
NLEAP நிறுவனம், தேசிய மொழிகள் நிதியத்துடன் (NLF) இணைந்து பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துகின்றது.
“ கனடா அரசாங்கம் எமது பொறுப்பு தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எல்லா நேரங்களிலும் தொடர்ச்சியாக போசாக்கு நிறைந்த உணவு கிடைப்பதை உறுதிப்படுத்தும்”.
ஓய்வுநிலை. மதிப்பிற்குரிய. ஜஸ்டின் ட்ருடேவு, கனடா பிரதமர்.
இலங்கை 2022 ஆம் ஆண்டில் முகங்கொடுத்த பொருளாதார நெருக்கடியினால் மக்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்தது மாத்திரமன்றி பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதால் பெரும்பான்மையான மக்கள் தமது அன்றாட உணவுத் தேவைகளை பூர்த்திசெய்துகொள்ள பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுப்பதுடன் அதிகமான குடும்பங்களின் நல்வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், இலங்கையின் பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது பிள்ளைகளின் தினசரி உணவு உட்கொள்ளலை நிர்ப்பந்ததம் காரணமாக குறைத்துள்ளதாகவும் பெரும்பாலான பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு உணவூட்டுவதற்கு போதிய உணவு இல்லை என்ற காரணத்தினால் தாம் ஏற்கனவே எடுத்துவந்த சில உணவு வேளைகளை விட்டுவிடுவதாகவும் Save the children அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, இவ்வாறு உணவு நெருக்கடியினால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காகவே Alinea – NLEAP உணவு நிவாரண முன்னெடுப்பு திட்டமிடப்பட்டுள்ளது. கனடா அரசாங்கம் NLEAP செயற்றிட்டத்தினூடாக இலங்கையின் அரசகரும மொழிகள் கொள்கையின் வினைத்திறன்மிக்க அமுலாக்கத்திற்கு தனது ஒத்துழைப்புக்களை வழங்கிக்கொண்டிருந்தாலும், கிட்டத்தட்ட 33 சதவீமான குடும்பங்களைப் பாதித்துள்ள தற்போதைய மிகவும் இக்கட்டான நிலைமையைக் கருத்திற்கொண்டு இலங்கை மக்களின் அவசர மற்றும் உடனடி உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கும் அதன் நேசக் கரத்தை நீட்டுகின்றது.
கனடா அரசாங்கம் முழு உலகிலும் பாலின உணர்திறன் மனிதாபிமான உதவிகளை நடைமுறைப்படுத்துவதற்காக சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கு மேற்பட்ட தொகையை 2020 இலிருந்து ஒதுக்கியுள்ளது. Alinea International நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்துகின்ற Alinea – NLEAP உணவு நிவாரண நடவடிக்கையானது உலகளாவிய உணவு மற்றும் ஊட்டச்சத்துத் தேவைகளுக்கு தீர்வுகாண்பதற்காக கனடா அரசாங்கம் மேற்கொள்ளும் தொடர்ந்தேர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாகும்.
இந்த உணவு நிவாரண நடவடிக்கையானது தீவிர பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளுக்கு மாத்திரமன்று தமது பிள்ளைகளுக்கு உணவூட்ட வேண்டியிருப்பதால் தமக்கு போதியளவு உணவு இல்லாது பசியுடன் இருக்கும் பெற்றோருக்கும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. உணவுப் பாதுகாப்பின்மையினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்காக NLEAP நிறுவனம் தெரிவுசெய்யப்பட்ட அதன் NLF கூட்டாளி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதுடன், NLF கூட்டாளி நிறுவனங்கள் பிரதேசத்தில் அமைந்துள்ள அரச நிறுவனங்களுடன் இணைந்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பயனாளர்களைத் தெரிவுசெய்கின்றன.