சகலரையும் உட்படுத்துதல் மற்றும் உரிமை கொண்டிருப்பதில் மொழியின் வகிபாகம்

இலங்கையர்களிடையே மொழி தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் தோற்றுவித்துள்ள விருப்பு வெறுப்புக்களுக்கு நீண்ட நெடிய வரலாறு இருந்தாலும் மொழிப் பிரச்சினை இன்னும் முடிந்தபாடில்லை. சமாதானத்துக்காக குரலெழுப்புவோர் மற்றும் தமிழ் மொழி பேசும் மக்களின் எதிர்பார்ப்புக்கள் எவ்வாறிருப்பினும் சுதந்திர தின நிகழ்வுகள், அரச மற்றும் தனியார் வைபவங்களில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே இசைக்கப்படுகின்றது. அந்த வகையில், இலங்கை அடுத்த வருடம் கொண்டாடவுள்ள 75 ஆவது சுதந்திர தின நிகழ்வை மாற்றத்துக்கான புதிய சந்தர்ப்பமாகக் கருதலாம்.

மொழி ஒரு குழுவினுள் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான வழிமுறையாக இருப்பதுடன் அது குழுக்களிடையே எல்லைகளை நிர்வகிப்பதற்கான இடைத்தொடர்பு ஊடகமாகும். எனவே, ஒரு மொழி எதிர்கொள்ளும் அச்சுறுத்தலானது ஒரு குழுவின் அடையாளத்துக்கான அச்சுறுத்தலாகவே இருக்கும். ஏனெனில், மனித இனம் அதன் தாய் மொழியில் சிறந்து விளங்குவதுடன் அதனை மிகவும் உயர்வாக மதிக்கின்றது. எனவே, தமது தாய் மொழிக்கு உரிய அந்தஸ்த்து கிடைக்காத விடத்து தாம் நசுக்கப்படுவதாகவும் அச்சுறுத்தப்படுவதாகவும் உணர்கின்றனர். உயர் வர்க்கக் குழுவினர் மாத்திரம் கதைக்காத ஆனால் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் கதைத்த மொழிக்குப் பதிலாக காலணித்துவ அதிகார வர்க்கத்தின் மொழியான ஆங்கிலத்தை மாற்றீடு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்த போது 1956 ஆம் ஆண்டு நாடு முழுவதும் இவ்வாறானதொரு விவாதம் இடம்பெற்றது.

சுமார் 25 வீதத்துக்கும் மேற்பட்ட மக்களும் நான்கு பிரதான இனக்குழுமங்களும் (இலங்கைத் தமிழர், இந்தியப் பூர்வீகத்தைக்கொண்ட தமிழர் மற்றும் முஸ்லிம்கள்) தமது தாய் மொழியான தமிழ் மொழியிலேயே கதைக்கின்றனர். சிங்களத்துடன் இணைந்து தமிழ் மொழியும் அரச கரும மொழியாக இருக்குமென நியாயமான எதிர்பார்ப்புக்கள் இருந்தாலும் இவ்விடயம் சாத்தியப்படவில்லை. சர்வதேச ரீதியிலும் பலராலும் பேசப்படும் தமிழ் மொழிக்கு நிகராக சிங்கள மொழியை வாழ வைக்க வேண்டுமெனின் சிங்கள மொழிக்கு சிறப்புப் பாதுகாப்பு வேண்டுமென பெரும்பான்மையான சிங்கள மக்கள் ஆதங்கப்பட்டனர்.

உண்மையில், கடந்த பல தசாப்தங்களாக இடம்பெற்ற மொழிக் கலவரங்கள் கசப்பான நினைவுகளாகும். 1987 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் ஒரு அரச கரும மொழியாக இருந்து வந்தாலும், அடுத்தடுத்து ஆட்சிபீடமேறிய அரசாங்கங்களின் முன்னுரிமைப்படுத்தல்களுக்கும் பாரபட்சமான செயற்பாடுகளின் தாக்கத்தை உணராது பொடுபோக்காக நடந்துகொள்வோருக்கும் மத்தியில் இச்சட்டத்தின் அமுல்படுத்தலை உறுதிப்படுத்துவது பெரும் சவாலுக்குரிய விடயமாகவே இருந்து வந்துள்ளது.

இன்று சிவில் சமூகத்திலும் கூட அடுத்த மொழியைப் பயன்படுத்த வேண்டுமென்ற ஆர்வம் அல்லது  அடுத்த மொழிக்கு சமத்துவம் வழங்க வேண்டுமென்ற எண்ணம் இருப்பதாக எளிதில் வலியுறுத்த முடியாதுள்ளது. ஏனெனில், முழுமையாகவே சிங்கள மொழியில் இடம்பெறும் கலந்துரையாடல்களிலிருந்து தமிழ் மொழி பேசும் மக்கள் சிங்கள மொழியில் பாண்டித்தியம் இல்லாத போது பெரும்பாலும் விலகி இருக்க வேண்டிய நிலை இருப்பது போன்று,  இதற்கு நேர்மாறாக தமிழ்ப் பெரும்பான்மைப் பிரதேசங்களில் சிங்களம் பேசும் மக்களுக்கு கலந்துரையாடல்களிலிருந்து விலகியிருக்க வேண்டிய நிலை இருப்பதும் உண்மை.

அந்த வகையில், தேசிய சமாதானப் பேரவை (NPC) தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் சமூக இசைவினைக் கட்டியெழுப்பும் நோக்கில் பரந்தளவிலான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது. பிரதேச மட்டத்தில் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் அரசாங்கம் தனது ஒத்துழைப்பினை வழங்கிக்கொண்டிருக்கின்றது. கடந்த காலங்களில் சமூகங்களுக்கிடையிலான முரண்பாடுகள் சொத்து மற்றும் உயிர்களின் அழிவுக்கு வித்திட்டதால் அரசாங்க உத்தியோகத்தர்கள் தமது பிரதேசங்களில் இத்தகைய முரண்பாடுகள் மீண்டும் ஏற்படுவதை விரும்புவதில்லை. அந்த வகையில், வலுக்கட்டாயப்படுத்தப்படாத முறைகளினூடாக எழும் குழப்பங்களைக் கையாளுவதற்குத் தேவையான ஆற்றலை விருத்தி செய்துகொள்ளவும் கூர்ந்து கவனித்தாலன்றி வெளிப்படையாகப் புரிந்துகொள்ள முடியாத பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளும் விதத்தில் தமது ஆற்றல்களைப் பலப்படுத்தவும் அரசாங்க உத்தியோகத்தர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர்.

தேசிய சமாதானப் பேரவை, தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தினூடாக பாலின உணர்திறன் மற்றும் அரச உத்தியோகத்தர்களின் இரு மொழித் தொடர்பாடல் திறன்களைப் பலப்படுத்துவதுடன் தேசிய மட்டங்களில் இரண்டு அரச கரும மொழிகளிலும் (சிங்களம் மற்றும் தமிழ்) சேவைகளை வழங்கும் விதத்தில் அவர்களின் ஆற்றலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் நடாத்துகின்றது. அத்துடன், பிரதேச சமூகக் குழுக்கள் மற்றும் பிரதேச சமூகங்களுக்கிடையிலான குழுக்கள் அரச நிறுவனங்களின் செயலாற்றுகையை மதிப்பீடு செய்வதுடன் பொருத்தமான மறுசீரமைப்புக்களையும் பரிந்துரைக்கின்றன.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் ஒத்துழைப்புடன் பேருவலை, திருகோணமலை மற்றும் அக்குரணைப் பிரதேசங்களில் மொழிச் செயற்றிட்டமொன்றினூடாக அரச உத்தியோகத்தர்களுக்கு அடுத்த சமூகத்தின் மொழியைக் கற்பிக்கக் கிடைத்தமை சிறந்ததொரு வாய்ப்பாக தேசிய சமாதானப் பேரைவை கருதுகின்றது. இந்த அரச உத்தியோகத்தர்கள் முன்னணி சேவை வழங்குநர்களாகும். மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை முழுமையாக விளங்கி பூரண அங்கீகாரத்துடன் சிறப்பான சேவைகளை வழங்குவதற்கு இரு மொழி ஆற்றல் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அத்துடன், அடுத்த மொழி பரவலாகப் பயன்படுத்தப்படுகின்ற ஒரு பகுதிக்கு கருத்துப் பரிமாற்றல் விஜயத்தினை மேற்கொண்டு அங்கு மொழிப் பிரச்சினைகள் எவ்வாறு தீர்த்து வைக்கப்படுகின்றன என அடையாளப்படுத்துவதோடு அப்பகுதி மக்களுடன் நட்பினைக் கட்டியெழுப்புவது இச்செயற்றிட்டத்தின் முக்கியமானதொரு நோக்கமாகும். அதன் மற்றுமொரு நடவடிக்கை யாதெனில், அரச நிறுவனங்கள் தொடர்பாக ஒரு மாதிரியை கணக்காய்வுக்குட்படுத்தி அரசாங்கத்தின் மொழிக் கொள்கையைப் பலப்படுத்த வேண்டிய நிறுவனங்களையும் பூரணப்படுத்த வேண்டிய இடைவெளிகளையும் இனங்காண்பதாகும்.

எனவே, மேற்கூறப்பட்டவாறு அமுல்படுத்தப்பட்ட பணிகளுக்காக தேசிய சமாதானப் பேரவைக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமுள்ளதுடன், கம்பஹா, நுவரெலியா, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் வவுனியா உட்பட அண்டைய மற்றும் தூரப் பிரதேசங்களிலிருந்து தம்முடன் இணைந்து பணியாற்றுமாறு தேசிய சமாதானப் பேரவைக்கு அழைப்புக்கள் வந்த வண்ணமுள்ளன. மேலும், மொழி காரணமாக ஒருவரும் ஒதுக்கப்படாது அனைவரையும் உள்ளடக்கிய நாட்டைக் கட்டியெழுப்பவும், இது அனைவருக்கும் உரித்தான நாடு என்ற உணர்வை மேலோங்கச் செய்வதற்கும் நாம் செயற்படுத்தும் முயற்சிகளுக்கு தாராள மனப்பான்மையுடன் உதவும் கனடா நாட்டு மக்களுக்கு எமது பாராட்டுக்களும் நன்றிகளும் என்றும் உரித்தாகும்.

 

கலாநிதி ஜெஹான் பெரேரா

நிறைவேற்றுப் பணிப்பாளர்

இலங்கை தேசிய சமாதானப் பேரவை.