கனடா அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் இணைந்து தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் இறுதிச் செயற்குழுக் கூட்டத்தினை நடாத்தியது.

இலங்கையின் அரசகரும மொழிகள் கொள்கையைப் பயனுறுதியுடன் நடைமுறைப்படுத்துவதற்கான கூட்டொத்துழைப்பினைப் பலப்படுத்துதல்.   

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் மொழித்துறையில் ஈடுபாடுள்ள  கரிசணையாளர்கள் மற்றும் கொள்கையாக்கத்தில் அதிகாரமுள்ளவர்களை அழைத்து நடாத்திய இறுதிச் செயற்றிட்டக் குழுக் கூட்டம் பொது நிருவாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவின் மேலதிக செயலாளர் திரு. அநுராதா விஜேகோன் மற்றும் இலங்கையில் அமைந்துள்ள கனடா தூதுவராலயத்தின் அபிவிருத்திப் பிரிவின் தலைவர், மற்றும் ஆலோசகர் அம்மணி லின்டாஎரிக்ஸ் ஆகியோரின் இணைத்தலைமையில் இலங்கை அரசாங்கம் மற்றும் கனடா அரசாங்கத்தின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இடம்பெற்றது.தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் கூட்டாளி நிறுவனங்களான தேசிய மொழிகள் பிரிவு, அரசகரும மொழிகள் ஆணைக்குழு, அரசகரும மொழிகள் திணைக்களம், தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து இந்நிகழ்வினை சிறப்பித்ததுடன், செயற்றிட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களம் மற்றும் வெளி வளங்கள் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் செயற்றிட்டப் பணிப்பாளர் திரு. மைகல் எம்ப்லெம் அவர்கள் தனது வரவேற்புரையில், இக் கூட்டமானது செயற்றிட்டத்தின் வெற்றிகளையும் 2022 ஆம் ஆண்டின் இறுதி வரையில் அதன் அடைவுகளையும் மீளாய்வு செய்வதற்கும் இச் செயற்றிட்டத்தின் இறுதி ஏழு மாதங்களுக்கான செயற்பாட்டுத் திட்டத்திற்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளவும் சிறந்த வாய்ப்பாக இருக்குமென குறிப்பிட்டார். மேலும், அவர் “கூட்டாளி நிறுவனங்களுக்கு மத்தியிலான புரிந்துணர்வு இச் செயற்றிட்டத்தின் வெற்றிக்கும் கணிசமான அடைவுகளுக்கும் துணைபுரிந்தது” என கூட்டாளி நிறுவனங்களுக்கு மத்தியில் ஏற்படுத்தப்பட்ட வலுவான உறவுகளைப் பற்றி குறிப்பிடும் போது குறிப்பிட்டார்.

திரு. விஜேகோன் அவர்கள் தனது அங்குரார்ப்பண உரையில், தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் ஒத்துழைப்புடன் மொழித்துறை அடைந்த ஒரு சில அடைவுகளை கீழ்வருமாறு பட்டியலிட்டு திரு. எம்ப்லெம் அவர்களின் கூற்றுக்கு வலுசேர்த்தார்.

  • அரசகரும மொழிகள் கொள்கை அமுல்படுத்தல் மூலோபாய பெறுபேற்றுச் சட்டகம்.
  • தேசிய மொழிகள் பிரிவுக்கான மத்திய கால மற்றும் நீண்டகால செயற்பாட்டுத் திட்டம்.
  • அரசகரும மொழிகள் திணைக்களத்திற்கான மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்பு முகாமைத்துவத் திட்டம்.
  • தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கான முகாமைத்துவத் திட்டம்.
  • மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் உரைபெயர்ப்பாளர்களுக்கான ஆலோசனைக் குழு.
  • மொழிபெயர்ப்பில் கலைமானிப் பட்டத்தினை வழங்கும் விடயத்தில் நான்கு அரச பல்கலைக்கழகங்களுக்கு உதவுதல்.
  • 1956 அழைப்பு மையத்தினை “message hub and life-line’ ஆக மீண்டும் செயற்படுத்தி அதன் சேவைகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை.
  • மொழித் திட்டமிடற் செயன்முறையை பலப்படுத்துவதற்காக 76 அரச நிறுவனங்களுடன் பிரதேச, மாகாண மற்றும் தேசிய மட்டங்களென வெவ்வேறு நிர்வாக மட்டங்களில் செயற்பட்டமை.

மேலும், திரு. விஜேகோன் அவர்கள், இலங்கைப் பிரஜைகளின் மொழி உரிமைகளை மேம்படுத்தி அதனை பாதுகாப்பதற்கு அமைச்சு தேவையான ஆதரவினையும் வழிகாட்டலையும் தொடர்ந்து வழங்குமென செயற்றிட்டச் செயற்குழு அங்கத்தவர்களுக்கு உத்தரவாதமளித்ததுடன் அரச துறையில் மொழி உரிமைகள் பற்றி மேம்படுத்தப்பட்டட உரிமையுணர்வினை ஆழப்பதிய வைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்தினார். அத்துடன், நாடு முழுவதிலும் இலங்கையின் அரசகரும மொழிகள் கொள்கையை வினைத்திறனுடன் அமுல்படுத்துவதற்காக தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தினூடாக கனடா அரசாங்கம் நல்கிய ஒத்துழைப்புக்கு தனது ஆழந்த நன்றிகளைத் தெரிவித்தார்.

அம்மணி. எரிக்ஸ் அவர்கள், மேலதிக செயலாளர் மற்றும் செயற்றிட்டச் செயற்குழு அங்கத்தவர்களை  வரவேற்று  கோவிட் தொற்றுநோய், அதே போன்று பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளால் நாடு எதிர்கொண்ட சமாளிக்க முடியாத சவால்களிலும் இலங்கைப் பிரஜைகளின் மொழி உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அவர்கள் மேற்கொண்ட இணைந்த முயற்சிகளுக்காக தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டார். மேலும், அரசகரும மொழிகள் கொள்கையை உறுதியாக அமுல்படுத்துவதனூடாக பெண்கள் மற்றும் ஆண்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்த முடியுமென்பதே கனடா அரசாங்கத்தின் உறுதியான நம்பிக்கை என அவர் கூறினார். அதாவது, அரச சேவைகளின் வழங்கலை மேம்படுத்தி, அனைவரையும் ஆதரித்து அதிகளவு உள்ளடக்குவதன் மூலம் இறுதியில் வறுமையைக் குறைத்து வாய்ப்புக்களை வழங்கி இவ் இலக்கினை நோக்கி நகரலாம் என தனது கருத்துக்களை அவர் பகிர்ந்துகொண்டார்.

கனடா அரசாங்கம் இலங்கையில் நடைமுறைப்படுத்துகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் முதன்மையான செயற்றிட்டங்களுள் ஒன்றே தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டமாகும் என சுட்டிக்காட்டிய அம்மணி. எரிக்ஸ் அவர்கள், அது மொழி உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்துவதில் கனடாவின் அனுபவங்களை பிரதிபலிக்கச் செய்வதற்கு ஒரு சந்தர்ப்பமாக இருந்ததாக கூறினார். மேலும், தொழிநுட்பப் பரிமாறல்கள் இலங்கையின் அரசகரும மொழிகள் கொள்கையின் அமுல்படுத்தலைப் பலப்படுத்துவதற்கான தூண்டுதலாக இருக்குமென நம்பிக்கை தெரிவித்தார். கனடா மற்றும் இலங்கையின் இரு தரப்பு உறவுகளைத் தொடர்ந்து பலப்படுத்துவதற்காக மிகவும் முக்கியமானதொரு பங்களிப்பினை மேற்கொள்ள முடியுமான துறையாக நாம் மொழித்துறையைக் கருதுவதால் இச்செயற்றிட்டத்திற்கு நிதியளிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும், பாலின சமத்துவ எண்ணக்கருவினை இணைத்துக்கொண்டமை இச் செயற்றிட்டத்தின் வெற்றிக்கு மிகவும் பிரதானமானது என கோடிட்டுக்காட்டியதோடு, அதுவே தேசிய மொழிகள் நிதியத்தின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்தது என்றும் குறிப்பிட்டார். அத்துடன், தேசிய மொழிகள் நிதியத்தினால் பங்காளிகளாக இணைத்துக்கொண்ட சிவில் சமூக நிறுவனங்களின் நடவடிக்கைகளினூடாக கீழ் மட்ட சமூகங்களில் அதிகமான பயனாளிகள் நேரடியாகவே பயனடைந்துள்ளனர் என அம்மணி. எரிக்ஸ சுட்டிக்காட்டி அதற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அங்குரார்ப்பண உரைகளைத் தொடர்ந்து தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்ட அணியினால் செய்த முன்னளிப்புக்களில் டிசம்பர் 22 வரையிலான செயற்றிட்டத்தின் முக்கிய மைல்கற்கள் தொடர்பான ஒரு பார்வை மாத்திரமன்றி இச் செயற்றிட்டம் 2023 ஜுலை மாதத்தில் நிறைவடைய முன்பு திட்டமிட்டுள்ள முக்கியமான நடவடிக்கைகள் தொடர்பில் ஒரு கண்ணோட்டமும் முன்வைக்கப்பட்டது. தேசிய மொழிகள் பிரிவு மற்றும் அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை பிரதிச் செயற்றிட்டப் பணிப்பாளர் திரு. திருநாவுக்கரசு அவர்களும், அரசகரும மொழிகள் திணைக்களம், தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் பல்கலைக்கழகங்களின் நடவடிக்கைகளை மொழிக்கொள்கை மற்றும் கற்பித்தல் நிபுணத்துவ ஆலோசகர் திரு. நியாஸ் ரஸ்கின் அவர்களும் முன்வைத்தனர். அம்மணி. சாமா ராஜகருணா (உள்நாட்டு பாலின சமத்துவ நிபணர்) அவர்கள் பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டலுடன் தொடர்புடைய மைல்கற்கள் மற்றும் திட்டங்களை முன்வைத்து உரையாற்றினார். இந்த முன்வைப்புக்களைத் தொடர்ந்து நடாத்தப்பட்ட திறந்த கலந்துரையாடலில் செயற்றிட்டச் செயற்குழு அங்கத்தவர்களுக்கு தமது கருத்துக்கள், அனுபவங்கள் மற்றும் எண்ணங்களை பகிர்வதற்கான வாய்பு வழங்கப்பட்டது.

அம்மணி. எரிக்ஸ் அவர்கள் தனது அங்குரார்ப்பண உரையில் எடுத்துரைத்தது போன்று தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் தொலைநோக்கு யாதெனில் “ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இரு மொழிச் சேவைகள் அதிகளவு கிடைப்பதும் இலங்கை மக்களுக்கு மத்தியில் மொழி உரிமைகள் பற்றி அதிக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதுமாகும்”. இவ் இலக்கினை எய்தும் நோக்கில் செயற்றிட்டச் செயற்குழு அங்கத்தவர்கள் இலங்கையில் அரசகரும மொழிகள் கொள்கையின் வினைத்திறன்மிகு அமுலாக்கத்தினை உறுதிப்படுத்துவதற்கு ஒன்றிணைந்து கருமமாற்றுவார்கள்.

Spread the love