இலங்கையின் அனைத்துப் பிரஜைகளதும் மொழி உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக அரச நிறுவனங்களின் இயற்றிறனைக் கட்டியெழுப்புதல்.

இலங்கையின் அனைத்துப் பிரஜைகளதும் மொழி உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக அரச நிறுவனங்களின் இயற்றிறனைக் கட்டியெழுப்புதல்.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம், பொது நிருவாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் (அமைச்சு) தேசிய மொழிகள் பிரிவுடன் இணைந்து மொழித் திட்டமிடல் பயிற்சிப் பட்டறைத் தொடர்களை நடாத்தியது. மொழித் திட்டமிடல் செயன்முறை தொடர்பான பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சியில் பங்கேற்ற 74 அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் இப் பயிற்சிப் பட்டறைகளில் பங்கேற்றனர். மத்திய மாகாணத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் செயலமர்வாக துவங்கிய குறித்த செயலமர்வுத் தொடர் வடமேல், கிழக்கு மற்றும் வடக்கு ஆகிய மாகாணங்களில் இறுதிக் காலாண்டு வரை தொடர்ச்சியாக இடம்பெற்றன.

தேசிய மொழிகள் பிரிவின் தொழிநுட்ப அணியின் தலைமையில் இடம்பெற்ற அமர்வுகளில் ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் தாம் விருத்திசெய்த மொழித் திட்டங்களைப் பற்றியும் அவற்றை அமுல்படுத்தும் போது எதிர்கொள்ள நேர்ந்த சவால்கள் தொடர்பாகவும் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இங்கு அதிகமானோர், மொழிக் குழுக்களில் வெவ்வேறு திணைக்களங்களை தொடர்புபடுத்துவது ஆரம்பத்தில் சவாலுக்குரியதாக இருந்ததாகவும், பின்னர் மொழித் திட்டங்கள் தொடர்பாக செயற்படத் துவங்கியதும் அவர்கள் எவ்வாறு மிகவும் ஆர்வத்துடன் அதில் பங்கேற்றனர் என்றும் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். மொழிக் கொள்கையை அமுல்படுத்தும் போது தமது நிறுவனங்களிலுள்ள இடைவெளிகளை அடையாளப்படுத்துவதற்கு மொழிக் குழுக்களுக்கு மொழித் திட்டமிடல் செயன்முறை மூலம் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதால் இருமொழி ஆளணிக்கு அல்லது மும்மொழி ஆவணப்படுத்தலில் ஏற்கனவே நிறுவனங்களிலுள்ள வளங்களிலிருந்து மிகச் சிறந்த பயன்களைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. மேலும், அனைத்துப் பிரஜைகளதும் மொழி உரிமைகளை உறுதிப்படுத்துவதென்பது ஒவ்வொரு அரச உத்தியோகத்தருக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ள ஒரு பொறுப்பாகும் என வெவ்வேறு திணைக்களங்களுக்கு மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கும், வகைகூறுவதற்கும் இச் செயன்முறை துணைபுரிந்தது என ஒருவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

மொழித் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக ஆக்கபூர்வமான தீர்வுகளை விருத்தி செய்யும் விதத்தில் நிறுவனங்களின் இயற்றிறனைக் கட்டியெழுப்புவது தொடர்பாகவும் குறித்த பயிற்சிப் பட்டறைகளில் கவனம் செலுத்தப்பட்டது.  அவ்வகையில், தற்போது இடம்பெற்று வருகின்ற மொழி உரிமைகள் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் இரண்டாம் மொழிக் கற்பித்தல் நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவற்றைப் பலப்படுத்துவதற்காக, குறிப்பாக சிவில் சமூக நிறுவனங்கள் மற்றும் வெவ்வேறு முகவர் நிறுவனங்களுடன் எவ்வாறு இணைப்புக்களை ஏற்படுத்தி அவற்றுடன் சம்பந்தப்பட்டு செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தலாம் என கண்டறிவதே இப் பயிற்சிப் பட்டறைகளின் அடிப்படை நோக்கமாக இருந்தது.

மொழித் திட்டமிடல் செயன்முறை தொடர்பான பயிற்றுவிப்பாளர்களுக்கான மூன்று நாள் பயிற்சி மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மொழித் திட்டமிடல் மீளாய்வுப் பயிற்சிப் பட்டறைகளில் 74 அரச நிறுவனங்கள் பங்கேற்றன. அந்த வகையில், 47 பிரதேச செயலகங்கள், 05 மாவட்டச் செயலகங்கள், 03 வைத்தியசாலைகள், 07 பொலிஸ் நிலையங்கள், 03 நீதி மன்றங்கள், 05 உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் 05 முதலமைச்சர் அலுவலகங்கள் பங்கேற்றன. குறித்த அலுவலகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற 151 உத்தியோகத்தர்களுக்கும் தமது நிறுவனங்களில் மொழித் திட்டங்களை விருத்தி செய்து அமுல்படுத்துவது தொடர்பாக சகல விடயங்களையும் உள்ளடக்கிய ஒரு பயிற்சியைப் பெற்றுக்கொள்வதற்கான சிறந்ததொரு வாய்ப்பாக அமைந்திருந்தது. தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் (சிங்களம் மற்றும் தமிழ்) ஆகிய இரு அரச கரும மொழிகளில் அரச சேவைகளை வழங்குவதற்காக முக்கிய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் இயற்றிறனை மேம்படுத்துவதற்காக மொழித் திட்டமிடல் செயன்முறை மிகவும் முக்கியமானது. அரச உத்தியோகத்தர்களின் பாலின உணர்திறன்மிக்க இரு மொழி தொடர்பாடல் திறன்களை பலப்படுத்துவதே இத் திட்டங்களின் மிக முக்கியமான அங்கமாகும்.

சகல பிரஜைகளதும் மொழி உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் இலக்கிற்கு துலங்கும் விதத்தில் கனடா அராங்கத்தின் ஒத்துழைப்புடன் வடிவமைக்கப்பட்ட செயற்றிட்டமே தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டமாகும். அலீனியா இன்டர்நஷனல் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் அரச கரும மொழிகள் கொள்கையின் வினைத்திறன்மிக்க அமுல்படுத்தலை உறுதிப்படுத்துவதற்காக அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்துள்ள நிறுவனங்களுடன் மிகவும் நெருக்கமாக தொடர்ந்து கருமமாற்றும்.

Spread the love