முன்னேற்றத்தை மீளாய்வுசெய்து எதிர்கால வேலைத்திட்டங்களைத் திட்டமிடுவதற்கென மொழித்துறை உத்தியோகத்தர்கள் சந்திக்கின்றனர்.

வருடாந்த வேலைத்திட்டங்களைத் திட்டமிடுவதற்கான கரிசனையாளர் செயமர்வினை தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் (NLEAP)  நடாத்துகின்றது.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் வருடாந்த வேலைத்திட்டங்களைத் திட்டமிடுவதற்கென மொழித்துறைப் பாதுகாவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு செப்டம்பர்  மாதம் 06 ஆம் திகதி செயலமர்வொன்றினை நடாத்தியது. இச்செயலமர்வில்  பொது நிருவாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவு (NLD), அரசகரும மொழிகள் ஆணைக்குழு (OLC), அரசகரும மொழிகள் திணைக்களம் (DOL) மற்றும் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சிக்கான நிறுவனம் (NILET) ஆகிய நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர். குறித்த செயலமர்வானது  தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் பங்காளி அல்லது கூட்டாளர் நிறுவனங்களுக்கு இதுவரையிலான தமது அடைவுகளை மீளாய்வுக்குட்படுத்தவும் எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிடவும் ஒரு வாய்ப்பாக அமைந்திருந்தது.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டமென்பது கனடா அரசாங்கத்தின் 10.85 மில்லியன்  கனேடிய டொலர் நிதியுதவியின் கீழ் 4 ½  ஆண்டுகாலத்தினை இலக்காகக்கொண்டு இலங்கையின் அரச நிறுவனங்களால் அரசகரும மொழிகள் கொள்கையை அமுல்படுத்துவதைப் பலப்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதுடன், குறித்த திட்டம் ஆரம்பத்தில் 2022 டிசம்பர் மாதத்துடன் நிறைவுக்கு வருமென உத்தேசித்திருந்தது. எனினும், 2018 ஆம் ஆண்டில் நாட்டில் நிலவிய அரசியல் நெருக்கடி, 2019 ஆம் ஆண்டு உயிர்த்தஞாயிறு குண்டுத்தாக்குதலின் எதிரொலிகள், 2020 முதல் 2021 வரை கொவிட் 19 தொற்றுநோயின் பரவலைத் தணிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் 2022 ஆம் ஆண்டில் நாடு எதிர்கொண்ட அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் போன்ற பல்வேறு காரணங்களால் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்துக்கு அதன் உத்தேச அடைவுகளுள்  ஒரு சில முக்கிய மைல்கற்களை சாதித்துக்கொள்ள முடியவில்லை. ஆதலால், 2023 ஜுலை வரையிலான உத்தேச செலவற்ற நீடிப்பினூடாக இச்செயற்றிட்டத்தின் காலஎல்லை முடிவடைதற்கு முன்பு இதுவரையில் எய்த தவறியுள்ள ஒரு சில இலக்குகளையாவது அடைந்துகொள்ள முடியுமென கருதுகின்றது.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் செயற்றிட்டப் பிரதிப் பணிப்பாளர் திரு. எம். திருநாவுக்கரசு அவர்கள் இச்செயலமர்வுக்கு சமூகமளித்திருந்த கூட்டாளர் நிறுவனங்களை வரவேற்று உரைநிகழ்த்தியதோடு பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் அரசகரும மொழிகள் கொள்கையின் வினைத்திறன்மிகு அமுல்படுத்தலை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அத்துடன்,  இச்செயலமர்வின் குறிக்கோள்களை கோடிட்டுக்காட்டி உரையாற்றிய அம்மணி. வீனா வர்மா (கனடாவினை மையப்படுத்திய செயற்றிட்டப் பணிப்பாளர், மற்றும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் மனித உரிமைகள், பாலின மற்றும் ஆளுகை ஆலோசகர்) அவர்கள் செலவற்ற நீடிப்பு முன்மொழிவுகளைப் பற்றி சுருக்கமான விடயங்களை பகிர்ந்துகொண்டதோடு 2022 – 2023 ஆண்டுக்கான முன்னேற்ற இலக்குகளை மீண்டும் சரிபார்த்தார். அடுத்ததாக, அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவின் மேலதிக செயலாளர் அம்மணி. விஜயலட்சுமி அவர்கள், இச்செயற்றிட்டம் அதன் இறுதிக்கட்டத்தினை அடைந்துள்ள வேளையில் இச்செயலமர்வு முக்கியமான தீர்மானமிக்க தருணமாக இருக்குமென சுட்டிக்காட்டினார். அதனைத்தொடர்ந்து, தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்ட அணி அதன் முன்னளிப்பில் 2022 இறுதிக்காலாண்டு வரையிலான நடவடிக்கைகளின் ஒட்டுமொத்த முன்னேற்றம் மற்றும் இறுதிக்காலாண்டில் திட்டமிட்டுள்ள நடவடிக்கைகளை கோடிட்டுக்காட்டியது. இது  ஒவ்வொரு நிறுவனத்ததிற்கும்  2023 ஜுலை வரையிலான வேலைத்திட்டங்கள் பற்றி குழுக்கலந்துரையாடலை நடாத்துவதற்கு களம் அமைத்துக்கொடுத்தது.. மேலும், ஒவ்வொரு நிறுவனத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற உத்தியோகத்தர்கள் தத்தமது வருடாந்த வேலைத்திட்டங்களை முன்வைத்தனர். இது மொழித்துறை பற்றிய மேலதிக கலந்துரையாடலுக்கும் கூட்டொத்துழைப்புக்கும் ஊக்குவிப்பாக அமைந்திருந்தது. எனவே, மொழிக் கொள்கையை நடைமுறைவடிவில் கொண்டுவரும்போது அங்கு முழுமையான அணுகுமுறை பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு  இவ்வாறான மன்றங்கள் முக்கியமானவை.