மொழித்துறையின் பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் தொடர்பில் முனைப்புடன் ஈடுபடுகின்ற பிரதானிகளின் வலையமைப்பாக்கல் (Networking) அங்குரார்ப்பணக் கூட்டம் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் தலைமையில் இடம்பெற்றது.

அரச சேவைகளில் பாலின உணர்திறன்மிக்க இருமொழி வழங்கலை உறுதிப்படுத்துவதற்கான மைல்கல்.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் அதன் பங்காளி நிறுவனங்களில் பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் தொடர்பில் முனைப்புடன் செயற்படுகின்ற பிரதானிகளின் வலையமைப்பாக்கக் கூட்டத்தினை பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவின் பூரண ஒத்துழைப்புடன் 2022 செப்டம்பர் 29 ஆம் திகதி தேசிய மொழிகள் பிரிவின் மாநாட்டு அறையில் நடாத்தியது. இந்நிகழ்வில் தேசிய மொழிகள் பிரிவின் கூட்டாளி நிறுவனங்கள், அரசகரும மொழிகள் ஆணைக்குழு (OLC), அரசகரும மொழிகள் திணைக்களம் (DOL) மற்றும் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சிக்கான நிறுவனம் என்பவற்றில் பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் தொடர்பில் முனைப்புடன் செயற்படுகின்ற பிரதானிகள் பங்கேற்றனர்.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் செயற்றிட்டப் பிரதிப் பணிப்பாளர் திரு. திருநாவுக்கரசு அவர்கள், தனது வரவேற்புரையில், பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் தொடர்பில் முனைப்புடன் செயற்படுகின்ற பிரதானிகள் தத்தமது நிறுவனங்களில் அனைவரையும் உள்ளடக்கிய சூழமைவினை உருவாக்கி அங்கு மொழி உரிமைகள் எனும் எண்ணக்கருவினுள் பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டலை மேம்படுத்துவது அவர்களின் முக்கியமானதொரு வகிபாகம் என வலியுறுத்தினார். தொடர்ந்து இந்த அமர்வின் நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்களை கோடிட்டுக்காட்டி உரையாற்றிய அம்மணி. வீனா வர்மா அவர்கள், (கனடா நாட்டை மையப்படுத்திய செயற்றிட்டப் பணிப்பாளர், மற்றும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் மனித உரிமைகள், பாலினம் மற்றும் ஆளுகை ஆலோசகர்), அரசகரும மொழிகள் கொள்கைக்கான மூலோபாய வரைவுத்திட்டத்தில் பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் எண்ணக்கரு உள்ளடக்கியிருப்பதற்காக  அமைச்சுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு அரச நிறுவனங்களால் பாலின சமத்துவத்துடனான இரு மொழி சேவைகள் வழங்கப்படுவதை ஊக்குவிப்பதற்கான மிகவும் முக்கியமானதொரு படிமுறையாக இது இருக்குமென எதிர்வுகூறினார். அத்துடன், அரசகரும மொழிகள் கொள்கையை அமுல்படுத்தும்போது மொழி உரிமைகள் எண்ணக்கருவினுள் பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டலை உறுதிப்படுத்துவது இப்பிரதானிகளின் பொறுப்பாகுமென மேலும் வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் பாலின சமத்துவம் தொடர்பான உள்நாட்டு விஷேட நிபுணர் அம்மணி. சாமா ராஜகருணா அவர்கள் அரசகரும மொழிகள் கொள்கையின் அமுல்படுத்தல் மூலோபாயத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் பகுதிகளை சுருக்கமாக பகிர்ந்துகொண்டார். இது பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டலில் முனைப்புடன் ஈடுபடுகின்ற பிரதானிகளுக்கு தமது வகிபாகம் தொடர்பாக தெளிவானதொரு புரிதலை வழங்கியது. மேலும், அவர் மொழி உரிமைகளைப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு நடாத்தும் போது பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் தொடர்பாக குறித்த பிரதானிகளின் பொறுப்புக்கள் மற்றும் விகபாகங்களை விளக்கினார்.

செயற்றிட்டத்தின் அடுத்த கட்டத்தில் நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ள பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் நடவடிக்கைகள் தொடர்பான முன்னளிப்பபானது பங்காளி நிறுவனங்களுக்கு மத்தியில் திறந்த கலந்துரையாடலுக்கு வழிகோலியதுடன் மொழி உரிமைகள் எண்ணக்கருவினுள் பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டலை முன்னுரிமைப்படுத்தும் போது எதிர்கொள்ள நேர்ந்த சவால்களைப் பற்றி கலந்துரையாடுவதற்கு பங்காளர்களுக்கு ஒரு களத்தையும் அமைத்துக்கொடுத்தது.

சகல உத்தியோகத்தர்களும் தமது பணியின் அனைத்து நிலைகளிலும் பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் எண்ணக்கருவினை முக்கியத்துவப்படுத்துவது அவர்களின் பொறுப்பாக இருக்கையில் குறித்த நிறுவனங்களில் இந்த எண்ணக்கருவின் மேம்பாட்டுக்காக நிறுவன ரீதியான கலாச்சாரத்தினை முன்னிலைப்படுத்துவது பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டலில் முனைப்புடன் ஈடுபடும் பிரதானிகளின் பொறுப்பாகும். அவ்வாறே, பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டலை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை இனங்காணவும்  பாலின பண்புத்தரத்துடன் தொடர்புடைய விடயங்கள் மொழி உரிமைகளில் எவ்வாறு தாக்கமேற்படுத்துமென  விழிப்புணர்வூட்ட வேண்டியதன் அவசியத்தையப் புரிந்துகொள்ளவும் சக உத்தியோகத்தர்களுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவது பிரதானிகளின் பொறுப்பாகும்.

எனவே, தேசிய மொழிகள் பிரிவு அதன் பங்காளி நிறுவனங்களுடன் இணைந்து காலத்துக்காலம் பயிற்சிகள், அனுபவப் பரிமாறல்கள் மற்றும் இணைப்புச் செயற்பாடுகளை மேம்படுத்துதல் போன்ற நோக்கங்களுக்காக கூட்டங்களை ஒழுங்குசெய்து பாலின எண்ணக்கரு தொடர்பாக முனைப்புடன் செயற்படுகின்ற பிரதானிகளின் ஆற்றல்களை மேலும் மேம்படுத்துகின்றது. அரசகரும மொழிகள் கொள்கையின் அமுல்படுத்தலைப் பலப்படுத்துவதற்காக தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தினால் இலங்கை நாட்டுக்கு வழங்குகின்ற தொழிநுட்ப உதவியின் மிக முக்கியமான மையப்புள்ளி மொழித்துறையில் கூட்டொத்துழைப்பினை ஊக்குவிப்பதாகும்.