மொழி உரிமைகளில் பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டலை ஊக்குவித்தல்.

மொழித் துறை பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் (GEWE) குவிமையக் குழுக்களின் (Focal Points) இரண்டாவது வலையமைப்பாக்கல் கூட்டம்.

பொது நிருவாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவு தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்துடன் (NLEAP) இணைந்து மொழித் துறை GEWE குவிமையக் குழுக்களின் இரண்டாவது வலையமைப்பாக்கல் கூட்டத்தினை நடாத்தியது. தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் (NLEAP) பாலின விஷேட நிபுணர் சாமா ராஜகருண அவர்களின் நெறிப்படுத்தலில் தேசிய மொழிகள் பிரிவு (NLD), அரசகரும மொழிகள் ஆணைக்குழு (OLC), அரசகரும மொழிகள் திணைக்களம் (DOL) மற்றும் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (NILET) ஆகிய நிறுவனங்களின் GEWE குவிமையக் குழுக்களின் பங்கேற்புடன் இக்கூட்டம் இடம்பெற்றது.

தேசிய மொழிகள் பிரிவின் சதுரி ஜயதிலக அவர்கள் குவிமையக் குழுக்களை  வரவேற்று நிறுவனங்களில் தமது வகிபாகங்களை வினைத்துறனுடன் நிறுவனமயப்படுத்தும் போதும் அவற்றை நடைமுறைப்படுத்தும் போதும் கடைப்பிடிக்க வேண்டிய படிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவானதொரு விளக்கத்தினை இந்த வலையமைப்பாக்கல் அமர்வு வழங்குமென கோடிட்டுக் காட்டினார்.

அம்மணி ராஜகருணா அவர்கள் கூட்டத்தின் குறிக்கோள்களை குறிப்பிட்டுவிட்டு முதலாவது வலையமைப்பாக்கல் கூட்டத்தில் அரசகரும மொழிகள் கொள்கையின் அமுலாக்கல் மூலோபயம், மொழி உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கையில் GEWE  எண்ணக்கருவினை ஊக்குவிப்பது தொடர்பான கொள்கைச் சட்டத்துக்கான அறிமுகம் மற்றும் GEWE குவிமையக் குழுக்களுக்கான குறிப்பீட்டு நியதிகள் போன்ற முக்கிய அம்சங்கள் கலந்துரையாடப்பட்டதாக சுட்டிக்காட்டினார். இரண்டாவது வலையமைப்பாக்கல் கூட்டத்தில் பாலின குவிமையக் குழுக்களின் வகிபாகத்தினை எவ்வாறு நிறுவனமயப்படுத்துவது, இணையவழி பாலின அடிப்படையிலான பகுப்பாய்வுப் (Gender Based Analysis Plus – GBA+) பயிற்சி வழிகாட்டி, நேரடிப் பங்கேற்புடன் இடம்பெறும் பாலின அடிப்படையிலான பகுப்பாய்வுச் செயலமர்வுக்கான திகதிகள், மகளிர் தினத்திற்கான செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தொழிநுட்பக் கருத்துப் பரிமாற்றல் (TEM) நிகழ்வில் கருத்திற்கொள்ளப்பட வேண்டிய பகுதிகள் போன்ற பல்வேறு அம்சங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என விளக்கினார்.

GEWE குவிமையக் குழுக்கள் GBA+ இணையவழி பயிற்சி வழிகாட்டல் தொடர்பில் சாதகமான கருத்துக்களைத் தெரிவித்ததுடன் அது GEWE மற்றும் GBA பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கு சிறந்ததொரு வழிகாட்டியாக இருக்கும் என கருதி தமது சக உத்தியோகத்தர்களுக்கு மத்தியில் அதனை எவ்வாறு பரவலடையச் செய்யலாமென அறிந்துகொள்ள அவர்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள்.  அடுத்து இடம்பெறவுள்ள இரண்டு வலையமைப்பாக்கல் கூட்டங்களுக்கும் தேசிய மொழிகள் பிரிவு தலைமை தாங்கும் என அங்கு உடன்பட்டது. மேலும், GEWE எண்ணக்கருவினை தமது நிறுவனங்களில் நிறுவனமயப்படுத்துவதற்கு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் குவிமையக் குழுக்கள் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். அத்துடன், நிறுவனங்களில் ஆற்ற வேண்டிய புதிய வகிபாகங்களை உறுதிப்படுத்தும் கடிதங்கள், தொடர்புடைய ஆவணங்களில் எடுத்துரைத்துள்ள கடமைப் பொறுப்புக்களை மாற்றுதல், பாலின எண்ணக்கருவினை பிரதிபலிக்கும் விதத்தில் தரவுத் தளங்களை பேணுதலும் அது தொடர்பான பயிற்சிகளும் மற்றும் குவிமையக் குழுக்களின் வகிபாகம் தொடர்பான நிலைபேறான தன்மையை உறுதிப்படுத்துதல் போன்ற பல விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன.

இங்கு உரையாற்றிய தேசிய மொழிகள் பிரிவின் மேலதிக செயலாளர் அநுராத விஜேகோன் அவர்கள், GEWE எண்ணக்கருவினை நிறுவனமயப்படுத்தும் மூலோபாயத்தினை நாடு தழுவிய முழுமையான அணுகுமுறையாக ஊக்குவிக்க வேண்டுமென வலியுறுத்தினார். மேலும், GEWE பற்றிய விழிப்புணர்வு அதிகமானோரை சென்றடையும் விதத்தில் அதனை எல்லாத்துறைகளிலும் உள்வாங்கி பரவலடையச் செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தினை கோடிட்டுக்காட்டிய அவர், அரச துறையினுள் பாலின குவிமையக் குழுக்களுடன் சம்பந்தப்படுகின்ற பெரும்பாலான நிறுவனங்களுடன் வலையமைப்பினை ஏற்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தினைச் சுட்டிக்காட்டினார். “நாம் எமது நிறுவனங்களில் GEWE எண்ணக்கருவினை எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறோம்” என்ற வினாவினைத் தொடுத்து குவிமையக் குழுக்களை சவாலுக்குட்படுத்தியதுடன், “உங்களுக்கு மாற்றம் வேண்டுமெனின் அதனை உங்களிலேயே ஏற்படுத்த வேண்டுமென்பதுடன் நாம் ஊக்குவிக்கும் மாற்றத்திற்கு நாமே முன்மாதிரியாக இருக்க வேண்டும்” என்றும் சுட்டிக்காட்டினார். மேலதிக செயலாளரின் கவனத்தை ஈர்த்த மற்றொரு அம்சம் யாதெனில் லெஸ்பியன், ஓரினச்சேர்க்கை, இருபாலினம், திருநங்கை மற்றும் வினோதமான சமூக (LGBTQ) அங்கத்தவர்களுக்கு எவ்வாறு சேவையாற்றலாம் என்பதாகும். எனவே, கனடாவுக்கான அடுத்த தொழிநுட்பக் கருத்துப் பரிமாற்றல் விஜயத்தின் போது கனடா எவ்வாறு LGBTQ சமூகத்தின் விடயங்களை கையாள்கின்றது என அவதானித்து அதனை எவ்வாறு இலங்கைக்கு பொருத்தமாக்கிக்கொள்ளலாம் என ஆராய வேண்டுமென சுட்டிக்காட்டினார். பாலின அடையாளம் அல்லது பாலியல் விருப்பு வெறுப்புக்கள் என்பவற்றைக் கருத்திற்கொள்ளாது அனைவருக்கும் சமமான சேவையை உறுதிப்படுத்துவது அரச உத்தியோகத்தர்களின் பொறுப்பு என்று மேலதிக செயலாளர் சுட்டிக்காட்டினார்.

NLEAP நிறுவனத்தின் செயற்றிட்டப் பணிப்பாளர் மைக்கல் எம்ப்லம் அவர்கள் இக் குவிமையக் குழுக்களின் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்பினை சிலாகித்து உரையாற்றினார். அவர்களின் வகிபாகங்களை தமது நிறுவனங்களில் நிறுவனமயப்படுத்துவதற்குத் தேவையான ஆற்றலைக் கட்டியெழுப்புவதற்காக NLEAP இன் GEWE குவிமையக் குழு பூரண ஒத்துழைப்பினை வழங்குமென உறுதிப்படுத்தினார்.

மார்ச் மாதத்தில் நடைபெறவேண்டிய குவிமையக் குழுக்களின் அடுத்த கூட்டம் நேரடி GBA Plus பயிற்சியாக இடம்பெறும் என்ற தீர்மானத்துடன் இக்கூட்டம் நிறைவுற்றது.

Spread the love