“நான் எனது தாய்மொழியை நேசிப்பதுடன் பிறமொழிகளிற்கும் மதிப்பளிக்கின்றேன்”

அரச கரும மொழிகள் வாரத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட அகில இலங்கை கட்டுரைப் போட்டியின் விருது வழங்கும் வைபவத்தினை அரச கரும மொழிகள் ஆணைக்குழு நடாத்துகின்றது.

ஒவ்வொரு வருடமும் ஜுலை 01 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரை  கொண்டாடப்படுகின்ற அரச கரும மொழிகள் வாரத்தை முன்னிட்டு அரச கரும மொழிகள் ஆணைக்குழு (OLC) தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்துடன் (NLEAP) இணைந்து நடாத்திய அகில இலங்கை பாடசாலைக் கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு விருது வழங்கும் வைபவம் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி கௌரவ பிரதமர் மற்றும் பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் திரு. தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையில் இலங்கை மற்றும் மாலை தீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் மதிப்பிற்குரிய டேவிட் மக்கினொன் அவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

“எமது நாட்டின் சகல பிரஜைகளின் மொழி உரிமைகள், மத உரிமைகள் மற்றும் கலாச்சார உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நாம் உறுதிபூண்டுள்ளோம்” என வலியுறுத்தி உரையாற்றிய பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள், மொழி உரிமைகள் பற்றிய விழிப்புணர்வினைக் கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பு செய்தமைக்காக இப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கும் பங்கேற்றவர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும், கருத்துத் தெரிவித்த பிரதமர் அவர்கள், “வலுவானதொரு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு எமது நாட்டு மக்களிடையே சரியான புரிந்துணர்வு இருப்பது அவசியம்” என்று கூறியதுடன் நாட்டின் அபிவிருத்திக்கு மிகவும் இன்றியமையாதது என கருதப்படுகின்ற துறையில் இளைஞர், யுவதிகளை ஈடுபடுத்தும் நோக்கில் நடாத்தும் இத்தகைய நிகழ்ச்சித்திட்டங்களுக்காக அரச கரும மொழிகள் ஆணைக்குழுவுக்கு தனது நல்லாசிகளைத் தெரிவித்தார். அத்துடன், அரச கரும மொழிக்கொள்கையின் வினைத்திறன்மிக்க அமுல்படுத்தலினூடாக மொழி உரிமைகளை ஊக்குவிக்கும்  நோக்கில் கனடா அரசாங்கத்துடன் கட்டியெழுப்பியுள்ள   இரு தரப்பு கூட்டாண்மைக்காக பிரதமர் தனது ஆழமான வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

மேன்மை தங்கிய டேவிட் மக்கினொன் அவர்கள், மொழி உரிமைகள் மற்றும் பன்முகத்தன்மை தொடர்பான விழிப்புணர்வினை ஊக்குவிப்பதற்காக நாடு முழுவதிலும் உள்ள இளம் பங்கேற்பாளர்களின் விலைமதிப்பிட முடியாத பங்களிப்பினை அங்கீகரித்து உரை நிகழ்த்தியதுடன், ‘எமது பன்முகத்தன்மை எம்மைப் பலப்படுத்தி மேம்படுத்தினாலும், எமது முயற்சிகள் தேவைப்படுகின்றன” என உறுதிப்படுத்திய அவர் “சமூகங்களைக் கட்டியெழுப்பவும் அழிக்கவும் மொழி வல்லமை வாய்ந்தது” என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், திரு. மெக்கினொன் அவர்கள், தற்போது 53 ஆம் ஆண்டு நிறைவினைக் கொண்டாடும் கனாடவின் இரு மொழிக் கொள்கையை மேற்கோள்காட்டி ”அது நீண்ட காலமெடுக்கும் ஒரு முயற்சியாக இருந்தாலும் அதுவே முன்னேற்றத்துக்கான மிகவும் சிறந்த பணி” என சுட்டிக்காட்டியதுடன், இலங்கை அரசாங்கத்தின் அரச கரும மொழிகள் கொள்கையை ஊக்குவிப்பதற்காக இணைந்து பணியாற்ற கிடைத்த வாய்ப்பினை பெரிதும் மெச்சினார்.

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவரும் சட்டத்தரணியுமான திரு. டீ. கலன்சூரிய அவர்கள் தனது வரவேற்புரையில், நாட்டில் தொற்று நோய் உச்சக் கட்டத்திலிருந்த சந்தர்ப்பத்தில் இப்போட்டி நிகழ்ச்சி இடம்பெற்றாலும் நாடு முழுவதிலும் இருக்கின்ற பாடசாலைச் சிறார்களிடமிருந்து இந்நிகழ்ச்சித்திட்டத்துக்கு  சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 1210 கட்டுரைகள்  கிடைத்தமை தேசிய மொழிகள் ஆணைக்குழு மற்றும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்ட அணிக்கு அகத்தூண்டுதலாக இருந்ததாக தெரிவித்ததுடன், பாடசாலைச் சிறார்கள் இப்போட்டியில் பங்குபற்றி அரச கரும மொழிகள் கொள்கையில் ஆர்வத்தை ஏற்படுத்தியமைக்காக அவர்களைப் பாராட்டினார். அத்துடன், மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் வழங்கியிருந்த ஒத்துழைப்புக்களுக்காக தனது ஆழந்த நன்றிகளைத் தெரிவித்தார்.

இவ்வாறு கிடைத்த கட்டுரைகள் உள்நாட்டு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மொழித்துறை சார் நிபுணர் குழுவினால் மதிப்பீடு செய்யப்பட்டன. சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் முறையே பேராசிரியர். சந்தபோமி கொபரஹேவா (கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சிங்கள மொழிப் பீடத்தின் பிரிவுத் தலைவர்), கலாநிதி. கவிதா ராஜரத்னம் (களனியப் பல்கலைக்கழகத்தின் மொழியியற் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர்) மற்றும் பேராசிரியர். எஸ்.ஜீ.எஸ் சமரவீர (ருஹுனு பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழிப் பீடத்தின் பிரிவுத் தலைவர்) ஆகியோரால் பரீட்சிக்கப்பட்டன.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தினால் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவுடன் இணைந்து இப்போட்டியில் வெற்றிபெற்ற கட்டுரைகளை உள்ளடக்கி வெளியிடப்பட்ட நூல் தமது கைகளில் தவழ்வதைக்  கண்டு இளம் வெற்றி வீரர்கள் பெருமகிழ்ச்சியடைந்தனர். திரு. தொன். ஈ ப்ரோனெல் அவர்கள், ”இந்நூலிலுள்ள கட்டுரைகள் சிறுவர்களால் எழுதப்பட்ட வெறும் கட்டுரைத் தொகுப்பல்ல. மாறாக, மொழியின் சக்தியையும் வல்லமையையும் நன்கு புரிந்துகொண்டுள்ள சிறுவர்களின் இளமை ததும்பும் உணர்ச்சி மற்றும் வாய்மையைப் பிரதிபலிக்கும் அற்புதமான சான்றுகளாகும்” என்று குறிப்பி்ட்டார். இந்த இளம் சிறுவர்களின் கட்டுரைகள் தேசத்துக்கான பரிசுகள் என்பதாலேயே தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் வெற்றிபெற்ற கட்டுரைகளை ஒரு கையேடாக பிரசுரம் செய்வதற்குத் தீர்மானித்தது.

மொழி உரிமைகள் மற்றும் பன்முகத்தன்மைக்கு மதிப்பளிப்பது தொடர்பான அனைத்து முக்கியமான கலந்துரையாடல்களிலும் இலங்கை வாழும் இளவயதினரை தொடர்ச்சியாக ஈடுபடுத்தும் இவ்வாறான நடவடிக்கையை ஆரம்பித்து வைப்பதில் அரச கரும மொழிகள் ஆணைக்குழு அர்ப்பணிப்புடன் ஈடுபடுகின்றது. அனைத்து இலங்கைப் பிரஜைகளின் மொழி உரிமைகளின் பாதுகாவலன் என்ற வகையில் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவுக்கு அதன் பணிப்பாணையைப் பூர்த்திசெய்வதற்குத் துறைசார் உதவிகள் தேவைப்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் தொடர்ந்து ஒத்துழைப்புக்களை வழங்கும்.