
இரண்டாம் மொழிக் கற்றலினூடாக சமாதானத்தைக் கட்டியெழுப்பவும் நல்லிணக்கத்திற்காகவும் எதிர்காலத் தலைமுறையை ஆயத்தப்படுத்துதல்.
தேசிய மொழிகள் நிதியத்தின் பங்காளி நிறுவனமான சர்வோதய ஷான்தி சேனா சன்சதய (ஷான்தி சேனா- சமாதானப் படையணி) என்பது சர்வோதய ஷ்ரமதான இயக்கத்தின் இளைஞர் அணியாகும். சர்வோதய மிகவும் பழமையான,பிரபல்யமான சிவில் சமூக அமைப்பாகும். அது சமூகத்தைக் கட்டியெழுப்பும் பணியில் கிட்டத்தட்ட 65 வருடங்களாக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. 1978 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இயக்கமான சர்வோதய ஷான்தி சேனா நாடு தழுவிய இளைஞர் அணியாகும். இலங்கையின் 25 மாவட்டங்களிலும் 120,000 க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்களைக் கொண்டிருக்கும் இந்த அணி நாடு முழுவதும் 9,800 இளைஞர் வட்டங்களினூடாக சமாதானத்தைக் கட்டியெழுப்பவும் சமூக அபிவிருத்தியை நோக்காகக் கொண்டும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. “பகிர்ந்து அனைவரையும் விழிப்பூட்டுவதற்கான இயக்கம்” எனும் தாய் அமைப்பின் வழிகாட்டல் அடிப்படைக்கேற்ப செயற்படுகின்ற சான்தி சேனா அணியின் முதன்மை நோக்கம் இளைஞர், யுவதிகளை வலுவூட்டுவதாகும். மேலும், இவ்விளைஞர் அணி கீழ்மட்ட சமூகங்களுக்கு மத்தியில் இளம் தலைவர்களை உருவாக்கி அவர்களின் மன வலிமை, திறமைகள் மற்றும் ஆற்றல் என்பவற்றை நிலைபேறான வளர்ச்சியில் பங்களிப்புச்செய்யும் விதத்தில் அவர்களை நெறிப்படுத்துகின்றது. எமது நாட்டின் பல்லின மற்றும் பல்மத சமூகங்களுக்கு மத்தியில் சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கு நல்லிணக்ககம் மற்றும் கூட்டொத்துழைப்பு ஆகிய இரு எண்ணக்கருக்களும் இன்றியமையாதவை என்பதை இனங்கண்டுள்ள ஷான்தி சேனா, தேசிய மொழிகள் நிதியச் செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக களுத்துறை, நுவரெலியா, கேகாலை, அம்பாறை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இரண்டாம் மொழிக் கல்வியினூடாக அரசகரும மொழிக் கொள்கையை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைச் செயற்படுத்துகின்றது. அந்த வகையில், ஷாந்தி சேனா செயற்றிட்டத்தின் ஒட்டுமொத்த இலக்கு யாதெனில் ஒரு மொழியில் மாத்திரம் (சிங்களம் அல்லது தமிழ்) கதைக்கும் இளைஞர், யுவதிகள் தமது நாளாந்த நடவடிக்கைகளில் இரண்டாம் மொழியைப் பயன்படுத்தும் விதத்தில் அவர்களின் இயற்றிறனை மேம்படுத்துவதன் மூலம் பல்வேறு சமூகங்களுக்கு மத்தியில் மொழி நுண்ணறிவினை மேம்படுத்துவதாகும். ஒருவர் இன்னொருவருடன் தொடர்புகொள்ளக்கூடிய ஆற்றலானது சமூகங்களுக்கு மத்தியில் ஆளிடைத் தொடர்புகளுக்கான வாய்ப்புக்களை இலகுபடுத்துவதுடன், தேசிய நல்லிணக்கத்தை விருத்திசெய்து மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்புக்களையும் உருவாக்குகின்றது. எனவே, ஷாந்தி சேனா இளைஞர் படையணி இரண்டாம் மொழிப் பயிற்சிச் செயலமர்வுகள், இரண்டாம் மொழிக் கற்றற் பாடநெறிகள், இரண்டாம் மொழி இளைஞர் கழகங்கள், சமூக வலைத்தள ஊடகங்களினூடாக மொழி உரிமைகள் தொடர்பாக விழிப்பூட்டல் மற்றும் மாவட்ட மட்ட இரண்டாம் மொழி கற்றல் சான்றிதழ் வழங்கல் வைபவம் என பல்வேறு நிகழ்வுகளை ஒழுங்குசெய்து நடாத்துகின்றது.
உலகளாவிய தொற்றினால் மொழி வகுப்புக்களை ஆரம்பிக்க முடியாதிருந்த சந்தர்ப்பத்தில் மொழி வகுப்புக்களில் மாணவர்களின் ஆர்வம் குறைவதை தாமதமின்றி இனங்கண்ட சர்வோதய விரைவாக மொழி இளைஞர் கழகங்களின் ஒத்துழைப்பினை நாடியது. மொழிக் கழகங்கள் இலங்கை போன்ற பல்கலாச்சார நாட்டில் இரண்டாம் மொழியைக் கற்பதன் முக்கியத்துவம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கென ஒரு மன்றத்தினை உருவாக்கின. Zoom செயலியினூடாக ஒழுங்கு செய்யப்பட்ட மெய்நிகர் கூட்டங்களில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த மொழி இளம் தலைவர்கள் மற்றும் மாவட்ட இணைப்பாளர்கள் ஒன்று சேர்ந்து ஒருவர் இன்னொருவருடன் உரையாடவும், திட்டமிட்டுள்ள செயற்றிட்டங்களை அமுல்படுத்துவது பற்றி கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளவும், பரிந்துரைகளை முன்வைக்கவும் கருத்துக்களைத் தெரிவிக்கவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
கொவிட்-19 தொற்றின் இரண்டாம், மூன்றாம் அலைகள் தீவிரமடைந்திருந்த சந்தர்ப்பங்களில் வகுப்பறைக் கற்றல் நடவடிக்கைகள் சாத்தியமற்றதாக கருதப்பட்டபோது, சர்வோதய ஷான்தி சேனா விரைவாக செயற்பட்டு இரண்டாம் மொழி வகுப்புக்களை இணையவழியில் நடாத்தியது. ஆறு மாத கால இரண்டாம் மொழிப் பாடநெறிகள் 2021 ஆகஸ்ட் மாதத்தில் Zoom செயலியினூடாக ஆரம்பிக்கப்பட்டன. தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் அரச பயிற்சிக் கல்லூரிகளில் பயிற்சிபெற்ற மொழி ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இப்பாடநெறிகளில் புத்தாக்க மற்றும் கவர்ச்சிகரமான கற்பித்தல் முறைகள் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு, பத்து (10) இரண்டாம் மொழிப் பயிற்சிப் பாடநெறிகள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் ஐந்து மாவட்டங்களில் நடாத்தப்பட்டன. மாவட்ட மட்டத்திலான தெரிவுச் செயன்முறையினூடாக பொருத்தமானவர்களாகவும் ஆற்றல்மிக்கவர்களாகவும் இனங்காணப்பட்ட 14 – 25 வயதிற்கிடைப்பட்ட 400 இளைஞர், யுவதிகள் இப்பாடநெறிகளில் பங்கேற்று பயனடைந்தனர். இப்பாடநெறிகளில் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் பரிந்துரைக்கப்பட்ட PRH மாதிரி (பங்கேற்பு, பிரதிபலிப்பு, உள்ளத்தை பிடித்து வைத்தல் முறை ) பின்பற்றப்பட்டு இசைக்கு செவிமடுத்தல், உரையாடல் பயிற்சிகள், பத்திரிகை வாசித்தல் போன்ற நடைமுறைப் பிரயோகங்களினடாக மொழித் திறன்களை விருத்தி செய்துகொள்ளும் விதத்தில் இளைஞர்களுக்கு உற்சாகமான வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுப்பதில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், இரண்டாம் மொழியில் காணப்படுகின்ற விளம்பரங்கள், பாடல்கள், செய்திகள், காலநிலை எதிர்வுகூறல்கள் போன்றவற்றுக்கு செவிமடுத்து சுய கற்றல் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு ஊக்குவிக்கப்பட்டனர். மேலும், அரசகரும மொழிகள் கொள்கை பற்றிய அறிவு, கலாச்சார வேறுபாடுகளை மதித்து கௌரவித்தல், பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் பற்றிய பார்வை போன்ற அம்சங்களும் பாடவிதானத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்தன.
சர்வோதய ஷாந்தி சேனா ஜனவரி மாதத்தில் இரண்டாம் மொழி வகுப்புக்களை வெற்றிகரமாக பூர்த்திசெய்தோருக்கு ஐந்து மாவட்டங்களில் மாவட்ட மட்ட பரிசளிப்பு விழாக்களை நடாத்தியது. குறித்த பரிசளிப்பு விழாக்கள் இளம் மொழி ஆர்வலர்களுக்கு பாடல்கள், உரைகள், நாடகங்கள், புகைப்படக் கட்டுரைகள் போன்ற ஆக்கபூர்வமான கலை கலாச்சார நிகழ்ச்சிகளினூடாக தமது இரண்டாம் மொழித் திறன்களை காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்பாக இருந்ததுடன், அந்த விழாக்கள் அரசகரும மொழிகள் மற்றும் கிராமியக் கலாச்சாரத்தின் வண்ணமயமான, பிரகாசமான கொண்டாட்டங்களாக அமைந்திருந்தன.
சர்வோதய ஷான்தி சேனா தேசிய மொழிகள் நிதியத்தின் செயற்றிட்டத்தினை வெற்றிகரமாக பூர்த்திசெய்தாலும், இளைஞர், யுவதிகள் மத்தியில் இரண்டாம் மொழிக் கற்றலை ஊக்குவிக்கும் பணியில் தொடர்ந்தும் முனைப்புடன் ஈடுபடுகின்றது. அரசகரும மொழிகள் கொள்கை பற்றிய விழிப்புணர்வினைக் கட்டியெழுப்பி மாவட்ட மட்டத்தில் மொழி உரிமைகளை ஊக்குவிப்பதற்காக இரண்டாம் மொழி இளைஞர் கழகத்திலிருந்து அதிகபட்ச பயனைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பின்-தொடர் நிகழ்ச்சித்திட்டங்கள் விருத்திசெய்யப்பட்டுள்ளன.
அம்பறை மாவட்டம் 100
தமிழ் – அம்பாறை பிரதேச செயலகம் 50 (10 ஆண்கள் / 40 பெண்கள்) சிங்களம் – சம்மாந்துறைப் பிரதேச செயலகம் 42 (21 ஆண்கள் / 21 பெண்கள்)
களுத்துறை மாவட்டம் 107
பேருவலை பிரதேச செயலகம் – தமிழ் – 42 (16 ஆண்கள் / 26 பெண்கள்) சிங்களம் 47 (28 ஆண்கள் / 19 பெண்கள்)
கேகாலை மாவட்டம்
தமிழ் – கேகாலை பிரதேச செயலகம் 39 ( 4 ஆண்கள் / 35 பெண்கள்) – சிங்களம் 47 (28 ஆண்கள் / 19 பெண்கள்)
கிளிநொச்சி மாவட்டம்
சிங்களம் – கரச்சி பிரதேச செயலகம் 49 (15 ஆண்கள் / 34 பெண்கள்), கண்டாவேளி பிரதேச செயலகம் 45 (6 ஆண்கள் / 39 பெண்கள்)
நுவரெலியா மாவட்டம்
தமிழ் – வலப்பனை பிரதேச செயலகம் 47 (13 ஆண்கள்/ 34 பெண்கள்) – சிங்களம் – அம்பகமுவை பிரதேச செயலகம் 40 (5 ஆண்கள் / 35 பெண்கள்)