அனைவரையும் உள்ளடக்கிய, பாலின உணர்திறனுடைய அரச சேவைகளைக் கட்டியெழுப்புதல் எனும் இலக்கை நோக்கி !

அரச சேவைகள் மற்றும் தொடர்பாடலை மேம்படுத்துவதற்கென விருத்திசெய்துள்ள இரண்டு பயிற்சிக் கைநூல்களை மீளாய்வு செய்வதற்கான கரிசனையாளர் கூட்டங்களுக்கு தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் அனுசரணை வழங்குகின்றது.

 தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் கடந்த 2022 செப்டம்பர் 15 ஆம் திகதி கரிசனையாளர் நிபுணத்துவ ஆலோசனை அமர்வினை நடாத்தி அதன் பங்காளி நிறுவனங்களான பொது நிருவாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவு, அரசகரும மொழிகள் ஆணைக்குழு (OLC), அரசகரும மொழிகள் திணைக்களம் (DOL) மற்றும் மொழிக்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய நிறுவனம் (NILET) என்பவற்றுக்கு பயிற்சி மற்றும் எளிதாக்கல் கைநூல்களின் இரண்டு வரைபுகளையும் அறிமுகப்படுத்தியது. குறித்த இரு கைநூல்களும் “மொழி-அல்லாத / வாய்மொழி-சாராத தொடர்பாடலை இலகுபடுத்தும் கைநூலை மதிப்பிடுதல்” மற்றும் “பாலின சமத்துவம், பெண்களின் வலுவூட்டுதல் மற்றும் மொழி உரிமைகளுடனான உறவு தொடர்பான  பிரதான பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சிக் கைநூல்” என்ற தலைப்புக்களில் தயாரிக்கப்பட்டுள்ளதோடு, அவை அரசகரும மொழிகள் கொள்கையின் வினைத்திறன்மிக்க அமுல்படுத்தலை உறுதிப்படுத்துவதில் முக்கியமானதொரு வகிபாகத்தினை நிறைவேற்றுகின்ற இந்நிறுவனங்களின் பயிற்சி மற்றும் இலகுபடுத்தல் பாடத்திட்டத்துக்கு மேலும் வலுசேர்க்கும்.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் செயற்றிட்டப் பிரதிப் பணிப்பாளர் திரு. எம். திருநாவுக்கரசு அவர்கள் தனது வரவேற்புரையில், “அரச சேவைகளை வினைத்திறனுடன் வழங்குவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்ற மொழி-அல்லாத தொடர்பாடல் தடைகளுக்குத் தீர்வுகாண்பதற்காக பாலின உணர்திறன் மற்றும்   பன்முகத்தன்மையை உள்ளடக்கிய மூலோபாயங்களை விருத்திசெய்வதற்காக தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டமானது தேசிய மொழிகள் பிரிவு மற்றும் அதன் இதர பங்காளி நிறுவனங்களுக்கு நல்கிய தொழிநுட்ப உதவியின் முக்கியமானதொரு பெறுபேறே இந்த இரு கைநூல்களுமாகும்” என சுட்டிக்காட்டினார். மேலும், இவ்வமர்வின் நோக்கம் மற்றும் குறிக்கோள்களைக் கோடிட்டுக்காட்டி உரையாற்றிய அம்மணி. வீனா வர்மா அவர்கள், ( கனடா நாட்டை மையப்படுத்திய செயற்றிட்டப் பணிப்பாளர், மற்றும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் மனித உரிமைகள், ஆண் பெண் பால்நிலை மற்றும் ஆளுகை ஆலோசகர்), குறித்த கைநூல்கள் பங்கேற்பாளர்களின் பயிற்சிப் பாடவிதானத்தின் மிகவும் முக்கியமானதொரு பகுதியாக அமையவிருப்பதனால் அவை தொடர்பாக நேர்மையான, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய பின்னூட்டல்களை வழங்குமாறு ஊக்குவித்தார். அதனைத் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சின் மேலதிக செயலாளர் அம்மணி. ஆர். விஜயலட்சுமி அவர்கள், மொழித் திட்டமிடற் பயிற்சிகள் மற்றும் புதிய அரச உத்தியோகத்தர்களுக்கான பணிப்பயிற்சி அமர்வுகளில் இக்கைநூல்களைப் பயன்படுத்துவதனூடாக மொழி- அல்லாத மற்றும் வாய்மொழி அல்லாத தொடர்பாடல் தடைகள் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்த முடியுமென சுட்டிக்காட்டியதோடு அரச சேவை நிறுவனங்களில் அனைவரையும் உள்ளடக்கிய, பாலின உணர்திறன்மிக்க சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கு வழிகோலுமென்றும் தெரிவித்தார். மேலும், இக்கைநூல்கள் அரசகரும மொழிகள் திணைக்களத்தின் மொழிபெயர்ப்புப் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சிக்கான நிறுவனத்தின் இரண்டாம் மொழி ஆசிரியர்கள் ஆகியோர் தமது கற்பித்தல் பாடவிதானத்தில் பாலின சமத்துவம், பெண்களின் வலுவூட்டல், பன்முகத்தன்மை, சகலரையும் உள்ளடக்கல் மற்றும் கலாச்சாரங்களுக்கிடையிலான தொடர்பாடல் ஆகிய அம்சங்களில் கவனம்செலுத்தும் விதத்தில் அவர்களின் ஆற்றல்கள், திறன்களை மேலும் பலப்படுத்தும்.

தொடர்ந்து, “மொழி-அல்லாத / வாய்மொழி-சாராத தொடர்பாடலை இலகுபடுத்தும் கைநூலை மதிப்பிடுதல்” எனும் தலைப்பில் அம்மணி. மல்ராஜி வன்னியாரச்சி (தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் இயற்றிறன் விருத்தி மற்றும் ஆளுகை விஷேட நிபுணர்) தனது முன்னளிப்பினை முன்வைத்தார். கனடாவின் வெளிநாட்டுச் சேவை நிறுவனத்தின் கலாச்சாரங்களுக்கிடையிலான கற்றல் மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்புடன் விருத்திசெய்துள்ள இக்கைநூலானது பயிற்றுவிப்பாளர்களுக்கு அதிக பங்கேற்புடனான நேருக்கு நேர் கற்றல் அனுபவங்களை வழங்குவதற்குப் பயன்படுத்தக்கூடியவாறான கட்டமைப்பினை வழங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 “பாலின சமத்துவம், பெண்களின் வலுவூட்டுதல் மற்றும் மொழி உரிமைகளுடனான உறவு தொடர்பான  பிரதான பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சிக் கைநூலை” தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் பாலின சமத்துவம் தொடர்பான உள்நாட்டு விஷேட நிபுணர் அம்மணி. சாமா ராஜகருணா அவர்கள் அறிமுகப்படுத்தி உரையாற்றியதோடு, அது மொழி உரிமைகளை ஊக்குவிப்பதில் பணியாற்றுகின்ற பிரதான பயிற்றுவிப்பாளர்களுக்கு தமது பணிப்பரப்பெல்லையில் பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டலை இணைப்பதற்கான வளமாக இருக்குமென குறிப்பிட்டார்.  பாலினம் மற்றும் பாலின சமத்துவத்துடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள் தொடர்பான அவர்களின் புரிதலை மேம்படுத்துவதற்கும் பாலின சமத்துவம், பெண்களின் வலுவூட்டுதல் மற்றும் மொழி உரிமைகளுக்கிடையிலான தொடர்பு பற்றி ஒரு உள்நோக்கினை வழங்கும் விதமாகவும் இக்கைநூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முன்னளிப்பினைத் தொடர்ந்து குழுக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன் அங்கு பங்காளி நிறுவனங்கள் இறுதி வரைபு தொடர்பாக தெரிவித்த பின்னூட்டல்கள் விலைமதிப்பிட முடியாதவை. அத்துடன், இரு கைநூல்களையும் இறுதிப்படுத்தி, இற்றைப்படுத்தியதன் பின்னர் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் அதன் பங்காளி நிறுவனங்களின் பிரதான பயிற்றுவிப்பாளர்களுக்கு கைநூல்களின் உள்ளடக்கம் தொடர்பாகவும், அரச உத்தியோகத்தர்களால் அனைவரையும் உள்ளடக்கிய, பாலின உணர்திறன்மிக்க சேவை வழங்கல் இடம்பெறுவதை ஊக்குவிக்கும் விதத்திலும் அவர்களின் இயற்றிறனை கட்டியெழுப்பவதற்கென பயிற்சிச் செயலமர்வினை நடாத்துவதற்கு உத்தேசித்துள்ளது.