தேசிய மொழிகள் நிதியத்தின் வெற்றிக்கதை : அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையம் (SLCDF) | இரண்டாம் மொழிக் கற்றலினூடாக வாழ்க்கையை மாற்றி சமூகங்களை மேம்படுத்துதல்.

அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையத்தின் இரண்டாம் மொழிக் கற்றல் நிகழ்ச்சித்திட்டம் அஞ்சலதிபரின் தொழிலைப் பாதுகாத்துள்ளது.  

சசினி அமந்தா 27 வயதுடைய சிங்கள யுவதி. தனது கல்வியைப் பூர்த்திசெய்துவிட்டு அரசாங்கத் தொழிலொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற அவாவுடன் இருந்தாள். பல்வேறு முயற்சிகளின் பிறகு காலி, யக்கலமுல்லைப் பிரதேசித்தில் அமைந்துள்ள கொட்டாவ உபதபால் நிலையத்தில்  உள்ளகப் பயிற்சிக்கான வாய்ப்பு கிடைத்தது. தனது உள்ளகப் பயிற்சியின் மூலம் அதிகபட்ச பயனைப் பெற்று சம்பந்தப்பட்ட அரச பரீட்சைகளுக்கு முகங்கொடுத்தாள். குறித்த பரீட்சையில் சித்தியடைந்து அதே உப தபாலகத்தில் அஞ்சலதிபராக நியமனம் பெற்றாள்.

யக்கலமுல்லை, தலங்கஹவத்தைத் தோட்டத்தில் அமைந்துள்ள குறித்த அஞ்சல் அலுவலகம் குறிப்பாக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற தோட்ட மற்றும் கிராமப்புற மக்களுக்கு சேவையாற்றி வருகின்றது. செல்வி. சசினியின் வாடிக்கையாளர்களுள் தொண்ணூற்றைந்து சதவீதம் தமிழ் பேசும் மக்களாகும். அவர்கள் மிகவும் குறைவாகவே சிங்கள மொழியில் கதைக்கின்றனர். எனவே, அவர்களுடன் உரையாடி அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவது சசினிக்கு பெரும் சவாலாக இருந்ததோடு தனது கடமைகளை உரியவாறு நிறைவேற்ற முடியாதென உணர்ந்த சசினி முற்றிலும் மனமுடைந்து நம்பிக்கை இழந்து காணப்பட்டாள். ஆதலால், தனது வகிபாகத்தை திறமையாக நிறைவேற்றுவதற்காக தன்னைத் தயார்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழித்து பல்வேறு முயற்சிகளை  மேற்கொண்டாலும் இறுதியாக தமிழ் மொழியைக் கற்பதா அல்லது பதவியை இராஜினாமா செய்வதா என்ற மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டாள். இச்சந்தர்ப்பத்திலேயே அபிவிருத்திக்கான உதவு ஊக்க மையம் காலி மாவட்டத்தின் அரச சார்பற்ற நிறுவனங்களின் கூட்டமைப்பின் (DC) ஒத்துழைப்புடன் இரண்டாம் மொழிக் கற்பித்தல் வகுப்புக்களைத் துவங்கியது.  தமிழ் மொழி வகுப்புக்கள் இலவசமாக நடைபெறும் என்பதை அறிந்த சசினி உடனடியாக குறித்த வகுப்புக்களில் இணைந்துகொண்டாள். அவள் ஏற்கனவே பாடசாலையில் தரம் 1 முதல் 5 வரை தமிழ் மொழியைப் படித்திருந்தாள். எனினும், அவள் அடிக்கடி தமிழ் மொழியைப் பயன்படுத்தாததால்  தமிழ் மொழியுடனான உறவு இல்லாதிருந்தாலும் பாடசாலையில் பெற்ற அடிப்படை பெரிதும் உதவியாக இருந்தது. இவ்வகுப்புக்கள் அவளது தமிழ் மொழி அறிவினை மாத்திரமன்றி இங்கு பின்பற்றப்பட்ட நடைமுறைக் கற்பித்தல் முறைகள் இரண்டாம் மொழியில் உரையாடுவதற்கான நம்பிக்கையையும் கட்டியெழுப்பியது. எனவே, அஞ்சல் அலுவலகத்தில் தனது பணியில் மொழித் திறன்களைப் பிரயோகித்து நம்பிக்கையுடன் தமிழ் மொழியில் உரையாடும் அவளது ஆற்றலை விரைவாக விருத்திசெய்துகொண்டாள்.

இவ்வெற்றிக் கதையை எழுதும் போது சசினி அமந்தா கொட்டாவைப் பிரிவின் உப-தபால் அலுவலகத்தில் மிகவும் உற்சாகத்துடனும், அவதானத்துடனும் தனது பணிகளை நிறைவேற்றுகின்றாள். தனது வாடிக்கையாளர்களுடன் அவர்களின் மொழித் தெரிவுக்கேற்ப கதைக்க முடியுமென்பதால் சசினி தனது ஆற்றலைப் பிரயோகித்து வினைத்திறனுடன் சேவையாற்றுகின்றாள். எனவே, தற்போது தோட்டப் பணியாளர்கள் சசினியுடன் மிகவும் நெருக்கமாகவும், வசதியாகவும் தொடர்புகொள்வதுடன், குறித்த உப தபால் நிலையச் சூழல் மிகவும் விருப்பத்திற்குரியதாகவும் நட்புடையதாகவும் இருக்கின்றது. மொழிக் கற்றல் வகுப்புக்கள் தனது வாழ்வில் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதென கருத்து தெரிவிக்கையில் “ இந்த மொழி வகுப்புக்கள் இல்லாதிருந்தால் நான் எனது அரசாங்க தொழிலை விட்டுவிட்டு வேறு ஏதேனுமொரு தொழில் வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ள முயற்சித்திருப்பென்.  இப்பதவியைப் பெற்றுக்கொள்வதற்கான பரீட்சைகளுக்கு முகங்கொடுக்க நான் அதிக நேரம் செலவழித்திருந்தாலும் தமிழ் மொழியைக் கற்பதற்கு கிடைத்த வாய்ப்பினால் பொருத்தமானமொரு தொழிலைத் தேடி நேரத்தை வீணாக்குவதற்கான அவசியமிருக்கவில்லை” என குறிப்பிட்டாள். தனது சமூகத்திற்காக சிறப்பாக சேவையாற்ற வேண்டுமென உறுதியாக இருக்கின்றாள். எனவே, அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையத்தின் அனுசரணையுடனான மொழி வகுப்புக்கள் செல்வி. சசினிக்கும் அவள் சேவையாற்றுகின்ற சமூகங்களுக்கும் சிறந்ததொரு வளமாகவும், பாக்கியமாகவும் அமைந்துள்ளது.

தேசிய மொழிகள் நிதியத்தின் பங்காளி நிறுவனமான அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையம் பல்லின சமூகங்களுக்கு மத்தியில் மொழி உரிமைகளை மேம்படுத்துவதற்கும் இரண்டாம் மொழிக் கற்றலை ஊக்குவிப்பதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையத்தின் “ அரசகரும மொழிக் கொள்கைக்கான சிவில் சமூகக் கட்டமைப்பு நிலையம்” காலி, கண்டி, கிளிநொச்சி, மாத்தரை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் தனது பணிகளை ஆற்றுகின்றது. கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக பின்னடைவுகள் இருந்தாலும் இச்செயற்றிட்டத்தின் உத்தேச அடைவுகள் பெரும்பாலும் எய்தப்பெற்றுள்ளன. பல்லின சமூகங்களுக்கு மத்தியில் புரிந்துணர்வினையும் பரஸ்பர கௌரவத்தினையும் மேம்படுத்தவதற்கு  இரண்டாம் மொழிக் கற்றல் எவ்வாறு உதவும் என்பதற்கு சசினியின் வெற்றிக்கதை சிறந்த சான்றாகும்.

Spread the love