் தொனிப்பொருளில் செயற்படும் Palm நிறுவனம், அரசகரும மொழிகள் கொள்கையை அமுல்படுத்துவதற்கு பிரதான பெருந்தோட்டத்துறை கரிசனையாளர்கள் மத்தியில் ஆதரவு திரட்டிக்கொண்டிருப்பதோடு நுவரெலியா மாவட்டத்திலுள்ள கிராமங்கள் மற்றும் பெருந்தோட்டங்களில் வசிக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர், யுவதிகளுக்கு மத்தியில் இரு மொழி தொடர்பாடல் ஆற்றல்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. Palm நிறுவனம் மொழி உரிமைகள் பற்றி விழிப்புணர்வினையும் புரிதலையும் கட்டியெழுப்பும் நோக்கில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள வலப்பனை, நுவரெலியா, அம்பகமுவை பிரதேசங்களில் செயற்படுகின்றது.