மொழி உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரக கரும மொழிக் கொள்கையை அமுல்படுத்துதல்.

மொழி என்பது அடையாளத்தின் முக்கியமானதொரு சின்னமாகும். அது மனித தொடர்பாடலில் இன்றியமையாத அம்சமாக இருந்து வருகின்றது. அவ்வகையில், ஒவ்வொரு நாடும், அரசாங்கமும்  நாட்டின் அனைத்துப் பிரஜைகளின் மொழி உரிமைகளைப் பேணுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமானது. இலங்கையில் பல்வேறு இனச் சமூகங்களின் அதிகாரம் மற்றும் வளங்களுக்கான போராட்டத்தில் மொழி உரிமைகள் குறிப்பிடத்தக்கதொரு வகிபாகத்தினை ஆற்றி வருகின்றன. 1956 ஆம் ஆண்டு தமிழ் மொழியைப் புறக்கணித்துவிட்டு சிங்களத்தை தேசிய மற்றும் அரச கரும மொழியாகப் பிரகடனப்படுத்திய தனிச்  சிங்களச் சட்டமானது நாட்டில் அரச கரும மொழிக்கொள்கை அமுல்படுத்தலில் மிகவும் நெருக்கடியான அத்தியாயமாகவே கருதப்படுகின்றது. ஏனெனில், நாட்டின் பொருளாதாரத்தையும் கலாச்சார முன்னேற்றத்தையும் படுவீழ்ச்சிப் பாதையில் கொண்டுசென்ற மூன்று தசாப்தங்களாக நீடித்த சிவில் போராட்டத்துக்கான மூலக்காரணமாக இருந்தது இத்தீர்மானமாகும்.  இலங்கை சனநாயக சோசலிஸக் குடியரசின் அரசியமைப்பின் IV ஆம் அத்தியாயத்தில் மொழி உரிமைகளுடன் தொடர்புடைய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் 13 ஆம் மற்றும் 16 ஆம் திருத்தங்களில் சிங்களம் மற்றும் தமிழ் அரச கரும மற்றும் தேசிய மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் ஆங்கிலத்துக்கு இணைப்பு மொழி என்ற அந்தஸ்த்தும் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், அரச கரும மொழிக் கொள்கையின் அமுல்படுத்தலில் அவதானிக்கப்படுகின்ற தோல்விகளுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதற்கு நிறுவன மற்றும் அரசியல் மட்டங்களில் அதிகமான மாற்றங்கள் தேவைப்படுவதாக கற்ற சமூகம் என்ற வகையில் நாம் நம்புகிறோம். நாட்டின் அதியுயர் சட்டமாகக் கருதப்படுகின்ற அரசியலமைப்பில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கு சம அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள போதிலும் அமுல்படுத்தற் செயன்முறையில் அடிக்கடி பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. இலங்கை போன்ற பன்மொழி நாட்டில் இயல்பாகவே ஒரு மொழியை (பொதுவாக பெரும்பான்மை மக்களின் மொழியை) சிறுபான்மையினரின் மொழியை/மொழிகளை விட உயர்வாகக் கருதும் மனோபாவம் காணப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில், மொழி ரீதியாக சிறுபான்மையினராக இருக்கும் மக்களின் தேவைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்கி அவர்களின் சொந்த மொழியைப் பயன்படுத்தி தமக்கு தேவையான சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் விதத்தில் அவர்களை வலுவூட்டுவது முக்கியமானதென கற்ற சமூகம் என்ற வகையில் நாம் நம்புகிறோம். நாம் அவ்வாறு செய்யத் தவறினால் மனித சமூகத்தின் பெறுமானங்கள் மோசமாகப் பாதிப்புக்குள்ளாகும். எனவே, அமைச்சுக்கள், திணைக்களங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் ஏனைய  நிறுவனங்களில் கடமையாற்றும் முகவர்கள் அரச கரும மொழிக் கொள்கையின் வினைத்திறன்மிக்க அமுல்படுத்தல் செயன்முறையில் செயலார்வத்துடன் செயற்படுவது மிகவும் அவசியமானது. தற்போது உண்மையிலேயே மும்மொழிக் கொள்கை முறையாக இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தாலும் நாட்டின் அதிகமான பாகங்களில் சிங்கள மொழியில் மாத்திரமே சேவைகள் வழங்கப்படுவதுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழியில் மாத்திரமே அத்தியாவசியமான ஆவணங்கள் கையாளப்படுகின்றமை அரச நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் அரச மொழிக் கொள்கையை புறக்கணித்து அசிரத்தையுடன் நடந்துகொள்வதற்கான தெளிவான சான்றாகும்.

 இவ்வாறான வினைத்திறனற்ற சூழ்நிலையிலும் இலங்கையின் களனிய, சப்ரகமுவை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய  மூன்று பல்கலைக்கழகங்களிலும் கலைமானி (சிறப்பு(ப்))  பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன் கடந்த வருடம் கிழக்குப் பல்கலைக்கழகமும் இச்சவாலை ஏற்று பட்டப்படிப்பினை ஆரம்பித்தது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் கனடா அரசாங்கத்துக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் பயனாகவே பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கனடா அரசாங்கத்தின் நிதி அனுசரணையுடன் செயற்படுகின்ற தேசிய மொழிக் கருத்திட்டத்தினாலேயே இக்கலந்துரையாடலுக்கான தளம் உருவாக்கப்பட்டது. மொழிபெயர்ப்புக் கற்கைகளில் கலைமானி (சிறப்பு(ப்)) பட்ட நிகழ்த்திட்டத்தின் மிகவும் பிரதான குறிக்கோள்களுள் ஒன்று யாதெனில் நாட்டின் சகல பிரஜைகளதும் மொழித் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்குப் போதிய ஆற்றலுள்ள மும்மொழி மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் உரைபெயர்ப்பாளர்களை உருவாக்கி நாட்டின் அரச கரும மொழிக்கொள்கையின் அமுல்படுத்தலில் கற்ற இளம் பருவத்தினரின் செயலார்வமிக்க ஈடுபாட்டுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதாகும்.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டமானது, விஷேடமாக அரச கரும மொழிக் கொள்கையின் அமுல்படுத்தலைப் பலப்படுத்துவதற்காக வடிவமைத்த ஒரு கருத்திட்டமாகும். இச்செயற்றிட்டமானது நாட்டு மக்களின் மொழி உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்துவதில் சிறப்பாகப் பங்களிப்புச் செய்வதுடன், அரச கரும மொழிக் கொள்கையின் வினைத்திறன்மிக்க அமுல்படுத்தலின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு அரச கரும மொழிகள் திணைக்களம், அரச கரும மொழி ஆணைக்குழு, தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சிக்கான நிறுவனம் மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுகின்றது.

நாட்டுப் பிரஜைகள் தமது சொந்த மொழியில் சேவைகளைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் விதத்தில் இலங்கை அரசாங்கத்தின் இயலுமைகளைப் பலப்படுத்துவதெற்கென தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் பல்வேறு நடவடிக்கைகளை ஒழுங்குசெய்துள்ளது. ஏற்கனவே கூறப்பட்டது போன்று நான்கு பல்கலைக்ககழகங்களின் அவதானத்தை ஈர்த்து அங்கு 2014 ஆம் ஆண்டில் கலைமானி (சிறப்பு(ப்)) பட்டத்தை ஆரம்பிப்பதில் தேசிய மொழிகள் மேம்பாட்டுச் செயற்றிட்டமே (அப்போது தேசிய மொழிக் கருத்திட்டம்) பின்னணியில் இருந்தது. அத்துடன், 2021 ஆம் ஆண்டில், தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் மொழிபெயர்ப்புப் போதனாவியல் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக ஒரு பயிற்சியை ஒழுங்கு செய்திருந்ததுடன், அது கடனா நாட்டின் ஒட்டாவா பல்கலைக்ககழகத்தின், மொழிபெயர்ப்புப் பீடத்தின் பேராசிரியர் மல்கம் வில்லியம்ஸ் அவர்களால் நடாத்தப்பட்டதுடன், அந்த அமர்வுகளில் பகிரப்பட்ட அறிவு மற்றும் வெளிக்கொணரப்பட்ட அம்சங்களிலிருந்து நான்கு பல்கலைக்கழகங்களின் கல்வியிலாளர்கள் பயனடைந்தனர். மேலும், தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தினால் துவங்கப்பட்ட தொழில்சார் கற்றல் சமூகம் மொழிபெயர்ப்புக் கற்கைகளில் சிறப்புப் பட்ட நிகழ்ச்சித்திட்டத்தினை மேம்படுத்துவதில் மிகவும் வினைத்திறனுடன் செயற்பட்டது. அத்துடன், தொழில்சார் கற்றல் சமூகம் மொழிபெயர்ப்புக் கற்கைகள் மற்றும் உரைபெயர்ப்பில் சர்வதேச சஞ்சிகை ஒன்றினை ஆரம்பித்து துறைசார் கல்வியியலாளர்கள், தொழில் வல்லுநர்கள், மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு தமது சிறப்புத் தேர்ச்சி மற்றும் ஆர்வத்தை வெளிக்கொணரும் விதத்தில் விலைமதிப்பிட முடியாததொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்குத் தீர்மானித்துள்ளது. மேலும், சுற்றுச்சூழலுடன் இணைந்து மொழியைக் கற்குமாறு மாணவர்களை ஊக்குவிப்பதற்காக தொழில்சார் கற்றல் சமூகம் மாணவர் கருத்துப் பரிமாற்றல் நிகழ்ச்சித்திட்டத்தினை பரிந்துரைத்துள்ளது. மேலும், அரச கரும மொழிக் கொள்கையின் அமுல்படுத்தல் செயன்முறையில் கல்வியியலாளர்கள் மற்றும் பட்ட முன் மாணவர்களின் வினைத்திறன்மிக்க பங்களிப்பினை உறுதிப்படுத்துவதற்காக தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் அவர்களுக்கு ஒத்துழைப்பினை வழங்கியுள்ளது.

ஒரு நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் இன நல்லுறவில் மொழி ஏற்படுத்தும் தாக்கம் மிகவும் முக்கியமானது. இலங்கையில், குறிப்பாக சிறுபான்மை மக்களின் மொழி உரிமைகள் பற்றி பொது மக்களின் உணர்திறனும் மதிப்பும் குறைவு. அந்த வகையில், அனைத்து அரச நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் அரச கரும மொழிக்கொள்கையை வினைத்திறனுடன் அமுல்படுத்தி மக்களின் மொழி ரீதியான உரிமைகளை உறுதிப்படுத்துவதற்குப் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  தேசிய மொழிகள் மேம்பாட்டுச் செயற்றிட்டம் வறுமை, பாலின சமமின்மை, பால்நிலை அடிப்படையிலான வன்முறை மற்றும் பல்வேறு முரண்பாடுகளில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் அதே வேளை இலங்கை சமூகத்தின் அதிமுக்கியமான தேவையாகக் கருதப்படுகின்ற மொழி  உரிமைகளை உறுதிப்படுத்துதல் எனும் குறிக்கோளை எய்துவதற்கு ஆற்றும் பங்களிப்பு மெச்சத்தக்கதும் சிறந்த முன்னுதாரணுமும் ஆகும்.

பேராசிரியர். மனோஜ் ஆரியரத்ன

மதுக ஹன்சினி

மொழிகள் திணைக்களம்

இலங்கை சப்ரகமுவைப் பல்கலைக்கழகம்

பெலிஹுலோய

Spread the love