தேசிய மொழிகள் நிதியத்தின் வெற்றிக்கதைகள் : மனித உரிமைகள் அபிவிருத்திக்கான மத்திய நிலையம்

இன நல்லுறவின்மை எனும் இருளை அகற்றிட மொழி எனும் விளக்கை ஏற்றிடுவோம்.

தேசிய மொழிகள் நிதியத்தின் கூட்டாளி நிறுவனமான மனித உரிமைகள் அபிவிருத்திக்கான மத்திய நிலையம் இரண்டாம் மொழி வகுப்புக்களை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்தவர்களுக்கு அதன் மூன்றாவதும் இறுதியானதமான சான்றிதழ் வழங்கும் வைபத்தினை மிகவும் சிறப்பாக நடாத்தியது. அது மொழிகள் மற்றும் கலாச்சாரத்தின் வலிமையை உணர்த்தும் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது. இங்கு ஐம்பது (50) மணித்தியாலங்களைக் கொண்ட இரண்டாம் மொழிக் கற்கைப் பாடநெறியைப் பூர்த்திசெய்த வயது வந்த 500 பேர் தமது சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர். அவ்வகையில், இதுவரை குருணாகலையில் 1300 பேர் இரண்டாம் மொழியில் பயிற்சி பெற்றுள்ளனர். இவ்வாறு, மொழி கற்றோர் கவிதை, நாடகம், பாடல் மற்றும் நடனம் போன்ற பலவேறு கலையம்சங்களுடன் அரகேற்றிய நிகழ்ச்சிகள் குருணாகலையில் இரு மொழி சமூகங்களுக்கு மத்தியில் இரண்டாம் மொழி வகுப்புக்கள் எவ்வாறு இனங்களுக்கிடையில் நல்லுறவினை மேம்படுத்துகின்றது என்பதற்கான சிறந்த சான்றாக அமைந்திருந்தது. ஏனெனில், சிங்களம் மற்றும் தமிழ் மொழி பேசும் சமூகங்கள் ஒருவருக்கொருவர் ஆழமாக இணைக்கப்பட வேண்டுமென்பதற்காக மொழிக் கற்றல் வகுப்புக்கள் சிறப்பாக திட்டமிடப்பட்டிருந்தன. ஒருவருக்கொருவர் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் ஆற்றல் மேம்பட்டிருந்தது மாத்திரமன்றி அவர்கள் அடுத்தவர்களின் கலாச்சாரங்களின் செழுமை மற்றும் அழகை மனதாரப் பாராட்டி தாம் அனைவரும் இலங்கையர் என்ற ஆழமான உணர்வினை பறைசாட்டினர்.

மனித உரிமைகள் அபிவிருத்திக்கான மத்திய நிலையத்தினால் “கற்றல் செயற்றிட்டத்திற்கான நல்லிணக்கம்” எனும் தொனிப்பொருளின் கீழ் நடாத்தப்பட்ட இரண்டாம் மொழி வகுப்புக்களுக்கு தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தினால் நிர்வகிக்கப்படுகின்ற தேசிய மொழிகள் நிதியத்தினால் நிதியுதவி வழங்கப்பட்டது. இவ் இரண்டாம் மொழிக் கற்கை நெறிகள் சிங்களம் பேசும் சமூகங்களுக்கு தமிழ் மொழியையும் தமிழ் பேசும் சமூகங்களுக்கு சிங்கள மொழியையும் போதிக்கும் விதத்தில் திட்டமிடப்பட்டிருந்ததோடு இவ் வகுப்புக்களில் குருணாகலையில் வசிக்கின்ற 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இக் கற்கைநெறிகள் பிரதேச செயலகங்களின் மொழி உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் மாவட்டச் செயலகத்தின் தேசிய மொழி மேம்பாட்டு உத்தியோகத்தரின் மேற்பார்வையின் கீழ் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் பயிற்றுவிக்கப்பட்ட மொழி ஆசிரியர்களினால் நடாத்தப்பட்டன.

இங்கு இரண்டாம் மொழி கற்றவர்களைப் பாராட்டி உரையாற்றிய குருணாகலை மாட்டவ உதவிச் செயலாளர் திரு. ருவன் ஜயசுந்தர அவர்கள், இரு மொழிச் சமூகங்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளச் செய்வதில் மொழிகளின் இன்றியமையாத வகிபாகத்தினை கோடிட்டுக் காட்டினார்.

மேலும், அவர் “வடக்கிற்குச் சென்றால் நாம் அங்கு அந்நியர்கள் என்றும் தனிமையாக விடப்பட்டிருக்கிறோம் என்று உணர்கின்றோம். இது ஏன்? இது எமது சொந்த நாடு. ஏனெனில், அவர்கள் தமிழ் பேசுகின்றனர். ஆனால், எங்களுக்கு தமிழ் தெரியாது. அவர்களுக்கு சிங்களம் தெரியாது. எங்களுக்கு ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ அல்லது எமது துன்பம், துயரங்களை பகிர்ந்துகொள்ளவோ முடியாது. என்றாலும், நாம் ஒரே மக்கள்” என தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

தொடர்ந்து உரையாற்றிய   திரு. ருவன் ஜயசுந்தர அவர்கள், “நாம் பூரணமான மக்களாக மாறுவதற்கு ஒவ்வொருவரும் அடுத்தவர்களின் மொழியை அறிந்திருக்க வேண்டும்” என கூறியதோடு, இதனாலேயே அரசாங்க உத்தியோகத்தர்கள் 150 மணித்தியால இரண்டாம் மொழிக் கற்றலைக் கட்டாயமாகப் பூர்த்திசெய்திருக்க வேண்டுமென சுட்டிக்காட்டினார். மேலும், சிங்கள மொழி பேசும் மக்கள் தமிழ் மொழியைக் கற்க முன்வர வேண்டும். ஏனெனில், “அது எமது உள்ளங்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு மொழி” என வலியுறுத்தினார்.

அடுத்து, தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் செயற்றிட்டப் பணிப்பாளர் திரு. மைகல் எம்ப்லெம் அவர்கள், இரு மொழிக் கொள்கையை அமுல்படுத்துவதில் கனடா நாட்டின் அனுபவங்கள் தொடர்பாக தனது அவதானங்களை எடுத்துரைத்து இரு தேசிய மொழிகளின் முக்கியத்துவத்தினை புரிந்துகொள்ள கனடா நாட்டு மக்களுக்கு நீண்டகாலம் எடுத்ததென கூறினார். என்றாலும், இரண்டாம் மொழியைக் கற்பதென்பது அதிகமான பயன்களை பெற்றுத்தரும் என உறுதிப்படுத்தியோடு “மொழி என்பது வெறுமனே ஒரு தொடர்பாடல் அல்ல – மாறாக அது உறவுகளைக் கட்டியெழுப்பும் ஒரு ஊடகம்” என வலியுறுத்தினார்.

மேலும், திரு. எம்ப்லெம் அவர்கள், குருணாகலை மக்கள் தமது இரண்டாம் மொழித் தேர்ச்சியை தொடர்ந்தேர்ச்சியாக விருத்தி செய்ய வேண்டுமென்றும், அப்போது அவர்களுக்கு தமது அயலில் வசிக்கும் தமிழ் பேசும் மக்களுடன் தமது வளமான கலாச்சார விழுமியங்களைப் பகிர்ந்துகொள்ள முடியுமென தெரிவித்தார்.

மனித உரிமைகள் அபிவிருத்திக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. பிரேமசிரி கமகே அவர்கள், குருணாகலை மக்களை இரு தேசிய மொழிகளையும் அறிந்த, இரு இனங்களின் கலாச்சார மற்றும் இதர விழுமியங்களை அங்கீகரிக்கும் ஒரு சமூகமாக கட்டியெழுப்பும் நோக்கில் அவர்களை வலுவூட்டுவதற்காக கனடா அரசாங்கத்திற்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். 2019 உயிர்நீத்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து குருணாகலையை அதிரவைத்த இன முரண்பாட்டினை ஞாபகப்படுத்தி உரையாற்றிய திரு. பிரேமசிரி அவர்கள் தேசிய நல்லிணக்கத்தினைக் கட்டியெழுப்புவதில் மொழியும் கலாச்சாரமும் ஆற்றிய வகிபாகத்தினை வலியுறுத்தினார். எனவே, “எதிர்காலங்களில் இவ்வாறான வன்முறைகளைத் தவிர்ப்பதற்கு எங்களுக்கு மொழியும் கலாச்சாரமும் அவசியம்” என மேலும் உறுதிப்படுத்தினார்.

2019 ஆம் ஆண்டின் பேரழிவு மற்றும் கலவரத்தின் பிரதிபலிப்புக்களை எடுத்துக்காட்டி உரையாற்றிய திரு. பிரேமசிரி அவர்கள், “எமது பகிரப்பட்ட மனிதநேயத்தை பிரதிபலிக்கும் அதனை முழுமைப்படுத்தும் ஒரு சமாதான சமூகத்தினைக் கட்டியெழுப்புவோம்” என அறைகூவல் விடுத்தார். அவ் உருக்கமான வேண்டுகோளுக்கு துலங்கல் காண்பிக்கும் விதத்தில் முழு மண்டபத்திலும் இவ்வாறான ஒரு சமூகத்தினைக் கட்டியெழுப்புவதற்கு நாம் ஒன்றிணைந்து செயற்படுவோம்” என எதிரொலித்தது. நாம் இருளை தொடர்ந்து சபித்துக்கொண்டிருக்காமல் மொழி எனும் விளக்கை ஏற்றிடுவோம்.

அடுத்து இந் நிகழ்வில் உரையாற்றிய குருணாகலை மாவட்டச் செயலக உத்தியோகத்தர் செல்வி. டீ.எம் சமந்தி அவர்கள், கனடா அரசாங்கம், தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் மற்றும் மனித உரிமைகள் அபிவிருத்திக்கான மத்திய நிலையம் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கும் 3 வருடகால செயற்றிட்டத்திலிருந்து பயனடைந்த 20 பிரதேச செயலகங்கள் சார்பாக தனது நன்றிகளைத் தெரிவித்தார். குறித்த செயற்றிட்டத்திற்கு நிதியுதவி வழங்கியமைக்காகவும் தேசிய மொழிகள் நிதியத்தினூடாக தொழிநுட்ப உதவிகளை வழங்கியமைக்காகவும் நன்றி தெரிவித்ததோடு ”குருணாகலைக்கான உங்களின் ஒத்துழைப்பு விலைமதிப்பற்றது” என வலியுறுத்தினார்.

மேலும், இக் கற்கைநெறிகளில் பங்கேற்ற பங்குபற்றுநர்களை வரவேற்று உரையாற்றிய செல்வி. சமந்தி அவர்கள், இரண்டாம் மொழியைக் கற்பதற்கான அவர்களின் அர்ப்பணிப்புக்காக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் மொழித் தேர்ச்சியினை மேலும் வளர்த்துக்கொள்ளுமாறு ஊக்குவித்தார். அத்துடன், “எமது நாடு மிகவும் சிறியதாக இருந்தாலும் எமது மக்களின் பல்வகைமை எனும்சிறந்த பலத்தைக்கொண்டு இத் தேசத்தினைக் கட்டியெழுப்புவது நடைமுறைச்சாத்தியமானது” என உறுதிபட கூறினாலும், “நல்லிணக்கம், மன்னிப்பு, சகவாழ்வு ஆகியன  பரீட்சமற்ற சொற்களாக இருப்பதால் அது சற்று கடினமானது” என சுட்டிக்காட்டினார். “இவ் வகுப்புக்களில் நீங்கள் கற்ற அறிவை மேலும் விருத்திசெய்து கொள்ள வேண்டும். உங்களின் எண்ணங்களை மேலும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். எமது கலாச்சாரங்களில் பெறுமதியானவற்றை இணைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு நீங்கள் ஒரு விளக்காக இருந்துகொள்ள வேண்டும்” போன்ற அவளது வார்த்தைகள் அவர்களுக்கு பெரும் சவாலாக இருந்தன.

அர்த்தமுள்ள மாற்றத்தினை நோக்கிய பயணத்தில் குருணாகலை மக்கள் பலமானவர்கள் என்றும் அவர்கள் மாற்றத்தின் முகவர்கள் என்றும் உறுதியுடன் உரையாற்றிய சமந்தி, “நீங்கள் முக்கியமானவர்கள், உங்கள் ஒத்துழைப்பு முக்கியமானது” என்று மேலும் வலியுறுத்தினார்.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் அதன் தேசிய மொழிகள் நிதியத்தினூடாக மனித உரிமைகள் அபிவிருத்திக்கான மத்திய நிலையம் போன்ற 28 சிவில் சமூக நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கின்றது. அவ்வகையில் குறித்த சிவில் சமூக நிறுவனங்கள் நாடு முழுவதிலும் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வைக் கட்டியெழுப்புதல் மற்றும் இரண்டாம் மொழிக் கற்றலை மேம்படுத்துதல் ஆகிய வேலைத்திட்டங்களினூடாக பல்வேறு இனக் குழுக்களுக்கு மத்தியில் நல்லிணக்கம், புரிந்துணர்வு மற்றும் இணைப்பினை மேம்படுத்தும் விதத்தில்   செயற்படுகின்றன. எனவே, இரண்டாம் மொழிக் கற்றலினூடாக கிராமப்புறச் சமூகங்களை பாரபட்சமின்றி உள்ளடக்கி ஒருவருக்கொருவர் தொடர்புபடுகின்றவர்களாக எவ்வாறு வலுவூட்டலாம் என்பதற்கு மனித உரிமைகள் அபிவிருத்திக்கான மத்திய நிலையலத்தின் இரண்டாம் மொழிக் கற்றல் வகுப்புக்களின் வெற்றி சிறந்த சான்றாகும்.

Spread the love